virat kohli x page
T20

சரிந்த விக்கெட்டுகள்.. அக்‌ஷர் அபாரம், அரைசதம் அடித்த விராட் கோலி - இந்தியா 176 ரன்கள் குவிப்பு

Rajakannan K

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இன்று விளையாடி வருகிறது. தென்னாப்ரிக்கா அணி 1998 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும், இந்திய அணி 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஐசிசி கோப்பை எதுவும் வெல்லவில்லை. அதனால், இரு அணிகளும் இன்றைய போட்டியை வென்று தங்களது நீண்டநாள் தாகத்தை தீர்த்துக்கொள்ளும்.

டாஸ் வென்ற, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களமிறங்கினர்.

இதையும் படிக்க: T20WC Final |”இந்த ஃபைனலிலும் தோற்றால் பார்படாஸ் பெருங்கடலில் ரோகித் குதித்துவிடுவார்” - கங்குலி

முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசினார் விராட் கோலி. நடப்பு டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக சொதப்பி வந்த விராட் கோலி முதல் ஓவரிலேயே மிரட்டியது நம்பிக்கை அளித்தது. இரண்டாவது ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரிகள் விளாசி தன் கணக்கை தொடங்கினார் ரோகித் சர்மா. ஆனால், மஹாராஜா வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தில் கேட்ச் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் ரோகித்.

இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்த ரோகித் ஆட்டமிழந்தது ஒரு புறம் என்றால் ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்ந்த சோகம் மறைவதற்குள் சூர்ய குமார் யாதவ் ஸ்கெயர் லெக் சைடில் தன்னுடைய பேவரட் ஷாட் அடிக்க முயன்று 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 4.3 ஓவர்களில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதையும் படிக்க: குஜராத்| பிரதமர் மோடியால் 2023-ல் திறக்கப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்துவிழுந்து விபத்து!

இக்கட்டான நேரத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அக்‌ஷர் பட்டேலை களமிறக்கினார் கேப்ட்ன ரோகித் சர்மா. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஒரு முனையில் விராட் கோலி தன்னுடைய அதிரடியை குறைத்து சிங்கிள் எடுத்து வந்த நிலையில், அக்‌ஷர் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். தேவையான நேரத்தில் சிங்கிள்களும் எடுத்தார். நடப்பு தொடரில் ஸ்பின்னராக விக்கெட்டுகளை வீழ்த்தி வந்த அக்‌ஷர் பேட்டிங்கிலும் தடுமாற்றம் இல்லாமல் அசத்தினார். 3 விக்கெட் வீழ்ந்த நேரத்தில் தடுமாற்றமே இல்லாமல் சிறப்பாக விளையாடினார். ஒரு கட்டத்தில் விராட் கோலியை விட ரன்னில் முந்தி அரைசதத்தை நெறுங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார் அக்‌ஷர் பட்டேல்.

பின்னர் ஷிபம் துபே களமிறங்கினார். ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு விராட் கோலி விளையாடினார். ஒருவழியாக 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் விராட்.

இதையும் படிக்க: 200 ரன்னை நெருங்கும் போதும் சிக்ஸர் விளாசல்! அச்சு அலசல் சேவாக் ஆட்டத்தை நினைவூட்டிய ஷபாலி வர்மா!

அரைசதம் விளாசிய பின்னர் அதிரடிக்கு மாறினார். சிக்ஸர், பவுண்ட்ரிகளாக விளாசிய விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டு சிக்ஸர், 6 பவுண்டரிகள் விளாசினார். ஷிபம் துபேவும் தன் பங்கிற்கு பவுண்டரிகளை அடித்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து துபே ஆட்டமிழந்தார். ஜடேஜா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. கேஷவ் மஹாராஜ், நோர்ஜ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்னாப்ரிக்கா விளையாடி வருகிறது.

இதையும் படிக்க: மாலத்தீவு | அதிபருக்கு சூன்யம் வைத்ததாக 2 அமைச்சர்கள் உள்பட 4 பேர் கைது - விசாரணை தீவிரம்!