விராட் கோலியின் அரைசதம், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அபார பந்துவீச்சு, சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் ஆகியவற்றால் 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா மீண்டும் உச்சி முகர்ந்தது. இந்த மகிழ்ச்சியை, உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப்போட்டிக்கு முன்பு ஒவ்வொரு வீரரையும் எப்படி ஊக்கப்படுத்தினார் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “இறுதிப் போட்டிக்கு முன், எங்களிடம் பேசிய ரோகித், 'என்னால் இந்த மலையில் தனியாக ஏற முடியாது. நான் உச்சத்தை அடைய வேண்டும் என்றால், அனைவருக்கும் ஆக்ஸிஜன் தேவைப்படும். ஆகையால், அதற்கு உங்கள் கால்கள், மனம் மற்றும் இதயங்களில் எது இருக்கிறதோ, அனைத்தையும் விளையாட்டிற்குக் கொண்டு வாருங்கள்’ என ஊக்கப்படுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வசம் சென்றுகொண்டிருந்த வெற்றியின் வாய்ப்பை, ஹர்திக் பாண்டியா பந்தை டேவிட் மில்லர் பவுண்டரி எல்லைக்கு தூக்கியடித்தார்.
அதை அங்கு நின்ற சூர்யகுமார் யாதவ், அருமையாக கேட்ச் பிடித்து, ஆட்டத்தை இந்தியா வசம் திருப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.