சஞ்சு சாம்சன் x
T20

‘இதனால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை..’! சஞ்சு சாம்சனை சாடிய சுனில் கவாஸ்கர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு எடுத்துச்செல்லாத கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரையும் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார்.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பை வெல்வதற்கான போட்டியில் 10 அணிகள் தீவிர பலப்பரீட்சை நடத்திய நிலையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” முதலிய 4 அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தின.

குவாலிஃபையர் 1 மோதலில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது.

Rajasthan Royals team

இந்நிலையில் எந்த அணி இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்விக்கு பதிலாக, குவாலிஃபையர் 2 சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியில் 176 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, வெல்லவேண்டிய இடத்திலிருந்த போட்டியை தங்களுடைய சுமாரான பேட்டிங் மூலம் கோட்டைவிட்டு வெளியேறியது.

16 வருடங்களாக கோப்பை வெல்லாமல் தடுமாறி வரும் ராஜஸ்தான் அணி, இந்தமுறை நிச்சயம் கோப்பை வெல்லும் என நினைத்த போது “யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக்” முதலிய 3 வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் கோப்பை வெல்லும் கனவை அடையமுடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது RR அணி.

நீங்கள் 500 ரன்கள் அடித்து என்ன பிரயோஜனம்!

போட்டியை வெல்லும் இடத்திலிருந்து கோட்டைவிட்ட சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரையும் விமர்சித்திருக்கும் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், நீங்கள் 500 ரன்கள் அடிப்பது முக்கியமல்ல, உங்கள் அணிக்கு கோப்பை வென்று தருவதே முக்கியம் என சாடியுள்ளார்.

Sanju Samson

RR தோல்வி குறித்து பேசியிருக்கும் சுனில் கவாஸ்கர், “500 ரன்கள் அடிப்பதால் என்ன பயன்? சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் தேவையற்ற நேரத்தில் ஆடம்பரமான ஷாட்களை விளையாடி வெளியேறினர். உங்கள் அணிக்காக முக்கியமான போட்டியில் வெல்ல முடியாவிட்டால், நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அது கணக்கிடப்படாது. கேப்டனாக இருந்தபோதும் கூட சாம்சன் பொறுப்பற்ற ஸ்ட்ரோக் விளையாடி வெளியேறினார்” என்று சாடியுள்ளார்.

sanju samson

மேலும் சஞ்சு சாம்சனிடம் இருக்கும் பிரச்னை குறித்து பேசிய அவர், "முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியாமல் போவதுதான் சஞ்சு சாம்சனிடம் இருக்கும் பிரச்னை. அதனால்தான் அவரால் இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. அவரிடம் சரியான ஷாட் தேர்வு இல்லை. அவர் அதை சரிசெய்து 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படவேண்டும்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சுனில் கவாஸ்கர் கூறினார்.