பும்ரா Ricardo Mazalan
T20

பேட்ஸ்மேன்களைப் பந்தாடிய டாப் 10 பௌலர்கள் யார் யார்..?

Viyan

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது 2024 டி20 உலகக் கோப்பை தொடர். இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறது. இந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு சிக்ஸர்களும் ஃபோர்களும் நிறைந்த ஒரு உலகக் கோப்பையாக இது இருக்குமென்று எதிர்பார்த்திருக்க, பௌலர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தினார்கள். விக்கெட் மழை பொழிந்த இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 10 பௌலர்கள் யார்?

ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஆப்கானிஸ்தான்

Fazalhaq Farooqi

போட்டிகள் - 8
விக்கெட்டுகள் - 17
இந்த உலகக் கோப்பையின் தொடக்க போட்டிகளில் விக்கெட்டுகளை அள்ளிக்கொண்டே இருந்தார் ஃபரூக்கி. பவர்பிளே ஓவர்களில் அவரின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தானுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது. உகாண்டாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய அவர், அடுத்த போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்து அந்த அணி நியூசிலானதி வீழ்த்தவும், சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையவும் காரணமாக அமைந்தார். இவரது 9.41 என்ற சராசரி பும்ராவுகு அடுத்த சிறப்பு என்பது இவரது செயல்பாட்டை உணர்த்தும்.

ஆர்ஷ்தீப் சிங், இந்தியா

Arshdeep Singh

போட்டிகள் - 8
விக்கெட்டுகள் - 17
இந்த உலகக் கோப்பை தொடங்கும்போது அவர் அணியில் இருக்கவேண்டுமா என்ற கேள்விகள் இருந்தன. ஆனால், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தன் திறமையை நிரூபித்து பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் ஆர்ஷ்தீப். பவர்பிளே, டெத் என இரு கட்டத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இறுதிப் போட்டியில் அவர் வீசிய அந்த அற்புதமான 19வது ஓவர் அந்த 17 விக்கெட்டுகளை விடவும் முக்கியமானது.

ஜஸ்ப்ரித் பும்ரா, இந்தியா

Jasprit Bumrah

போட்டிகள் - 8
விக்கெட்டுகள் - 15
யார்க்கர்கள், இன்ஸ்விங்கர்கள், அவுட் ஸ்விங்கர்கள், பௌன்சர்கள், ஸ்லோ பால்கள், டாட் பால்கள், விக்கெட்டுகள்... என்ன இல்லை பும்ராவின் பந்துவீச்சில். இந்த உலகக் கோப்பையின் தொடர் நாயகன் ஒவ்விரு போட்டியிலும் இந்திய அணிக்குப் பெரும் தாக்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். வீசிய 178 பந்துகளில் 110 பந்துகளை டாட் பாலாக வீசியிருக்கிறார் இந்த மாயப் பந்துவீச்சாளர்.

ஆன்ரிக் நார்கியா, தென்னாப்பிரிக்கா

anrich nortje

போட்டிகள் - 9
விக்கெட்டுகள் - 15
காயம், ஃபார்ம் அவுட் என கடந்த சில மாதங்களாகவே நார்கியாவுக்கு எதுவும் சரியாகப் போகவில்லை. ஆனால், அமெரிக்காவில் கால் வைத்ததும் எல்லாம் மாறிவிட்டது. வெறித்தனமாகப் பந்துவீசிய அவர், தன் வேகத்தால் விக்கெட் மேல் விக்கெட் எடுத்தார். மிடில் ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்த மிகமுக்கியக் காரணமாக விளங்கிய அவர், ஆறுக்கும் குறைவான எகானமியில் பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.

