RCB Women vs Men Team PT
T20

ஆர்சிபி அணியை அப்படி ஒப்பீடு செய்யாதீர்கள்! மகளிர் முன்னேற்றத்தை அசிங்கப்படுத்துவது நியாயமேயில்லை!

கிரிக்கெட் ரசிகர்கள் நாகரீகம் கருதியும், பெண்களின் முன்னேற்றத்தின் மேல் அக்கறை கொண்டும் இதுபோன்ற ஒப்பீடுகளை இனிவரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்.

Rajakannan K, ஜெ.நிவேதா

பெங்களூரு அணி நேற்று இரவு தோல்வியை தழுவியதில் இருந்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர்களுக்கு எதிரான ட்ரோல் பதிவுகள் தீயாக வலம் வந்து கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களே திக்குமுக்காடும் அளவிற்கு மீம்ஸ்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போதும், அந்தப் போட்டியில் தோனி ஆட்டமிழந்த போதும் விராட் கோலி உள்ளிட்ட ஆர்சிபி வீரர்கள் நடந்து கொண்டவிதம்தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

தற்போது சென்னை ரசிகர்கள் பலரும், பல விதமான கண்டெண்டுகளை உருவாக்கி ஆர்சிபி அணியை பங்கம் செய்து வருகிறார்கள். அவற்றில் சில கண்டெண்டுகள் நாகரீகமாக இருந்தாலும், சில கண்டெண்டுகள் எல்லை மீறும் வகையில் இருக்கின்றன. சோஷியல் மீடியா என்பதால் எவ்வித கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் இந்த எல்லை மீறலை தடுக்க வழியில்லாமல் உள்ளது.

ஆர்சிபி அணியை ட்ரோல் செய்வது அவர்களது உரிமைதான். ஆனால், குறிப்பிட்ட அந்த வார்த்தையை சொல்லி (நாகரிகம் கருதி இங்கே அந்த வார்த்தை தவிர்க்கப்பட்டுள்ளது) ஆர்சிபி-ன் மகளிர் அணியோடு ஒப்பிட்டு, பலரும் கமெண்ட் செய்துள்ளது உண்மையில் வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. அது மிகவும் ஆபத்தான கமெண்ட் என்பதை அறிந்தும் பலரும் அப்படி செய்கிறார்கள்.

RCB Men vs Women Team

ஆர்சிபி-ன் மகளிர் அணி நடப்பு ஆண்டு WPL கோப்பையை வென்றது. மகளிர் அணி கோப்பையை வென்றது முதலே, அவர்களை ஆடவர் ஆர்.சி.பி அணியோடு இணைத்து ட்ரோல்கள் இருந்துகொண்டேதான் வருகிறது. இதில் நேற்றையை போட்டிக்கு பிறகும் இந்த ஒப்பீடு தொடர்ந்தது.

உண்மையில் ஆர்சிபி ஆண்கள் அணியை கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பெண் வர்க்கத்தையே மோசமாக சித்தரிக்கிறார்கள்.

ஏன் மகளிர் அணி கோப்பை வென்றது அவ்வளவு ஏளனமான விஷயமா என்ன? இல்லை, பெண்கள் செய்த ஒன்றை ஆண்களால் செய்யமுடியாதது ஆண்களுக்கு அவமானத்துக்குரிய விஷயமா என்ன? பெண் செய்த எல்லாவற்றையும் ஆணும் செய்யவேண்டும்... இல்லையென்றால் ‘இதக்கூட உன்னால செய்ய முடிலயா; ஒரு பொண்ணுகூட செய்யுது’ என சொல்லி மட்டப்படுத்த முனைவதெல்லாம்.... என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற அச்சத்தை பெண்களுக்கு கொடுக்கிறது.

போயும் போயும் ‘போயும் போயும் பொம்பள பிள்ளைகிட்ட தோத்துட்டியே’ என சொல்லும் டிஜிட்டல் பூமர்களுக்கு மத்தியில் இந்த சமூகம் உள்ளது. நவீன உலகம் சென்று கொண்டிருக்கும் திசை தெரியாமல் பழைய உலகத்தில் இன்னும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
RCB Men vs Women Team

இயக்குநர் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் ஒரு வசனம் வரும். அதில் தன் மகனிடம் தாய், “நாங்க உங்க பேண்ட்-ஐ போட்றப்போ, எங்களுக்கு அது வசதியாதான் இருக்கு. சட்டையை போடறப்போகூட, 'நாங்களும் ஆம்பள சட்டையப்போட்ருக்கோம்னு சந்தோஷம்தான் பட்றோம். உங்க உள்ளாடையை துவைக்குறப்போகூட, எங்களுக்கு அசிங்கமா இருந்ததில்லையே. ஆனா, உங்களுக்கு பொம்பளைங்க டிரெஸ்னா, அவமானமா இருக்குல்ல? நாங்களும் அவ்ளோ கேவலமான பிறவிங்களாகிட்டோமா? நைட்டிங்கறது, உங்க அம்மா - அண்ணிலாம் போட்ற டிரெஸ் தானேடா?” என்பார்.

பெண்களின் ஆடையை அணிந்துகொள் என ஆணை சொல்வது இங்கே அவமானம்.... பெண் ஜெயித்ததை ஆண் ஜெயிக்கவில்லை என்றால் ‘அவளே பண்றா, நீ பண்ணமாட்டிங்குற’ என கேட்பது ஒரு அவமானம்... ஹூம்... அவ்வளோ மோசமாகிட்டதா பெண்ணின் ஆடைகளும் சாதனைகளும்?! என்றே கேட்கத் தோன்றுகிறது.

பெண்கள் பலவிதமாக கட்டுப்பாடுகளுக்குள் பல நூற்றாண்டுகளாக சிக்கி இருந்து அதில் தற்போதுதான் வெளியே வந்து பல துறைகளில் சாதித்து வருகிறார்கள். விமானம் இயக்குவது முதல் அரசியலில் தலைமை பொறுப்புகள் வகிப்பது வரை மெல்ல மெல்ல சாதனைகள் செய்து வருகிறார்கள். இன்றும்கூட பெண் என்பதாலேயே பலருக்கும் திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதையெல்லாம் மீறி... திறமை அங்கீகரிக்கப்பட்டு கிரிக்கெட்டில் பெண்கள் ஜொலித்து வருகின்றனர். அப்படி போராடி பெண்கள் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது கொண்டாடப்பட வேண்டிய விஷயம்.

Women

ஆனால், ஆண்கள் ஆர்சிபி அணி மீதான வன்மத்தில் மோசமாக வார்த்தைகளை பயன்படுத்தி, இவர்களின் வெற்றியோடு சேர்த்து அதை கலாய்ப்பது உண்மையில் தவிர்க்கப்பட வேண்டிய, தடுக்கப்பட வேண்டிய விஷயம். ஆண்கள் அணி கோப்பையை வெல்ல வில்லை என்றால் நேரடியாக அவர்களை கேள்வி கேட்கலாம். அதைவிடுத்து இப்படியான ஒப்பீடு மகளிரின் சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்கும் வகையிலேயே இருக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் நாகரீகம் கருதியும், பெண்களின் முன்னேற்றத்தின் மேல் அக்கறை கொண்டும் இதுபோன்ற ஒப்பீடுகளை இனிவரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்.