2003-ம் ஆண்டுவரை ஒரு நல்ல முன்னேற்றமடைந்த கிரிக்கெட் நாடாக இருந்த ஜிம்பாப்வே அணி, பல அரசியல் காரணங்களுக்காக 2003-லிருந்து வீரர்கள் வெளியேறிய பிறகு இன்னும் மீண்டுவர முடியாமல் இருந்துவருகிறது. 2003-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆடாத ஜிம்பாப்வே அணி, 2003 ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றியை பெறாமல், 2007 டி20 உலகக்கோப்பைக்குள் காலடி வைத்தது.
2007 டி20 உலகக்கோப்பையில் ”ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், ஆண்ட்ரோ சைமன்ஸ், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹோட்ஜ், பிராட் ஹேடின், பிரிட் லீ, நாதன் பிராக்கன், மிட்செல் ஜான்சன்” என பார்த்தாலே பயம்கொள்ளும் அளவிலான அணியை கொண்டிருந்த ஆஸ்திரேலியா, டி20 உலகக்கோப்பையை வெல்லும் என நூற்றுக்கு 90% கூறப்பட்டது.
ஆனால் அப்படிப்பட்ட மொரட்டு அணியை ஜிம்பாப்வே அசால்ட்டாக வீழ்த்தியது இன்றளவும் டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய அப்செட்டாக இருந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை தங்களுடைய அபாராமான பந்துவீச்சு மூலம் 138 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே அணி.
அதற்குபிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணி, நட்சத்திர பேட்ஸ்மேனான பிரெண்டன் டெய்லரின் அபாரமான ஆட்டத்தால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இறுதிஓவரில் 12 ரன்கள் தேவையிருக்க, 60 ரன்களுடன் கடைசிவரை களத்திலிருந்த டெய்லர் ஜிம்பாப்வே அணியும் பக்கம் போட்டியை முடித்துவைத்தார். வெற்றிக்கு சென்ற பந்து பவுண்டரி லைனை தொடுவதற்குள் ஒட்டுமொத்த ஜிம்பாப்வே டக் அவுட்டும் கிரவுண்டுக்குள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த ஓடிவந்தனர். டி20 உலகக்கோப்பையில் மறக்கவே முடியாத ஒரு போட்டியாக இது அமைந்தது.
"Home of Cricket" என கிரிக்கெட் பிறந்த இடமாக கொண்டாடப்படும் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நெதர்லாந்து அணி அப்படி ஒரு வெற்றியை பதிவுசெய்யும் என யாரும் கனவில் கூட எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
2009 டி20 உலகக்கோப்பையில் காலிங்வுட் தலைமையில், ”ரவி போபரா, லுக் ரைட், இயன் மோர்கன், அடில் ரசீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்” என பல நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியால், அந்த மாபெரும் அப்செட்டை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வுசெய்தாலும், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களம்கண்ட ரவி போபரா மற்றும் லுக் ரைட் இருவரும் ஒரு விக்கெட்டை கூட விட்டுக்கொடுக்காமல் 10 ஓவர்களுக்கு 100 ரன்களை குவித்து மிரட்டினர். அதுவரை எல்லாமே சரியாக சென்று கொண்டிருந்த போது தொடக்க வீரர்கள் இருவரையும் 46, 71 ரன்களில் வெளியேற்றிய டோஸ்கேட் ஆட்டத்தை நெதர்லாந்து பக்கம் திருப்பி எடுத்துவந்தார்.
102 ரன்னுக்கு 0 என இருந்த இங்கிலாந்து அணி, கடைசி 9 ஓவரில் வெறும் 60 ரன்களை மட்டுமே எடுத்து 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்களை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும், ஒட்டுமொத்த அணியாக சேர்ந்து போராடியது. டாம் டி க்ரூத் 49 ரன்கள் அடித்து பேட்டிங்கை வழிநடத்தினார், விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டி கடைசி 6 பந்துக்கு 7 ரன்கள் என மாறியது. ஸ்டூவர்ட் பிராட் இறுதிஒவரை சிறப்பாகவே வீசினாலும், கடைசி பந்தில் ஒரு பெரிய தவறை செய்தார்.
கடைசி 1 பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலை உருவாக, கடைசி பந்தில் சிங்கிளுக்கே சென்றனர் நெதர்லாந்து வீரர்கள். ஆனால் பந்தை பிடித்த ஸ்டூவர்ட் பிராட் ரன் அவுட் அடிக்க முயற்சி செய்ய, பந்து ஓவர்-துரோவாக மாறியது. முடிவில் ஒரு மோசமான தோல்வியை தனதாக்கி கொண்டது இங்கிலாந்து அணி. லார்ட்ஸில் வைத்து இங்கிலாந்தை சம்பவம் செய்த நெதர்லாந்து அணி, ஒரு வரலாற்று வெற்றியை தங்களின் பெயரில் எழுதியது.
