INDIA TEAM  web
T20

”இது நடக்கலனா இந்தியா டி20 உலகக்கோப்பை வெல்லாது..”! - இந்திய அணிக்கு முன்னாள் AUS கேப்டன் எச்சரிக்கை

ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ள நிலையில், உலக அணிகளின் ஒட்டுமொத்த கவனமும் உலகக்கோப்பையை வெல்வதை சுற்றியே இருந்து வருகிறது.

Rishan Vengai

நடப்பு 2024 ஐபிஎல் தொடர் இன்னும் ஒருவாரத்தில் முடிவடைய உள்ள நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரானது ஜுன் 2ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில், எப்போதும் இல்லாத வகையில் 20 அணிகள் கோப்பைக்கான போட்டியிடவிருக்கின்றன.

T20 World Cup

இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரளவு சரியான வீரர்களை தேர்வுசெய்திருந்தாலும், கோப்பை வெல்லக்கூடிய ஒரு அணியா என்று பார்த்தால் சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருந்துவருகிறது.

காரணம் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற முக்கியமான வீரர்கள் தங்களுடைய மோசமான ஃபார்முடன் தொடர்ந்து வருகின்றனர். பந்துவீச்சிலும் பும்ராவை தவிர வேறு எந்த பவுலர்களும் சொல்லிக்கொள்ளும் அளவு ஃபார்மில் இருக்கவில்லை.

ரோகித் சர்மா

இந்த நிலையில் இந்திய அணி கோப்பையை வெல்லவேண்டுமானால் “விராட் கோலியை சார்ந்தே இந்திய அணி இருக்கப் போகிறது” என்றும், ”ஒருவேளை விராட் கோலி சிறப்பாக விளையாட தவறினால் இந்தியா கோப்பை வெல்லாது” என்றும் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின் கூறியுள்ளார்.

இது நடக்கலனா இந்தியா டி20 உலகக்கோப்பை வெல்லாது! - டிம் பெயின்

சக நாட்டு வீரர்களான ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் மைக்கேல் கிளார்க் உடன் 'அரவுண்ட் தி விக்கெட்' போட்காஸ்டில் பங்கேற்ற முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின், விராட் கோலியை மேக்ஸ்வெல்லுடன் ஒப்பிட்டு பேசினார்.

virat kohli - maxwell

இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா என்பது குறித்து பேசிய அவர், “விராட் கோலி சிறப்பாக செயல்படாமல் போனால் ரோகித் சர்மா தலமையிலான இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது. க்ளென் மேக்ஸ்வெல் போன்று தான் விராட் கோலியும், வலிமையான ஒரு உலகக்கோப்பையை கோலி கொண்டிருக்கவில்லை என்றால் இந்தியா கோப்பையை வெல்ல முடியாது. அதேபோலத்தான் ஆஸ்திரேலியா அணிக்கும், க்ளென் மேக்ஸ்வெல் தொடர்ந்து ஃபார்ம் இல்லாமல் இருந்தால் ஆஸ்திரேலியாவால் கோப்பை வெல்ல முடியாது” என்று கூறியுள்ளார்.

என்னை நீங்கள் பார்க்கவே முடியாது!- ஓய்வு குறித்து விராட் கோலி

சமீபத்தில் ஓய்வு குறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த விராட் கோலி, “ஒரு விளையாட்டு வீரராக, எல்லோருக்கும் ஓய்வுக் காலம் என்பது நிச்சயம் உண்டு. ஒரு குறிப்பிட்ட நாளில், இதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. ஏனெனில், நான் காலத்திற்கும் விளையாட முடியாது. எனவே குறையாக இருக்கும் எந்த விஷயத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன்.

Virat Kohli

ஒருமுறை ஓய்வை அறிவித்துவிட்டால், அதிலிருந்து நான் போய்விடுவேன். அதன்பின் நீங்கள் என்னைக் கொஞ்ச காலம் பார்க்கமாட்டீர்கள். அதனால் களத்தில் இருக்கும்வரை, நான் செய்ய நினைப்பவற்றையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும். அதனால்தான் என்னுடைய முழு பலத்தையும் நான் விளையாட்டில் காட்டி முனைப்போடு ஆடுகிறேன். அதுதான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.