ஒவ்வொரு முறை ஆர்சிபி அணியின் முந்தைய வீரர்கள் வேறொரு அணிக்கு சிறப்பாக செயல்படும்போது, ஆர்சிபி அணி நிர்வாகத்தை விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை. பல தலைசிறந்த வீரர்களை அணிக்குள் வைத்திருந்த ஆர்சிபி அணி, குறைந்தபட்சம் 3 ஐபிஎல் கோப்பைகளையாவது வென்றிருக்க வேண்டும். ஆனால் வீரர்களை தற்காத்துவைக்காத அந்த அணி, ஒரு கோப்பையை கூட வெல்லமுடியாமல் இன்றுவரை Chokers அணியாகவே வலம்வந்துகொண்டிருக்கிறது.
கேஎல் ராகுல், டிராவிஸ் ஹெட், ஷிவம் துபே, யஸ்வேந்திர சாஹல் என ஆர்சிபி அணியிலிருந்து வெளியேறிய ஒவ்வொரு வீரர்களும் வேறொரு அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் முன்பு ஆர்சிபி அணியில் வாட்டர் பாயாக பயன்படுத்தப்பட்ட டிராவிஸ் ஹெட், நேற்றைய ஒரே போட்டியில் தன்னுடைய ருத்ரதாண்டவ பேட்டிங் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியை தொடரிலிருந்தே வெளியேற்றியதுடன், LSG அணியின் அரையிறுதி வாய்ப்பையும் அந்தரத்தில் தொங்கவிட்டுள்ளார்.
அரையிறுதி வாய்ப்பை தற்காத்துக்கொள்ளும் முக்கியமான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சன்ரைசர்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தும் முயற்சியில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
ஆனால் “முதல்ல பேட்டிங் பன்றதுலாம் சரிதான், அதுக்கு உங்க பிளேயர்ஸ் நல்லா ஆடனுமே” என விமர்சிக்கும் அளவு ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது லக்னோ அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய டி-காக் 2 ரன்னிலும், ஸ்டொய்னிஸ் 3 ரன்னிலும் அடுத்தடுத்து நடையை கட்ட, 33 பந்துகளில் 29 ரன்கள் என தடவிக்கொண்டிருந்த கேப்டன் கேஎல் ராகுலும் அணியை மோசமான நிலையில் விட்டுவிட்டு வெளியேறினார். உடன் க்ருனால் பாண்டியாவும் 24 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, 68 பந்துகளுக்கு வெறும் 66 ரன்களே அடித்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த லக்னோ அணி நிலைகுலைந்தது.
ஆனால் அடுத்த விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஆயுஸ் பதோனி மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும், அணியை சரிவிலிருந்து மீட்டுவர போராடினர். விக்கெட்டை இழக்க கூடாது என முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, பின்னர் அதிரடிக்கு திரும்பியது. 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 48 ரன்கள் அடிக்க, 9 பவுண்டரிகளை விரட்டிய ஆயுஸ் பதோனி அரைசதமடித்து மிரட்டிவிட்டார். 180 ஸ்டிரைக்ரேட்டில் அபாரமாக விளையாடினாலும், இந்த ஜோடியால் லக்னோ அணியை 165 ரன்களுக்கே எடுத்துச்செல்ல முடிந்தது. அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக இந்த டோட்டல் போதுமா எனும் பயத்திலேயே பந்துவீசியது லக்னோ அணி. ஆனால் “தலைகீழாக நின்னாலும்” போதாது என அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் லக்னோ அணிக்கு மறக்கவே முடியாத அளவு அடிகொடுத்து அழும் நிலைக்கே கொண்டுசென்றனர்.
”போதும் ப்பா வலிக்குது” என சொல்லும் அளவுக்கு சிக்சர் பவுண்டரிகளால் டீல் செய்த டிராவிஸ் ஹெட், 16 பந்தில் அரைசதமடித்து மிரட்டிவிட்டார்.
64 ரன்கள் அடித்த பிறகுதான் டிராவிஸ் ஹெட் தன்னுடைய ஒற்றை ரன்னையே எடுத்தார் என்றால், லக்னோ அணியின் பரிதாபத்தை என்னவென்று சொல்வது.
அவர்தான் ஒருபுறம் வெளுக்கிறார் என்றால், மறுமுனையில் “ஹெட் மட்டும்தான் அடிப்பாரா நான் அடிக்க மாட்டானா” என ருத்ரதாண்டவமே ஆடிய அபிஷேக் சர்மா, 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 28 பந்துகளில் 75 ரன்கள் அடித்து மிரட்டினார். 8 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என கருணையே காட்டாமல் வெளுத்துவாங்கிய டிராவிஸ் ஹெட், 30 பந்தில் 89 ரன்கள் குவித்து 9.4 ஓவர் முடிவிலேயே சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 146 சிக்சர்கள்... SRH அணி இமாலய சாதனை!
10 ஓவருக்குள் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி என போட்டியை அபாரமாக வென்ற SRH அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் 146 சிக்சர்களை பறக்கவிட்டு ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த ஒரே அணி என்ற இமாலய சாதனையை படைத்தது. அதுமட்டுமில்லாமல் 9.4 ஓவரில் 167 ரன்களை பதிவுசெய்த SRH அணி, ஐபிஎல் வரலாற்றில் 10 ஓவருக்குள் அதிக ரன்களை விளாசிய அணியாகவும் மாறி சாதனை படைத்தது.
இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளியிருக்கும் சன்ரைசர்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் மோசமான ஒரு தோல்வியை சந்தித்த லக்னோ அணி மோசமான புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு சரிந்துள்ளது. அந்த அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால் மீதமிருக்கும் 2 போட்டிகளில் பெரிய ரன்ரேட்டுடன் வெற்றிபெற வேண்டும்.
இந்த போட்டியின் முடிவில் பரிதாபமான விசயம் என்னவென்றால், 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறி சாதனை படைத்துள்ளது. இன்னும் பிளே ஆஃப்க்கான ரேஸில் மும்பையை தவிர பிற அணிகள் அனைத்தும் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், அடுத்தடுத்த போட்டிகள் சுவாரசியம் நிறைந்த போட்டிகளாகவே அமையவிருக்கின்றன.