sunil narine ipl
T20

'ஏன் எந்தவிதமான எமோசனையும் வெளிப்படுத்த மாட்றீங்க?' - சுவாரசியமான பதில் கொடுத்த சுனில் நரைன்!

Rishan Vengai

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிரட்டிவரும் ஜாம்பவான் பந்துவீச்சாளர் சுனில் நரைன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு ஆல்ரவுண்டராகவே மாறி மிரட்டிவருகிறார்.

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியிருக்கும் சுனில் நரைன் பேட்டிங்கில் 41 சராசரியுடன் 3 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 461 ரன்களும், பந்துவீச்சில் 14 விக்கெட்டுகளும் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளுக்கான ஊதா தொப்பி மற்றும் அதிக ரன்களுக்கான ஆரஞ்சு தொப்பி இரண்டையும் கைப்பற்றும் இடத்தில் நீடித்துவருகிறார்.

sunil narine

ஐபிஎல்லில் ஒரே வீரர் இரண்டு தொப்பிகளையும் கைப்பற்றியதே இல்லை என்ற நிலையில், இறுதிப்போட்டிவரை சுனில் நரைன் ஆடினால் புதிய வரலாற்றை படைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருந்துவருகிறது.

விராட் கோலிக்கு அவார்டு..

தொடக்க வீரராகவும், சுழற்பந்துவீச்சாளராகவும் எவ்வளவு வெற்றிகளை குவித்தாலும் விக்கெட்டின் போதும், சதத்தின் போதும் கூட மற்ற வீரர்களை போல் சுனில் நரைன் அதிகப்படியான உணர்வுகளை வெளிப்படுத்தியதே இல்லை. எப்போதும் முகத்தை ஒரே மாதிரியாக வைத்திருக்கும் சுனில் நரைனை ரசிகர்கள் கவுதம் கம்பீருடன் ஒப்பிட்டு கலாய்த்ததுண்டு.

அதேபோல் ஒருமுறை விராட் கோலி எதோ சொல்ல சுனில் நரைன் பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் “விராட் கோலி எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் இதுதான் மிகப்பெரிய சாதனை” என்றும், ”ஆர்சிபி அணி வெளியேறினாலும் பரவாயில்லை என்ன சொல்லி நரனை விராட் கோலி சிரிக்கவைத்தார் என்று கேட்டு சொல்லுங்கள்” என்றும் ரசிகர்கள் கேலியாக பதிவிட்டனர்.

இதனால் தான் எமோசனை வெளிப்படுத்தாமல் இருக்கிறேன்..

எதற்காக வெற்றிகளின் போதும் கூட தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கிறேன் என்று கூறிய சுனில் நரைன், தன்னுடைய தந்தை கூறியதை வெளிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் போட்காஸ்ட் நிகழ்வில் கலந்துகொண்ட சுனில் நரைன், “விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு கூட நீங்கள் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை?“ என்ற கேள்வியை எதிர்கொண்டார்.

அதற்கு பதிலளித்த சுனில் நரைன், “நான் வளரும் போது என்னுடைய அப்பாவிடமிருந்து ஒரு சிறந்த பாடத்தை பெற்றுக்கொண்டேன். நீ இந்த தருணத்தில் ஒருவரின் விக்கெட்டை வீழ்த்தினால், அடுத்தமுறை அதே வீரருடன் தான் மீண்டும் விளையாட போகிறாய். அதனால் கிடைக்கும் வெற்றியின் தருணம் ரசிப்பதற்கு மட்டுமே தவிர மிகைப்படுத்துவதற்கு கிடையாது” என்று தன்னுடைய தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட நல்ல பாடத்தை பகிர்ந்துள்ளார் சுனில் நரைன்.