IND vs SL match pt web
T20

12 பந்தில் 9 ரன் தேவை.. பந்துவீச்சில் மேஜிக் செய்த SKY, ரிங்கு-சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

webteam

இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பல்லகேலேவில் நடந்தது. டாஸ் வென்று இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 39 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 26, வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன் இந்தப்போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

IND vs SL

இலங்கை அணி தரப்பில் மகேஷ் தீக்ஷனா 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஹசரங்கா 2 விக்கெட் சாய்த்தார். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி, சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கிமுன்னேறியது. 58 ரன்களில் தான் முதல் விக்கெட்டையே இழந்தது. குஷல் மெண்டீஸ் 43, குஷல் பெராரா 46 ரன்கள் எடுக்க கைக்கு எட்டும் தூரத்தில் வெற்றி இருந்தது. அதாவது, இலங்கைக்கு 99 சதவீதமும், இந்தியாவும்மு 1 சதவீதமும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக 18 ஓவர்கள் முடிவில் கணிக்கப்பட்டது.

யாரும் எதிர்பாராத விதமாக 19வது ஓவரை வீசிய ரிங்கு சிங் வீசினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்ததோடு 2 விக்கெட்டையும் வீழ்த்தி எல்லோரையும் அசர வைத்தார்.

இதனால் கடைசி ஓவரில் இலங்கை அணிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.

20 ஆவது ஓவரை வீசினார் கேப்டன் சூர்ய குமார். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை.. இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தது. 4வது பந்தில் ஒரு ரன், 5வது பந்தில் 2 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் 3 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால், கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட ஆட்டம் சமனில் முடிந்தது.

IND vs SL

யாரும் எதிர்பாராத விதமாக சூர்யகுமார் பந்துவீசியதோடு 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இலங்கை அணியும் 137 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 2 ரன்களை எடுத்து 2 விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல்பந்தை பவுண்டரிக்கு அடித்து வெற்றி பெற்றது.

முன்னதாக, தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி அசாத்திய பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் வெற்றி வாகை சூடியது.

அதேபோல், வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்த போட்டியை போராடி வென்றுள்ளது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி.

இதன்மூலம் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. ஆட்டநாயகனாக வாசிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தொடர் நாயகன் விருதினை சூர்யகுமார் யாதவ் பெற்றார்.