ரஷீத் கான், ஆப்கானிஸ்தான்

rashid khan

போட்டிகள் - 8
விக்கெட்டுகள் - 14
ரஷீத் கானின் 14 விக்கெட்டுகளை கூறு போட்டுப் பார்த்தால், அவர் எப்படிப்பட்ட அஸ்திரமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு இருந்திருக்கிறார் என்பது புரியும். நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில் 3 விக்கெட்டுகள், இந்தியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகள், வங்கதேசத்துக்கு எதிரான அதிமுக்கிய சூப்பர் 8 போட்டியில் 4 விக்கெட்டுகள்... இதுவே ரஷீத் கான்! உலகக் கொப்பையில் பெரிய போட்டிகளில் தன் திறனை நிரூபித்திருக்கிறார் ரஷீத்.

ரிஷாத் ஹொசைன், வங்கதேசம்

ரிஷாத் ஹொசைன்

போட்டிகள் - 7
விக்கெட்டுகள் - 14
ஷகிப் அல் ஹசன் போன்ற ஒரு சீனியர் பௌலர் பெரிய தாக்கம் ஏற்படுத்தத் தடுமாறியபோது, தன் முதல் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். வங்கதேச கிரிக்கெட்டில் லெக் ஸ்பின்னும் இருக்கிறது என்பதையும் உலகக் கோப்பை அரங்கில் நிரூபித்திருக்கிறார் ரிஷாத். விளையாடிய 8 போட்டிகளில் ஏழில் விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது சாதாரண விஷயம் அல்ல.

நவீன் உல்-ஹக், ஆப்கானிஸ்தான்

Naveen-ul-Haq

போட்டிகள் - 8
விக்கெட்டுகள் - 13
இந்தப் பட்டியலில் மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரர். தன்னால் பவர்பிளேவில் புதிய பந்தை வைத்தும் மாயம் நிகழ்த்த முடியும் என்பதை இந்த உலகக் கோப்பையில் நிரூபித்திருக்கிறார் நவீன். ஸ்லோ பால்களை மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் அவர் ஆடுகளத்தின் தன்மை அறிந்து பௌன்ஸையும், ஸ்விங்கையும் தன்னுடைய ஆயுதமாகப் பயன்படுத்தினார். இந்த பவர்பிளே அவதாரம் அவரது ஐபிஎல் மதிப்பையும் இன்னும் உயர்த்தும்.

அல்சாரி ஜோசஃப், வெஸ்ட் இண்டீஸ்

alzarri joseph

போட்டிகள் - 7
விக்கெட்டுகள் - 13
இங்கிலாந்து தவிர்த்து அனைத்து அணிகளுக்கு எதிரான போட்டியிலும் அல்சாரி ஜோசஃப் விக்கெட் வீழ்த்தினார். நியூசிலாந்துக்கு எதிராக அவர் வீசிய அற்புத ஸ்பெல் அவரது சிறந்த டி20 பெர்ஃபாமன்ஸ்களில் ஒன்று. சொந்த மண்ணில் அவரது வேகம் தொடர்ந்து கைகொடுக்க, ஒவ்வொரு 12 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார் அல்சாரி.

ஆடம் ஜாம்பா, ஆஸ்திரேலியா

Adam zampa

போட்டிகள் - 7
விக்கெட்டுகள் - 13
சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் கொடுத்த ஜாம்பா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவின் வெற்றிக்கு இதுவே காரணமாக இருக்கும். ஜாம்பா சிறப்பாக பந்துவீசிய ஒவ்வொரு போட்டியிலும் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. மிடில் ஓவர்களில் எதிரணிகளை ஒட்டுமொத்தமாக சூறையாடியிருக்கிறது. மீண்டும் இந்தக் காலகட்டத்தின் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் தானும் ஒருவர் என்பதை ஜாம்பா நிரூபித்திருக்கிறார்.

ககிஸோ ரபாடா, தென்னாப்பிரிக்கா

Kagiso Rabada

போட்டிகள் - 9
விக்கெட்டுகள் - 13
பவர்பிளே, மிடில் ஓவர், டெத் என ஒவ்வொரு ஏரியாவிலுமே சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் ரபாடா. ஒரு சில போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும், முக்கியமான கட்டத்தில் முக்கியமான விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருக்கிறார். எய்டன் மார்க்ரமுக்கு தேவைப்படும்போதெல்லாம் விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்து உதவியிருக்கிறார்.