நியூயார்க் மைதானம் ட்விட்டர்
T20

T20 WC| Ind vs Pak போட்டி இங்குதான்.. 2 மாதத்தில் கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானம்.. அசத்திய அமெரிக்கா!

டி20 உலகக் கோப்பை தொடரைக் கருத்தில்கொண்டு, நியூயார்க் புறநகரில் உள்ள நாசாவு கவுண்டி என்ற இடத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்று, இரண்டே மாதங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது.

Prakash J

ஐபிஎல்லுக்குப் பிறகு ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடங்க இருக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற இருக்கும் இப்போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. 20 அணிகள் மோத இருக்கும் இந்த தொடரில், ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இணைக்கப்பட்டு, 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடர் முதல் முறையாக நடைபெற இருக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நியூயார்க் புறநகரில் உள்ள நாசாவு கவுண்டி என்ற இடத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை, இரண்டே மாதங்களில் அமைத்திருப்பதுதான். வெகுவிரைவாகவே பணிகள் நடைபெற்றாலும் உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் இம்மைதானம் கட்டி முடிக்கப்பட்டு, நேற்று திறப்பு விழா கண்டுள்ளது. டிராப் இன் வகை செயற்கை ஆடுகளத்தை, இந்த கிரிக்கெட் மைதானத்தில் அமைத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் கோல்ஃப் மைதானத்தில் பயன்படுத்தப்படும் புற்களும் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க: CSK Vs RCB | மே18 80% மழைக்கு வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை மழை குறுக்கிட்டால் என்னவெல்லாம் நடக்கலாம்!

டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்குள் இந்த மைதானத்தை தயார் செய்ய முடியாது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அமெரிக்கர்கள் இதை, இரண்டே மாதத்தில் சாதித்துக் காட்டியிருப்பது கிரிக்கெட் மீதிருக்கும் அவர்களுடைய தீராக் காதலை இது உணர்த்துகிறது. தற்போது இந்த மைதானத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 34,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய, இந்த மைதானத்தில் மொத்தம் 8 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஜூன் 3ஆம் தேதி இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், ஜூன் 9ஆம் தேதி பரம எதிரிகளான பாகிஸ்தானும் இந்தியாவும் இங்குதான் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் அமெரிக்காவின் கிரிக்கெட் தடம் மேலும் விரிவடைய இருக்கிறது. இதுகுறித்து ஐசிசி நிகழ்வு தலைவரான கிறிஸ் டெட்லி, ”டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதைப் பார்வையிடுவதற்காக எண்ணற்ற பார்வையாளர்களும் காத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

2028-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் ஐந்து புதிய விளையாட்டுகளில் T20 கிரிக்கெட் போட்டியும் இடம்பெற இருக்கிறது. இதனாலேயே இங்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”என்னை நீங்கள் பார்க்கவே முடியாது” - ஓய்வு குறித்து விராட் கோலி!