வங்கதேச அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான மோதலானது 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்த வங்கதேச அணி இந்தியாவை தொடரிலிருந்தே வெளியேற்றிய போது தொடங்கியது. அதற்கு பிறகு எப்போது வங்கதேசத்திற்கு எதிராக போட்டி நடைபெற்றாலும், இந்திய வீரர்கள் அனல்பறக்க போட்டியில் பங்கேற்பார்கள். அதில் குறிப்பாக மகேந்திர சிங் தோனி எப்போதும் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சிதறடிப்பதில் எந்தவித கருணையும் காட்டியதே இல்லை.
2007 உலகக்கோப்பைக்கு பிறகு, 2016 உலகக்கோப்பையிலும் ஒரு மிகப்பெரிய அப்செட்டை தரும் இடத்தில் தான் வங்கதேச அணி இருந்தது. அந்தப்போட்டியில் எப்படியும் இந்திய அணி தோல்விதான் பெறப்போகிறது என்று நினைத்து தூங்க சென்ற இந்திய ரசிகர்களுக்கு, மறுநாள் காலையில் மகேந்திர சிங் தோனி பெரிய சர்ப்ரைஸை வைத்திருந்தார்.
கடந்த 2016 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 10 சுற்றில் முக்கியமான போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
147 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய வங்கதேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்கு அருகாமையில் போட்டியை எடுத்துச்சென்றது. 19 ஓவர் முடிவில் 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த வங்கதேச அணிக்கு, கடைசி 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் மஹமதுல்லா மற்றும் முஸ்ஃபிகூர் ரஹிம் இருவரும் இருக்க, கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார்.
முதல் பந்தில் மஹமதுல்லா 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளில் 2 பவுண்டரிகளை விரட்டிய முஸ்ஃபிகூர் ரஹிம் கிட்டத்தட்ட வங்கதேச அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதுவரை போட்டியை பார்த்துக்கொண்டிருந்த இந்திய ரசிகர்கள், டிவியை ஆஃப் செய்துவிட்டு தூங்க சென்றுவிட்டனர்.
கடைசி 3 பந்துகளுக்கு 2 ரன்களே தேவையென்ற இடத்தில், இந்திய கேப்டன் தோனி கேப்டன்சியில் ஒரு மாயாஜாலமே நிகழ்த்தினார். அந்த இடத்திலிருந்து ஒரு ரன்னை கூட எடுக்கவிடாமல் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி.
அழுத்தத்தில் வெற்றியை விரைவாகவே பெறவேண்டுமென தூக்கியடித்த ரஹிம் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்த பந்தில் மொஹமதுல்லாவையும் வெளியேற்றி இந்திய அணி கலக்கியது. அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகள் விழ, இப்போது வங்கதேசம் வெற்றிபெற 1 பந்துக்கு 2 ரன்கள் என போட்டி மாறியது.
எப்படியும் ஒரு ரன்னாவது எடுத்துவிடுவார்கள், போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி பந்தை ஹர்திக் லெந்த் பந்தாக வீச, பேட்ஸ்மேன் அதை விட்டுவிட்டாலும் ரன்னிற்கு ஓடினார். நேராக பந்து விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனியிடம் செல்ல, பந்தை பிடித்த தோனி பேட்ஸ்மேன் ஓடிவருவதற்குள் மின்னல் வேகத்தில் பறந்து ஸ்டம்பை தகர்த்து ரன்அவுட்டாக்கினார்.
கடைசி 3 பந்துகளில் ஒரு ரன்னை கூட எடுக்கமுடியாமல் மோசமான ஒரு தோல்வியை பதிவுசெய்தது வங்கதேசம். ஒட்டுமொத்த வங்கதேச அணி மற்றும் வங்கதேச ரசிகர்கள் என அனைவரது இதயங்களையும் உடைத்தார் மகேந்திர சிங் தோனி.
டி20 உலகக்கோப்பையில் அதுவரை அப்படி ஒரு இறுதிப்போட்டியை யாரும் பார்த்ததில்லை, ஒரு வீரர் கொண்டாட்டத்தின் உச்சியிலும் ஒரு வீரர் மைதானத்திலேயே அமர்ந்து அழுதபடியும் இருந்தார்.
