hasaranga cricinfo
T20

"நாங்கள் தோற்றதற்கு ஆடுகளத்தைக் காரணமாகச் சொல்ல விருப்பமில்லை" - இலங்கை கேப்டன் ஹசரங்கா!

2024 டி20 உலகக்கோப்பையில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, 4 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று படுமோசமாக தொடரிலிருந்து வெளியேறியது.

Viyan

2024 டி20 உலகக் கோப்பையின் குரூப் சுற்றுகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. பல அதிர்ச்சிகளைக் கொடுத்திருக்கும் இந்தத் தொடரில், பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருக்கின்றன. இந்தத் தொடரிலாவது கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கும் என்ற நினைத்திருந்த இலங்கை அணி படுமோசமாக விளையாடி வெளியேறியிருக்கிறது.

sri lanka

இந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் இலங்கை அணி ஐசிசி தொடர்களில் ஜொலித்துக்கொண்டிருந்தது. 2003 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி, 2007 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி, 2009 டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி, 2010 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி, 2012 டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி, 2014 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன், 2015 உலகக் கோப்பையில் காலிறுதி என தொடர்ந்து அசத்தியது. ஆனால் அதன்பிறகு எல்லாம் மாறிவிட்டது. இந்த 9 ஆண்டுகளில் பாதாளம் தொட்டிருக்கிறது இலங்கை.

ஒரே ஒரு வெற்றியுடன் வெளியேறிய இலங்கை..

தென்னாப்பிரிக்க அணியுடன் ஆடிய முதல் போட்டியில் வெறும் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இலங்கை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எப்படியும் இரண்டு அணிகள் அந்த குரூப்பில் இருந்து முன்னேறும் என்பதால், அந்தத் தோல்வி அவர்களை பாதித்திருக்காது. ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் தோற்று தங்கள் வாய்ப்பைப் பறிகொடுத்தது அந்த அணி. நேபாளத்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தாக, வெஸ்ட் இண்டீஸில் நடந்த போட்டியில் நெதர்லாந்தை மட்டும் வென்று இந்த உலகக் கோப்பையை வெறும் 3 புள்ளிகளோடு முடித்திருக்கிறது அந்த அணி.

sri lanka

அமெரிக்க ஆடுகளங்கள் அனைத்து அணிகளுக்குமே புரியாத புதிராகத் தான் இருந்தன. தென்னாப்பிரிக்கா, இந்தியா போன்ற அணிகளுமே சில கடினமான சூழ்நிலைகளை சந்தித்தன. அதுவும் இலங்கை அணி சொதப்பியதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆனால், இதுபோன்ற ஒரு பெரிய தொடரில் அதைக் காரணமாக சொல்லக் கூடாது என்று கூறியிருக்கிறார் இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா.

ஆடுகளத்தை காரணம் சொல்ல விரும்பவில்லை..

தங்கள் கடைசி லீக் சுற்றுப் போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், "நீங்கள் ஒரு போட்டியைத் தோற்றபிறகு ஆடுகளம் உள்பட பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் தொழில்முறை கிரிக்கெட் ஆடும் எங்களுக்கு அது சரியான விஷயம் அல்ல. ஏன் எங்களை எதிர்த்து விளையாடும் அணியும் கூட அதே ஆடுகளத்தில் தானே ஆடுகிறது. அதற்கு ஏற்ற மாதிரி எங்களின் ஆட்ட முறையை மாற்றிக்கொள்வது தான் எங்கள் வேலை. நாங்கள் ஒரு தேசிய அணிக்காக ஆடுகிறோம். அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டியது எங்கள் கடமை. அந்த சூழ்நிலைக்குத் தேவையான மாற்றங்களை செய்து எங்களால் சரியாக தகவமைத்துக்கொள்ள முடியவில்லை. அதுதான் எங்கள் அணியில் இருந்த மிகப் பெரிய பிரச்சனை என்று நினைக்கிறேன்.

ஹசரங்கா

அதேசமயம் நாங்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியிலிருந்து அதே நாட்டின் இன்னொரு பகுதிக்குச் செல்லும்போது ஆடுகளங்கள் அதே போல் இல்லை. பெரிய மாற்றங்கள் இருந்தன. ஒரு சில நாடுகளில், அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆடுகளங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. இதற்கெல்லாம் நாங்கள் முடிந்தவரை எங்களை தகவமைத்துக்கொண்டோம். இருந்தாலும், துருதிருஷ்டவசமாக எங்கள் முதல் போட்டி நியூ யார்க்கில் அமைந்துவிட்டது. அது எங்களுக்கு சரியாகப் போகவில்லை. இரண்டாவது போட்டிக்கு டாலாஸுக்கு சென்ற நாங்கள் அதற்கு ஏற்றதுபோல் சரியாக விளையாடவில்லை. ஒரு அணியாக, கேப்டனாக, நாங்கள் இந்தத் தோல்விகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று கூறினார்.

இலங்கை அணி சரிசெய்ய வேண்டியது என்ன?

மேலும், 10 நாள்களுக்கு முன்பே தங்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவித்தார் ஹசரங்கா. "எங்கள் வீரர்களை 10 நாள்களுக்கு முன்பே இங்கே கொண்டுவந்து சேர்த்து எங்கள் பயிற்சிக்கான முகாம்களை ஏற்படுத்திக் கொடுத்த எங்கள் கிரிக்கெட் வாரியத்துக்கு கட்டாயம் நன்றி சொல்லியாகவேண்டும். இந்த சூழ்நிலைகளுக்கு, வானிலைக்கு, இந்த நேரத்துக்கு எல்லாம் செட் ஆக அந்த அவகாசம் நிச்சயம் அவசியம்" என்று கூறினார் இலங்கை கேப்டன்.

sl vs afg

ஆனால் அந்த அணி தங்களின் பயிற்சிப் போட்டிகளை ஃப்ளோரிடாவில் விளையாடியது. முக்கியமான தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசப் போட்டிகள் நியூ யார்க்கிலும் டெக்சாஸிலும் நடந்தன. அந்த இடங்களுக்கு மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றன. ஆக, அந்த 10 நாள் பயிற்சி அவர்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இந்த ஆடுகளம், சூழ்நிலை எல்லாம் கடந்து, இலங்கை அணியின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாகவே படுமோசமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சமீப காலங்களில் இதுவே அவர்களின் சிறந்த பௌலிங் யூனிட் என்று கருதப்பட்டது. ஆனால், பேட்டிங் ஒட்டுமொத்தமாக அவர்கள் காலை வாரியது. ஒவ்வொரு தொடரிலும் அதுவே நடந்துகொண்டிருக்கிறது. எப்போது அந்த அணியின் பேட்டிங் சீரான செயல்பாடுகளைக் கொடுக்கத் தொடங்குகிறதோ அப்போது தான் இலங்கையால் இந்த சரிவிலிருந்து மீள முடியும்.