suryakumar yadav - Devisha x
T20

’உங்களின் கடின உழைப்புக்கு கடவுளின் சரியான வெகுமதி’- டி20 கேப்டன் ஆனதற்கு SKY மனைவி நெகிழ்ச்சி பதிவு

Rishan Vengai

29 வயதுவரை தன்னுடைய வாய்ப்புக்காக பிசிசிஐ-ன் கதவுகளை தட்டிய சூர்யகுமார் யாதவ், தன்னுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் 30-வது வயதில் கதவுகளை உடைத்தெறிந்து இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார்.

தன்னுடைய அசாத்தியமான 360 டிகிரி விளையாட்டின் மூலம் டி20 வடிவத்தில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், அடுத்தடுத்து 4 சர்வதேச டி20 சதங்களை பதிவுசெய்து இரண்டே ஆண்டில் உலகின் நம்பர் 1 வீரராக மாறி அசத்தினார்.

அதுமட்டுமில்லாமல் சர்வதேச டி20 வரலாற்றில் 900 ரேட்டிங் புள்ளிகளை பெற்ற சூர்யா, அதைப்பெற்ற முதல் ஆசிய வீரராக மாறி சாதனை படைத்தார். உடன் ஐசிசி வழங்கும் சிறந்த டி20 வீரருக்கான விருதை இரண்டுமுறை வென்று இந்திய அணியில் தன்னுடைய பெயரை நிலைநிறுத்தினார்.

suryakumar

இந்நிலையில் அணியில் மூத்தவீரர்கள் இல்லாதபோது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கேப்டனாக வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், தற்போது மூத்தவீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருந்தும் நிரந்தர டி20 கேப்டனாக பார்க்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது பிரம்மிக்க வைத்துள்ளது.

இந்தநாள் வருமென்று நினைத்துக்கூட பார்த்ததில்லை..

இலங்கை சுற்றுப்பயணத்தின்போது விளையாடவிருக்கும் 3 டி20 தொடருக்கான கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ள முதல் தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படவுள்ளார்.

suryakumar yadav

சூர்யாவின் புதிய கேப்டன் ரோல் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் அவருடைய மனைவி தேவிஷா, “நீங்கள் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, ​​இந்த நாள் வரும் என்று நாம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் உண்மையில் கடவுள் மிகப்பெரியவர், கடின உழைப்போடு விடாமுயற்சியுடன் போராடும் அனைவரும் உரிய நேரத்தில் வெகுமதியைப் பெறுகிறார்கள். உங்களை நினைத்தும், இவ்வளவு தூரம் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதையும் நினைத்தும் பெருமைப்படுகிறேன். உங்கள் பாரம்பரியத்தின் ஆரம்பம் தொடங்கிவிட்டது” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.