அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் pt web
T20

இந்தியாவுக்கு இதுதான் பிரச்னையே! டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இடம்பெற்ற 4 அணிகளின் நிறை,குறை என்ன?

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த 4 அணிகளின் நிறை, குறை மற்றும் வெற்றி தோல்வி விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PT WEB

ஆஃப்கானிஸ்தான்

டி20 கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் குறிப்பிட்ட அணிகள் மட்டுமே எப்போதும் வெற்றி பெறும் என்ற போக்கு மாறியுள்ளது. அதற்கு பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளது நடப்பு உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.

நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் குரூப் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், சூப்பர் 8 சுற்றில் பலமான ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியளித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது ஆப்கானிஸ்தான்.

rashid khan

முதல் அரையிறுதியில் தென்னாப்ரிக்க அணியை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தானின், பலமாக உள்ளது அந்த அணியின் பந்து வீச்சு. சுழற்பந்து வீச்சில் ரஷீத் கான், நூர் அகமது எதிரணி பேட்டர்களை திணறடிக்கின்றனர். பார்ட் டைம் பவுலராக உள்ள குல்பதின் நயிப், முக்கியமான நேரத்தில் வீழ்த்தும் விக்கெட்கள் எதிரணியின் ரன்ரேட்டை வெகுவாக குறைக்கிறது. அதேநேரத்தில் பேட்டிங்கில் தொடக்க வீரர்களான குர்பாஸ், ஷர்டான் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ஜொலிக்காதது பலவீனமாக பார்க்கலாம்.

தென்னாப்ரிக்கா

தென்னாப்ரிக்கா அணி, டிகாக், மார்க்ரம், கிளாசன், மில்லர் என்ற சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ரபாடா, மகாராஜ், நோர்க்யா என பலமாக இருந்தாலும், நடப்பு தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் தடுமாற்றத்துடனே விளையாடி வெற்றிப் பெற்றது. அதேபோல், நாக் அவுட் சுற்று என்றாலே அந்த அணி சோக் ஆகும் என்பது முந்தைய தொடர்களின் வரலாறாக பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் தென்னாப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடர்களில் நேருக்கு நேர் மோதிய 2 போட்டிகளிலும் தென்னாப்ரிக்காவே வெற்றி பெற்றுள்ளது. எனவே, அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என கணிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தை வீழ்த்தியிருப்பதும் கவனிப்படவேண்டியது.

Virat Kohli | Rohit Sharma

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பந்து வீச்சு என இரு அணிகளும் சம பலத்தில் உள்ளன. இந்திய அணியை பொறுத்தவரையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் (FORM) சற்று கவலையளிக்கிறது. அதேபோல், மிடில் ஆர்டர்களில் அதிரடியாக ரன்குவிக்க இந்தியா சற்று தடுமாறுகிறது. மற்றபடி ரோகித், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவது இந்தியாவுக்கு பலம். அதேபோல் பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். ஹர்திக் பாண்டியாவும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்துகிறார்.

இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சால்ட், பட்லர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அடுத்து வருபவர்கள் அதிரடியாக விளையாடுகின்றனர். ஆனால், ஒரே நேரத்தில் மொத்த வீரர்களும் சொதப்புவதையும் நடப்பு தொடரில் பார்க்க முடிந்தது. மார்க் வுட், ஆர்ச்சர் ஆகியோரின் வேகம் எதிரணிக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்துகிறது. அடில் ரஷீத்தின் பொறுப்பான பந்து வீச்சு அந்த அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.

உலகக் கோப்பை டி20 தொடர்களில் இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்தியா 2 முறையும், இங்கிலாந்து 2 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. கடந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கு நடப்பு தொடரில் பதிலடி கொடுக்குமா?