UAE vs NZ pt web
T20

T20 | நியூசிலாந்தை வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரகம்... டெஸ்ட் விளையாடாத அணிக்கெதிராக முதல் தோல்வி!

டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த ஃபார்மட்டிலும் இதற்கு முன் நியூசிலாந்து அணி டெஸ்ட் அந்தஸ்த்து பெறாத அணியிடம் தோற்றது இல்லை. நியூசிலாந்து அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.

Viyan

ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது நியூசிலாந்து அணி. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐக்கிய அரபு அமீரகம். டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த ஃபார்மட்டிலும் இதற்கு முன் நியூசிலாந்து அணி டெஸ்ட் அந்தஸ்த்து பெறாத அணியிடம் தோற்றது இல்லை. இதுதான் அவர்களின் முதல் தோல்வி.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. பல முன்னணி வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. கேப்டன் வில்லியம்சன் இன்னும் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். நியூசிலாந்து சென்டிரல் கான்டிராக்ட் வேண்டாம் என்று கூறிய டிரென்ட் போல்ட் அணியில் இடம்பெறவில்லை. லாகி ஃபெர்குசன் காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறிவிட்டார். டெவன் கான்வே இங்கிலாந்தில் தி 100 தொடரில் விளையாடி வருகிறார். இதனால் பல இளம் வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றனர்.

ஆகஸ்ட் 17ம் தேதி துபாயில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 19ம் தேதி துபாயில் நடந்தது.

டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸ் எதிர்பார்த்ததைப் போல் செல்லவில்லை. மூன்றாவது ஓவரிலேயே டிம் செய்ஃபர்ட் 7 ரன்களுக்கு வெளியேறினார். மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய மிட்செல் சேன்ட்னர் ஒரே ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் டேன் கிளீவர் கோல்டன் டக்காகி வெளியேறினார். ஐந்தாவது ஓவரிலேயே மூன்றாவது விக்கெட்டை இழந்து தடுமாறியது நியூசிலாந்து.

ஓரளவு தாக்குப்பிடித்து நிதானமாக விளையாடிய ஓப்பனர் சேட் போவஸ், 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அயான் அஃப்சல் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இப்படி ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருக்க, மார்க் சேப்மன் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். அவருக்கு ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் மட்டுமே சற்று உறுதுணையாக விளையாடினார். ஆறாவது விக்கெட்டுக்கு அந்த ஜோடி 53 ரன்கள் எடுத்தது. நீஷமும் அவுட்டாக, தனி ஆளாகப் போராடி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார் சேப்மேன். 46 பந்துகள் சந்தித்த அவர் 63 ரன்கள் எடுத்தார். அதில் 3 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் அடக்கம். அவரது இன்னிங்ஸின் காரணமாக 20 ஓவர் முடிவில் 142 என்ற இலக்கை எட்டியது நியூசிலாந்து. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் அயான் அஃப்சல் கான் 3 விக்கெட்டுகளும், முகமது ஜவாதுல்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஓரளவு நம்பிக்கையோடு இன்னிங்ஸை தொடங்கிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சியளித்தார் நியூசிலாந்து கேப்டன் டிம் சௌத்தி. இன்னிங்ஸின் மூன்றாவது பந்திலேயே ஆர்யான்ஷ் ஷர்மா டக் அவுட் ஆனார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் மிகவும் பொறுப்புடன் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். அதே சமயம் தவறான பந்துகளைத் தேர்ந்தெடுத்து பௌண்டரிகளும் விளாசினர். அதனால் மெல்ல இலக்கை நோக்கிப் பயணித்தது யுஏஇ. அதிரடியாக ஆடிய கேப்டன் முகமது வசீம் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆசிஃப் கான் 29 பந்துகளில் 48 ரன்கள் விளாசி தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 16வது ஓவரிலேயே, வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது ஐக்கிய அரபு அமீரகம். வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அயான் அஃப்சல் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதற்கு முன்பு டெஸ்ட் அந்தஸ்த்து பெறாத எந்த அணியிடமும் நியூசிலாந்து எந்த ஃபார்மட்டிலுமே தோற்றதில்லை. இதுவே அந்த அணியின் முதல் தோல்வியாக அமைந்தது. ஒருசில கேட்ச்களைத் தவறவிட்ட தங்கள் ஃபீல்டர்களை விமர்சனம் செய்திருந்தாலும், ஐக்கிய அரபு அமீரக அணியின் இந்த வெற்றியை நியூசிலாந்து கேப்டன் சௌத்தி பாராட்டவே செய்தார். இதுதான் விளையாட்டின் மகத்தும் என்றும் தெரிவித்தார் அவர்.