அது 2016 டி20 உலகக்கோப்பை தொடர், அரையிறுதியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இந்தியாவில் நடைபெற்ற அந்த தொடரில் இறுதிப்போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் மற்றும் ஜாஸ் பட்லர் உதவியால் 20 ஓவர்களுக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை கைப்பற்றி கட்டுக்குள்ளேயே வைத்திருந்தது இங்கிலாந்து அணி.
கடைசி 6 பந்துகளுக்கு 19 ரன்கள் தேவை என்ற இடத்தில், கடைசி ஓவர் வீச வந்த பென் ஸ்டோக்ஸின் முதல் 4 பந்துகளையும் சிக்சர்களாக மாற்றிய பிராத்வெய்ட் “என்ன பா நடக்குது இங்க” என ஸ்தம்பிக்கும் அளவுக்கு உலக கிரிக்கெட் நாடுகளை திரும்பி பார்க்கவைத்தார். பிராத்வெயிட்டின் நம்பமுடியாத ஆட்டத்தால் 2 பந்துகளை வெளியில் வைத்து கோப்பையை தட்டிச்சென்றது வெஸ்ட் இண்டிஸ் அணி. தோல்வியடைந்த பிறகு மைதானத்திலேயே உட்கார்ந்து அழுவார் பென் ஸ்டோக்ஸ்.
அந்த டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும், கரீபியன் கிரிக்கெட் போர்டுக்கும் இடையே நிறைய பிரச்னை இருந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீது எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமல் தான், அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டு அவர்களை அனுப்பிவைத்தது.
லீக் போட்டிகளோடு சென்றுவிடுவார்கள் என்று நினைத்த அணி, அன்று புதிய சரித்திரம் படைத்தது.
தோனி என்ற வெற்றி கேப்டன் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆளுமையாக மாறியது 2007 டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்திய பிறகு தான். 1983ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு, இந்திய அணி 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் மரண அடி வாங்கி தோல்விபெற்று வெளியேறும். அவ்வளவு தான் இந்திய அணியால் அதற்கு பிறகு கோப்பையை எல்லாம் வெல்ல முடியாது, இந்த சாம்பியன் வீரர்களாலேயே வாங்க முடியவில்லை என்றால், பிறகு யார் வந்து கோப்பையை எல்லாம் இந்தியாவிற்கு வென்று தரப்போகிறார்கள் என்ற எண்ணம் எல்லா இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமும் இருந்தது.
அப்படியான தருணத்தில் 2007 டி20 உலகக்கோப்பையில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிபோட்டிவரை சென்ற இந்திய அணி, ஒரு பரபரப்பான பைனலில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
எப்படியும் பாகிஸ்தான் தான் வெல்லப்போகிறது என்ற இடத்தில் இருந்த போட்டியை, இந்தியா இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் கோப்பையை தட்டிசென்றது தான் இன்றளவும் அந்த போட்டி நம்பர் 1 டி20 உலகக்கோப்பை போட்டியாக இருக்கிறது. முதலில் விளையாடிய இந்திய அணி கம்பீரின் 75 ரன்கள் ஆட்டத்தால் 157 ரன்களை சேர்த்தது. அதற்குபிறகு ஆடிய பாகிஸ்தான் அணி இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் தேவையான ரன்களை சேர்த்துக்கொண்டே இருந்தது. ஆனால் விக்கெட்டை வீழ்த்திக்கொண்டே இருந்த இந்திய அணி, கடைசிவரை போட்டியை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
கடைசி 6 பந்துக்கு 13 ரன்கள் தேவை என போட்டிமாற, களத்தில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் மிஸ்பா 3 சிக்சர்களை அடித்து நிலைத்திருந்தார். மறுமுனையில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி வெற்றிபெற ஒரு விக்கெட் தேவையாக இருந்தது. அப்போது 2வது பந்தில் சிக்சர் அடித்த மிஸ்பா 4 பந்துக்கு 6 ரன்கள் என போட்டியை மாற்ற, அதற்குபிறகு தவறான ஒரு ஷாட் விளையாடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
எப்படியும் பாகிஸ்தான் தான் வெல்லப்போகிறது என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது, ஆனால் இறுதிஓவரை ஜோகிந்தர் சர்மாவிடம் ஒப்படைத்த தோனி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்திய வீரர்கள் டக் அவுட்டில் இருந்து ஓடிவரும் காட்சி இன்றளவும் யாராலும் மறக்க முடியாத ஒரு காட்சியாக இருந்துவருகிறது.