SRH vs MI cricinfo
T20

277 ரன்கள் குவித்து வரலாறு படைத்த SRH! மோசமான சாதனை படைத்த MI கேப்டனாக மாறிய ஹர்திக்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 277 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை பதிவுசெய்து சாதனை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Rishan Vengai

80 ரன்கள் குவித்த ஹென்ரிச் க்ளாசன்!2024 ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே பரபரப்பான க்ளோஸ் என்கவுண்டர் போட்டிகளை கண்டுவருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்றுவரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான ஒரு போட்டியாக மாறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி, ஹைத்ராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் போட்டிகளில் தோல்விபெற்றுள்ள இரண்டு அணிகளில் எந்த அணி முதல் வெற்றியை பதிவுசெய்யும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இன்றைய போட்டி தொடங்கியது.

18 பந்தில் அரைசதமடித்த டிராவிஸ் ஹெட்!

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வுசெய்ய, பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டிராவிஸ் ஹெட்

24 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய டிராவிஸ் ஹெட், வெறும் 18 பந்துகளில் அரைசதமடித்து SRH அணிக்காக புதிய சாதனையை படைத்தார். SRH அணிக்காக 20 பந்துகளில் அரைசதமடித்திருந்த டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த டிராவிஸ் ஹெட் அசத்தினார்.

16 பந்தில் அரைசதமடித்த அபிஷேக் சர்மா!

62 ரன்களில் டிராவிஸ் ஹெட் வெளியேறியதும் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த அபிஷேக் சர்மா, ஹெட் விட்ட இடத்திலிருந்து அதிரடியான பேட்டிங்கை தொடர்ந்தார். ஹெட் பவுண்டரிகளாக அடித்து ரன்களை எடுத்துவந்த நிலையில், நான் அடிச்சா சிக்சர் தான் என ஆடிய அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என துவம்சம் செய்து கலக்கிப்போட்டார்.

அபிஷேக் சர்மா

வெறும் 16 பந்திலேயே அரைசதமடித்த அபிஷேக் சர்மா, சற்று நேரத்திற்கு முன் டிராவிஸ் ஹெட் படைத்த புதிய சாதனையை உடைத்து அந்த சாதனையில் தன்னுடைய பெயரை எழுதினார். 23 பந்துகளில் 63 ரன்களை விரட்டிய அபிஷேக் சர்மா சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து விளையாடினார்.

80 ரன்கள் குவித்த ஹென்ரிச் க்ளாசன்!

இரண்டு அபாரமான அரைசதங்களுக்கு பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் வெளியேறியதும், களத்திற்கு வந்த மாக்ரம் மற்றும் க்ளாசன் இருவரும் அதிரடியை சரவெடியாக தொடர்ந்தனர். முதலில் மார்க்ரம் அதிரடியை தொடர்ந்தாலும் ஆட்டத்தை தன்பக்கம் திருப்பிய க்ளாசன், மார்க்ரமை எதிர்பக்கம் நிற்கவைத்துவிட்டு வானவேடிக்கை காட்ட ஆரம்பித்தார்.

க்ளாசன்

4 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஹென்ரிச் க்ளாசன், சன்ரைசர்ஸ் அணியை ஒரு வரலாற்று ரன்களுக்கு வழிவகுத்தார். மார்க்ரம் 42 ரன்கள் அடிக்க, 23 பந்துகளில் அரைசதமடித்து 80 ரன்கள் குவித்த க்ளாசன் 277 ரன்கள் என்ற இமாலய ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணியை அழைத்துச்சென்றார்.

277 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது SRH!

ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டோட்டல் சாதனையாக 263 ரன்கள் இருந்துவந்தது. 2013ம் ஆண்டு நடைபெற்ற புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி 263 ரன்கள் என்ற இமாலய சாதனையை படைத்து தன்வசம் வைத்திருந்தது.

ஹர்திக் பாண்டியா

தற்போது ஆர்சிபி அணியின் 263 ரன்கள் என்ற அதிகபட்ச ரன்கள் ரெக்கார்டை உடைத்திருக்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் தன்னுடைய பெயரை எழுதியுள்ளது.

ஹர்திக் பாண்டியா

278 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் விக்கெட்டை இழந்து 5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளுக்கு 68 ரன்களுடன் விளையாடிவருகிறது.