சூர்யகுமார் யாதவ் web
T20

’Heart Breaking’ எமோஜி பதிவிட்ட சூர்யகுமார்! IPL-லிருந்து விலகல்? MI-க்கு பெரிய அடி! காரணம் இதுதானா?

அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு மறுவாழ்வில் இருந்து வந்த சூர்யகுமார் யாதவ், 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணியில் இடம்பெற்ற சூர்யகுமார் யாதவ், டி20 தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மண்ணில் 1-1 என தொடரை சமன்செய்து அசத்தியது. அந்த தொடரில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

தென்னாப்பிரிக்கா தொடர் ஒரு அணியாக இந்தியாவிற்கு வெற்றிகரமான தொடராக அமைந்த போதிலும், சூர்யகுமார் யாதவ் காயத்தால் அவதிப்பட்டார். முதலில் கணுக்கால் காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்யவிருந்த சூர்யா, குடலிறக்க பிரச்னையால் அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

Suryakumar Yadav

அதற்கு பிறகு இந்திய அணி பங்கேற்ற அனைத்து தொடரிலிருந்தும் விலகிய சூர்யகுமார் யாதவ், ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வுக்காக கண்காணிக்கப்பட்டுவந்தார்.

’இதயம் உடைந்த’ எமோஜியை பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்!

எப்படியும் காயத்திலிருந்து மீண்டு 2024 ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களே இருக்கும்போது ”ஹார்ட் பிரேக்கிங்” பதிவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

அறிக்கைகளின் படி, சூர்யகுமார் யாதவிற்கு இன்று ஃபிட்னஸ் டெஸ்ட் இருந்ததாகவும், அவரால் உடற்தகுதியை நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் சூர்யகுமார் யாதவ் முதல் பாதி ஐபிஎல் தொடரில் விளையாடமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு உடற்தகுதி தேர்வு இருப்பதாகவும், அதிலும் நிரூபிக்க முடியவில்லை என்றால் பகுதி ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போவது உறுதிசெய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில், கேப்டன்சி மாற்றம், பவுலர்கள் காயம் போன்ற பிரச்னைகள் இருந்துவரும் நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் இல்லாமல் போவது பெரிய அடியாக மாறும்.