10 அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின், இன்றைய 35 லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இவர்கள் இருவரும் டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்ததுடன், வாணவேடிக்கையும் காட்டினர். வெறும் 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 6 சிக்ஸர் 2 பவுண்டரியுடன் 46 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விளையாடிய டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸர் 11 பவுண்டரியுடன் 89 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இந்த போட்டியின்போது பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் பவர் பிளேயில் அதிகமான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்தது. இதற்குமுன்பு கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி முதல் 6 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக அதிகமான ஸ்கோரை எடுத்த அணி என்ற மாபெரும் சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சமீபத்தில் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 287 ரன்களை குவித்திருந்தது. அதேபோல் நடப்பு தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 277 ரன்களை குவித்திருந்தது.
277 ரன்கள் என்ற சாதனையை தகர்த்து எப்படி 287 குவித்து புதிய சாதனை படைத்ததோ அதேபோல், இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 300 ரன்கள் வரை எட்டும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. 8.4 ஓவர்களிலேயே அந்த அணி 150 ரன்களை எட்டியது. அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசி ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆடம் மார்க்கரம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். வாணவேடிக்கை காட்டி வந்த டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். க்ளாசனும் 15 ரன்னில் ஆட்டமிழக்க ரன் வேகம் சற்றே தடை பட்டது. இருப்பினும், நிதிஷ் குமார் ரெட்டி 37, சபாஷ் அஹமது 59 ரன்கள் உதவியுடன் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.
267 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் டெல்லி அணியில் தொடக்கத்திலேயே பிரித்வி ஷா 16, வார்னர் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இருப்பினும் 7 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணியை அதிரடியாக கலங்க வைத்த டெல்லி வீரர் ஜேக் பிரஷார் மெக்குர்க் வெறும் 18 பந்தில் 65 ரன் குவித்தார். 7 சிக்ஸர், 5 பவுண்டரிகள் விளாசினார். 15 பந்துகளில் அவர் அரைசதம் விளாசி அசத்தினார்.