MS Dhoni PTI
T20

“தோனி ரசிகர்களை மகிழ்விக்கலாம்.. ஆனால் மும்பைதான் கடைசியில்...” - பதான் சகோதரர்கள் சொல்லும் கணக்கு!

“தோனி தனது அதிரடியால் தங்களை மகிழ்விக்க வேண்டும் என்று மும்பை ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால் கடைசியில் மும்பை அணிதான் வெல்ல வேண்டும் என்றே விரும்புவார்கள்”.

சங்கீதா

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் நடப்பு ஐபிஎல் சீசனின் 12-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதுகின்றன. மற்ற அணிகள் மோதும் போட்டிகளை விட சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும்போது மட்டும் பாகிஸ்தான் - இந்தியா மோதுவது போன்ற ஒரு பரபரப்பு இருக்கும். அதனால்தான் ‘el clasico’ என்று இந்தப் போட்டி அழைக்கப்படுகிறது. அதாவது கடுமையான மோதல் (அதிக பார்வையாளர்கள்) இந்த இரு அணிகளுக்கும் இடையே இருக்கும். ஐபிஎல் தொடரில் மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மட்டுமே இதற்கு காரணம் இல்லை.

இரு அணியின் கேப்டன்களுக்கும், ரசிகர்கள் பலம் அதிகம் உள்ளதும் ஒரு காரணம். மேலும், ஐபிஎல்லில் அதிக புகழ்பெற்ற அணிகளாக இந்த இரு அணிகளுமே இதுவரை இருந்து வருகின்றன. அத்துடன், தங்களது சொந்த அணியை தாண்டி, அதாவது வார்த்தைப் போரில் கடுமையாக தாக்கிக் கொள்ளாமல், இரு அணிகளில் உள்ள ரசிகர்களுமே, எதிரணிக்கு ஆதரவு தருவதும் மற்றொரு காரணம் என்றும் கூறலாம்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டிக் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான யூசுப் பதான், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உரையாடலில் தெரிவித்துள்ளதாவது, “மகேந்திர சிங் தோனி தனது அதிரடி ஆட்டத்தால், தங்களை மகிழ்விக்க வேண்டும் என்று மும்பையில் உள்ள ரசிகர்கள் எப்போதும் நினைப்பார்கள், ஆனால், கடைசியில், மும்பை இந்தியன்ஸ் அணியே போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். மேலும், சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெல்வது கடினம்.

அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. ஏனெனில், 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை அணியும் வான்கடே மைதானத்தில் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை அணி 7 முறை வெற்றிபெற்றுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களை நாம் நம்பினால், இன்று நடக்கும் போட்டியிலும் மும்பை அணி வெற்றிபெற்று 2 புள்ளிகளை பெறும் வாய்ப்பு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், யூசுப் பதானின் சகோதரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான இர்ஃபான் பதான், இது தொடர்பாக கூறுகையில், “மும்பை மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகளிலிருந்து, ஒரு வெற்றியாளரரை தேர்வு செய்வது என்பது கடினமானது. எனினும், மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை சொந்த மைதானத்தில் விளையாடுவதால், இந்தப் போட்டியில் அவர்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கணித்துள்ளார்.

இதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசுகையில், இரு அணிகளும் தங்களது பந்துவீச்சாளர்களை திறம்பட செயல்பட வைக்க வேண்டும் என்றும், மேலும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படும் அணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், “கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எனது ஆலோசனை என்னவென்றால், தனக்குத்தானே அவர் எடுத்துக்கொண்ட அழுத்தத்தை விட்டுவிட வேண்டும். தனது இயல்பான விளையாட்டை விளையாடுவதற்கிடையே, தன்னையும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால், இன்று நடக்கும் சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற்று முதல் வெற்றியை பதிவுசெய்ய மும்பை அணி காத்திருக்கிறது. இதேபோல், சென்னை அணி, குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், லக்னோ அணியுடனானப் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இதனால் இன்று நடக்கும் போட்டியில், இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய சென்னை அணி காத்திருக்கிறது. அத்துடன், கடந்த 15-வது சீசனில் இரு அணிகளுமே புள்ளிப்பட்டியில் கடைசி இரண்டு இடங்களை பிடித்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்திய நிலையில், இந்த சீசனில், மும்பை அணி 6-வது கோப்பையை வெல்ல வேண்டும் என்றும், சென்னை அணி 5-வது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றும், அந்தந்த அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.