தோனி ட்விட்டர்
T20

அச்சச்சோ அப்படியா!! தோனி தாமதமாக பேட்டிங் செய்வது குறித்து எழும் விமர்சனங்கள்.. வெளிவந்த ஷாக் உண்மை!

சமீபத்திய போட்டிகளில் எல்லாம் தோனி, கடைசி 2 ஓவர்கள் இருக்கும்போதே களமிறங்கி விளையாடி வருகிறார். அதிலும், சிங்கிள் ரன் எடுக்க ஓடுவதில்லை. இதுகுறித்து விமர்சனம் எழுந்த நிலையில், சி.எஸ்.கே. அதற்குப் பதில் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

ஐபிஎல்லில் 10 அணிகளும் வெற்றிபெறுவதும் சறுக்குவதும் இயல்புதான். அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது நடப்பு ஐபிஎல் தொடரும். அந்த வகையில், கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற 53வது லீக் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்திய சென்னை அணி, 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனினும், இந்தப் போட்டியில் சென்னை ரசிகர்களால் ‘தல’ எனச் செல்லமாய் அழைக்கப்படும் தோனி, 9-வது பேட்டரகாகக் களமிறங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. கடைசிகட்டத்தில் அவர், எந்த வரிசையில் இறங்கினாலும் எப்படியும் 2 சிக்ஸர்களையாவது அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், 19வது ஓவரில் ஹர்ஷல் படேல் வீசிய 5வது பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து கோல்டன் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியது அவரது ரசிகர்களைப் பெரிதும் ஏமாற்றத்திற்குள்ளாகியது.

இதுகுறித்து பல தரப்பும் பல்வேறு கருத்துகளைக் கூறிவந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பிலும் சில தகவல்கள் கசிந்துள்ளன. 2024 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பதவியை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுவுக்கு விட்டுக் கொடுத்த தல தோனி, தற்போது விக்கெட் கீப்பர் பேட்டராக மட்டும் இடம்பெற்று ஆடி வருகிறார்.

இதையும் படிக்க:’உங்க வீட்டு கலவை மெஷின் சத்தம் தொந்தரவா இருக்கு’ - சச்சினுக்கு எதிரா புகார் சொன்ன நபர்! வைரல்பதிவு!

இந்த நிலையில், தோனிக்கு முழங்காலில் தசைநார் கிழிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஐபிஎல் தொடரின் முடிவில் தோனிக்கு முழங்காலில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்தார். எனினும், அவருக்கு அந்த இடத்தில் தசைநார் கிழிசல் இருந்தது. இந்த நிலையில்தான், அவர் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். கடைசி சில போட்டிகளில் இரண்டு ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தபோது, பேட்டிங் செய்தார் தோனி. அதுகுறித்து விமர்சனம் இருந்தபோதும் தொடர்ந்து அவர் கடைசி ஒரு ஓவர் அல்லது இரண்டு ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்தார்.

தோனி

அவர் பேட்டிங் செய்யும்போது பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். சிங்கிள் ரன் ஓடுவதைத் தவிர்த்து வந்தார். முதல் சில போட்டிகளில் அவர் ரன் ஓடும்போது அவரது தசைநார் கிழிசல் மேலும் பெரிதாகி விட்டதாகவும் அதனாலேயே அவர் சிங்கிள் ரன்கள் ஓடுவதில்லை எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மே 1ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், பந்தை பவுண்டரி எல்லைக்கு அருகே அடித்தும் தோனி ரன்னுக்காக ஓடவில்லை. அதேநேரத்தில் எதிரில் இருந்த டேரில் மிட்செல் ரன்னுக்காக ஓடி வந்து, திரும்பி ஓடியதில் பெரும் விமர்சனம் எழுந்தது.

இதையும் படிக்க: மே.வங்கம்: பந்து என நினைத்து நாட்டு வெடிகுண்டை எடுத்து விளையாடிய சிறுவர்கள்.. பறிபோன சிறுவன் உயிர்!

இந்த நிலையில்தான் தோனியின் முழங்காலில் ஏற்பட்டிருக்கும் தசைநார் கிழிசல் காரணமாக அவர் ஓடுவதில்லை என சென்னை அணி தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு கூறி இருக்கின்றனர். ஆனால் சிஎஸ்கே அணியில் சரியான மாற்று விக்கெட் கீப்பர் இல்லை. மேலும், சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டெவான் கான்வே இந்த ஆண்டு காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை.

தோனி

அடுத்து, சிஎஸ்கே அணியில் பல முக்கிய வீரர்கள் காயத்தால் ஆட முடியாத நிலையில் உள்ளனர். இப்படி சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் காயத்தாலும், சரியான ஃபார்ம் இல்லாமலும் அவதிப்பட்டு வரும் நிலையில் சிஎஸ்கே அணியின் நிலை கருதியே தோனி போட்டிகளில் பங்கேற்று வருகிறார் என சிஎஸ்கே வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மலேசிய கால்பந்து வீரர் மீது ‘ஆசிட் வீச்சு’ - ஒரே வாரத்தில் இரண்டாவது கால்பந்து வீரர் மீது தாக்குதல்!