ind - pak - usa cricinfo
T20

“அடுத்த இலக்கு எங்களுக்கு இந்தியா தான்!” - பாகிஸ்தானை சொல்லி அடித்த அமெரிக்க கேப்டன்!

2024 டி20 உலகக்கோப்பையின் முதல் அதிர்ச்சி சம்பவமாக முதல்முறையாக டி20 உலகக்கோப்பையில் இடம்பிடித்த அமெரிக்கா அணி பலம் வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Rishan Vengai

டி20 உலகக்கோப்பையில் இதுவரை பல கத்துக்குட்டி அணிகள், கிரிக்கெட் பாரம்பரியமிக்க பெரிய நாடுகளை வீழ்த்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். அந்தப்பட்டியலில் “நெதர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்” முதலிய அணிகள் பல்வேறு சம்பவங்களை நிகழ்த்தி காட்டியுள்ளன.

அந்தவகையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் பெரிய அதிர்ச்சி சம்பவமாக, உலகக்கோப்பைகளை வென்று குவித்த ஒரு பாரம்பரியமிக்க கிரிக்கெட் நாடான பாகிஸ்தானை முதல்முறையாக எதிர்கொண்ட அமெரிக்கா அணி வீழ்த்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

shaheen afridi

இதில் கொடுமை என்னவென்றால், “ஷாஹீன் அப்ரிடி, அமீர், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா” முதலிய 4 உலகத்தர பந்துவீச்சாளர்களை அணியில் வைத்திருந்தது மட்டுமில்லாமல், சூப்பர் ஓவர் வரை சென்று மோசமான தோல்வியை சந்தித்துள்ளது பாகிஸ்தான் அணி.

சூப்பர் ஓவரில் வீழ்ந்த பாகிஸ்தான்..

2024 டி20 உலகக்கோப்பையின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட அமெரிக்கா அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது மட்டுமில்லாமல் ஒரு மிரட்டலான பவுலிங்கால் பாகிஸ்தானை 159 ரன்களில் கட்டுப்படுத்தியது.

shaheen afridi

160 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்கா அணியில், அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்கத்தில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய அமெரிக்க அணியை, கடைசி 5 ஓவரில் இழுத்துப்பிடித்த பாகிஸ்தான் அணி அபாரமான பவுலிங்கை வெளிப்படுத்தியது. கடைசி 6 பந்துக்கு 15 ரன்கள் தேவையென போட்டி மாற, இறுதிஓவரில் 1 பவுண்டரி 1 சிக்சரை பறக்கவிட்ட அமெரிக்க வீரர்கள் 14 ரன்கள் அடித்து போட்டியை சமனிற்கு எடுத்துச்சென்றனர்.

USA Beat Pakistan

எப்படியும் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தான் வெல்லப்போகிறது என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது, சூப்பர் ஓவரை வீசிய அனுபவம் வாய்ந்த அமீர் அழுத்தத்தில் அதிகப்படியான ஒய்டு பந்துகளை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 13 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்திய அமெரிக்கா அணி மிகப்பெரிய அப்செட்டை நிகழ்த்தியது.

பாகிஸ்தானை சொல்லி வீழ்த்திய அமெரிக்க கேப்டன்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பு பேசியிருந்த அமெரிக்க கேப்டன் மோனாங்க் பட்டேல், ”பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாங்கள் 30-40 நிமிடங்கள் நன்றாக செயல்பட்டுவிட்டால், அவர்களிடமிருந்து போட்டியை எடுத்துசென்றுவிடுவோம்” என்று கூறியிருந்தார்.

monank patel

தற்போது சொல்லியதை போலவே பாகிஸ்தானை வீழ்த்தி காட்டியது மட்டுமில்லாமல், முக்கியமான போட்டியில் அரைசதமடித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றுள்ளார் மோனாங்க் பட்டேல். சொன்னதை அப்படியே நிகழ்த்தி காட்டியதால் “அந்த ஊரு பாட் கம்மின்ஸ் போல” என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அடுத்த இலக்கு இந்தியா தான்..

இந்நிலையில் இந்திய ரசிகர்கள் அமெரிக்காவை புகழ்ந்துவரும் வேளையில், போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் மோனாங் பட்டேல் “தங்களுடைய அடுத்த இலக்கு இந்தியா தான்” என்று தெரிவித்துள்ளார்.

india

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் பெற்றவெற்றி மிகப்பெரிய சாதனையாகும். அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வெற்றியை எடுத்துக்கொள்ளாமல், அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாடப்போகும் அணிக்கு எதிராக மட்டும் கவனம் செலுத்தும். எங்களுடைய அடுத்த இலக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டி தான், அதற்கு பிறகு அயர்லாந்து, ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் கவனம் செலுத்துவோம்” என்று கூறியுள்ளார்.