srh vs kkr x
T20

113 ரன்னில் All Out! IPL வரலாற்றில் SRH படைத்த மோசமான சாதனை! விக்கெட் வேட்டை நடத்திய KKR பவுலர்கள்!

2024 ஐபிஎல் கோப்பையை வெல்ல கொல்கத்தா அணிக்கு 114 ரன்களை வெற்றி இலக்காக வைத்துள்ளது SRH அணி.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் அணியை சிறப்பாக வழிநடத்திய இரண்டு பெஸ்ட் கேப்டன்கள், தங்களுடைய அணியை இறுதிச்சுற்றுக்கு எடுத்துவந்துள்ளனர்.

இந்த இறுதிப்போட்டியானது சமபலம் கொண்ட இரு அணிகள், ஒரு சிறந்த பந்துவீச்சு மட்டும் சிறந்த பேட்டிங் வரிசைக்கு இடையேயான மோதலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணி சன்ரைசர்ஸ் அணியை எழவே விடாமல் 113 ரன்னுக்கு நசுக்கியுள்ளது.

தொடக்கமே மிரட்டிய மிட்செல் ஸ்டார்க்!

சென்னை ஆடுகளத்தில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்யாமல், முதலில் பேட்டிங் செய்யவிரும்புகிறோம் என்ற முடிவை எடுத்தார். முதலில் பேட்டிங் செய்யவந்த சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, மிட்செல் ஸ்டார்க்கை எதிர்கொண்டார். கடந்த 4 போட்டிகளாக சிறந்த ஃபார்மில் ஜொலித்து வரும் ஸ்டார்க், தன்னுடைய முதல் ஓவரை அபாரமாக வீசி அபிஷேக் சர்மாவை திணறடித்தார். ஒரு பந்தை கூட தொடமுடியாமல் அபிஷேக் சர்மா விளையாடியதை பார்க்கும் போது, விக்கெட் கீப்பரும் பவுலரும் மட்டுமே விளையாடுவது போல் இருந்தது.

ஆனால் நீண்டநேரம் அபிஷேக் சர்மாவை களத்தில் நிறுத்த விரும்பாத ஸ்டார்க், ஒரு அற்புதமான குட்லெந்த் டெலிவரியை ஸ்விங் செய்து ஸ்டம்பை தகர்த்தெறிந்தார். என்ன நடந்து என்பதையே கணிக்கமுடியாத அபிஷேக் சர்மா 2 ரன்னில் நடையை கட்டினார். இறுதிப்போட்டியில் முதல் ஓவர், ஸ்மார்ட் ஸ்விங், மிட்செல் ஸ்டார்க் என்ற மாயாஜாலம் மீண்டும் தொடர்ந்துள்ளது. இதனால் தான் அவரை “Big Match Player" என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

113 ரன்களுக்கு சுருண்ட SRH!

அபிஷேக் சர்மா தான் 2 ரன்னில் வெளியேறிவிட்டார் என்றால், அடுத்த ஓவரில் அரோராவை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் முதல்பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். மற்ற போட்டிகளை போல் இல்லாமல் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சென்னை ஆடுகளத்திற்கேற்ப பந்துவீச்சின் லெந்துகளில் மாற்றங்களை செய்தது அவர்களுக்கு வெற்றியை தந்துள்ளது.

ஒருவேளை ஸ்டார்க்கை டிராவிஸ் ஹெட்டும், அரோராவை அபிஷேக் சர்மாவும் மாறிமாறி சந்தித்திருந்தால் SRH எதிர்ப்பார்த்தது நடந்திருக்கலாம். ஆனால் 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் பறிகொடுக்க, 3வது வீரராக களத்திற்கு வந்த திரிப்பாத்தி அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் ஸ்டார்க் பந்தில் காற்றில் தூக்கியடித்து வெளியேறினார்.

3 விக்கெட்டுகளை இழந்த பிறகு மார்க்ரம் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் அடுத்தடுத்து பவுண்டரி சிக்சர்களை விரட்டி மொமண்ட்டை மாற்ற நினைத்த போது, புதிதாக பந்துவீச வந்த ஹர்சித் ரானா நிதிஷ் ரெட்டியை 13 ரன்னில் வெளியேற்றி 4வது விக்கெட்டை எடுத்துவந்து மிரட்டினார். 8 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி.

IPL பைனலில் படைக்கப்பட்ட மோசமான சாதனை!

4 விக்கெட்டுகள் விழுந்த பிறகு மாக்ரம் மற்றும் க்ளாசன் இருவரும் இணைந்து ரன்களை எடுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் சன்ரைசர்ஸ் அணி இருந்தது. ஆனால் அதன்பிறகும் விக்கெட் சரிவு நின்றபாடில்லை. ரஸல் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆகி எய்டன் மார்கரம் நடையைக் கட்ட, வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஷபாஸ் அஹ்மத்தும், ரஸல் பந்துவீச்சில் அப்துல் சமாத்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

உடன் கடைசி நம்பிக்கையாக இருந்த க்ளாசனும் ஹர்ஷத் ரானா பந்துவீச்சில் 16 ரன்னில் க்ளீன் போல்ட் ஆகினார். 90 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியை ஒரு கவுரமான டோட்டலுக்கு எடுத்துவர பாட் கம்மின்ஸ் போராடினார். ஆனால் எதிரில் இருந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து வெளியேற 18.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்னுக்கே ஆல்அவுட்டானது.

cummins

ஒரு ஐபிஎல் பைனலில் பதிவுசெய்யப்பட்ட குறைந்த பட்ச டோட்டலை அடித்த சன்ரைசர்ஸ் அணி மோசமான சாதனையை தங்கள் பெயரில் எழுதியது.

ஐபிஎல் பைனலில் அடிக்கப்பட்ட குறைவான டோட்டல்:

* 113 - SRH vs KKR - சென்னை 2024 *

* 125/9 - CSK vs MI - கொல்கத்தா 2013

* 128/6 - RPS vs MI - ஹைதராபாத் 2017

* 129/8 - MI vs RPS - ஹைதராபாத் 2017

நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் 287 குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் என்ற சாதனையை படைத்திருந்தது ஹைதராபாத் அணி. ஆனால், ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையும் படைத்திருக்கிறது.