ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புக்குரிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா இன்று தன்னுடைய 36வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மும்பைக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பின் தனது அபாரமான கேப்டன்ஷிப் திறமையால் அதிக கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் தான் ரோகித் சர்மா முதல் முறையாக தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். இதுவரை 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 6,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா இதுவரை ஆடிய தரமான 5 போட்டிகளை பற்றி பார்ப்போம்.
2012இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா. அப்போட்டியில் ரோகித் சர்மா 12 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றார். கொல்கத்தா அணிக்கு எதிராக 182 ரன்கள் குவித்த இப்போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2015-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டார் ரோகித் சர்மா. அந்த போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்தபோதும், கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மாவின் ஆட்டம் வீணானது.
2018இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார் ரோகித் சர்மா. அவரின் இந்த அதிரடியான பேட்டிங்கால் மும்பை அணி 213 ரன்கள் குவித்தது. 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது மும்பை.
2009 ஐபிஎல் தொடரில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இலக்கை துரத்திய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட் 43 (31) உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன் எடுத்ததால் 19 ஓவரில் 140/4 ரன்கள் எடுத்தது. இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது களத்தில் நின்ற ரோகித் சர்மா, மொத்தமாக 32* (13) ரன்கள் அடித்து டெக்கான் அணிக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
2020இல் அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை மீண்டுமொருமுறை துவம்சம் செய்தார் ரோகித் சர்மா. 54 பந்துகளில் 80 ரன்கள் (3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்) விளாசினார் அவர். அப்போட்டியில் கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை. ரோகித் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.