kohli-gambhir PTI
T20

‘இந்த அபராதம் போதுமா?’ - விராட் கோலி, கம்பீர் வார்த்தை மோதலும், சுனில் கவாஸ்கரின் கோரிக்கையும்!

களத்தில் வார்த்தை மோதல்களில் ஈடுபடும் வீரர்களுக்கு ஒருசில போட்டிகளில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சங்கீதா

நடப்பு ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம், லக்னோ நகரில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி (01.05.2023) நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த பரபரப்பு வெற்றியைக் காட்டிலும் அதன்பிறகு, லக்னோ அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீர் மற்றும் பெங்களூரு அணி வீரரான விராட் கோலி வார்த்தைப் போரில் ஈடுபட்டதுதான் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், போட்டியின்போதும் லக்னோ அணி வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

LSG-RCB

மிகவும் மோசமாக மைதானத்தில் நடந்த இந்த சண்டையை அடுத்து, கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 சதவிகிதம் அபராதமும், நவீன்-உல்-ஹக்கிற்கு 50 சதவிகிதம் அபராதமும் பிசிசிஐ விதித்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்த விவகாரம் குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், “நேற்றைய (மே1, 2023) போட்டியை நேரலையில் நான் பார்க்கவில்லை. கொஞ்சம் நேரத்துக்கு முன்புதான் அந்த வீடியோவைப் பார்த்தேன். இந்த விஷயங்கள் ஒருபோதும் நன்றாக காட்சியளிக்காது. 100 சதவிகித போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டது என்றால் என்ன?; ஆர்.சி.பி. அணிக்காக லீக், அரையிறுதி, இறுதிப் போட்டி உள்பட விராட் கோலிக்கு 17 கோடி ரூபாய் ஊதியம் என்று வைத்துக்கொண்டால், அதாவது அபராதமாக ஒரு கோடி ரூபாய் பற்றி மட்டும் நீங்கள் பேசுகிறீர்கள். அவருக்கு ரூ.1 கோடியோ அல்லது அதற்கு மேலோ அபராதம் விதிக்கப்படுமா?. சரி, இதுகூட மிகவும் கடுமையான அபராதம் என்றே வைத்துக்கொள்வோம். கம்பீரின் நிலைமை (ஊதியம்) என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

LSG-RCB

இதுபோன்று மீண்டும் நிகழாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இது ஒரு கடுமையான அபராதம், தண்டனை என்பதால் இத்தகைய சம்பவம் நடக்காது என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால், முனைப்பாக விளையாட நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், போட்டித் தன்மையுடன் விளையாடுங்கள். நாங்கள் விளையாடிய காலத்தில் நட்புமுறையிலான கேலி பேச்சு கொஞ்சம் இருந்தது, ஆனால், நாம் இப்போது பார்க்கும் இந்த ஆக்ரோஷம் அப்போது இல்லை. தொலைக்காட்சியில் தற்போது எல்லாமே ஒளிப்பரப்பாவதால், சற்று கூடுதலாகவே சண்டையிட்டுக்கொள்ள நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.

ஆகவே ,இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்துக்கு இடையில் நடந்ததைப் போல இந்த சம்பவமும் நடந்திருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், ஓரிரு போட்டிகளில் இருந்து விலகுமாறு அவர்களிடம் கேட்க வேண்டும். இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்யவில்லையெனில், அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதுதான் கடினமான அபராதம்” என்று தெரிவித்துள்ளார்.

LSG-RCB

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது மொஹாலியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை அணிக்கு சச்சினுக்குப் பதிலாக தலைமை தாங்கிய ஹர்பஜன் சிங், போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கிக்கொண்டு வந்தபோது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரரான ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார். திடீரென கன்னத்தில் அறைந்ததும் அதிர்ச்சியான ஸ்ரீசாந்த், கண்ணீர் சிந்திய காட்சிகளும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து அந்த தொடர் முழுவதும் ஹர்பஜன் சிங் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஊதியத்தில் அபராதம் விதிக்காமல் களத்தில் மோதிக்கொள்ளும் வீரர்களுக்கு இதுபோன்று கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.