இலங்கை தம்புள்ளையில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 மகளிர் ஆசியக்கோப்பை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மட்டுமே 60 ரன்களை எடுத்தார். இது அவரது 26 ஆவது சர்வதேச டி20 அரைசதமாகும். தனது 100 ஆவது டி20 போட்டியில் விளையாடிய ஜெமிமா 16 பந்துகளில் 29 ரன்களையும், ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 30 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணியில் கவிஷா தில்ஹரி 2 விக்கெட்களை எடுத்தார்.
பேட்டிங்கிற்கு உகந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் என்பது மிகவும் குறைவான இலக்காகவே பார்க்கப்பட்டது. ஸ்மிருதி மந்தனா சற்று நிலைத்தாலும், ஷெபாலி, உமா, கேப்டன் ஹர்மன் என யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. பவர் ப்ளேவில் ஸ்மிருதி அதிரடியாக ஆடினார். 19 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்தார். விக்கெட்கள் விழவிழ அவரது ரன் வேகமும் குறைந்தது. பின் வரிசையில் வந்த ஜெமிமா, ரிச்சா அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 160 எனும் போதுமான இலக்கை எட்டியது.
166 எனும் இலக்கை விரட்டிய இலங்கை அணி நிலையாக அதேசமயத்தில் அதிரடியாக ஆடியது. கேப்டன் சமாரி அதபத்து மற்றும் ஹர்ஷிதா இணைந்து இந்திய அணியின் பந்துவீச்சை ஒன்றும் இல்லாமல் ஆக்கினர். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் 5 ஓவர்களில் ஆட்டம் இந்திய அணியின் பக்கமே இருந்தது. ஆனால் பவர் ப்ளேவின் இறுதி ஓவரில் மட்டும் இலங்கை அணி 16 ரன்களை எடுத்தது. அப்போதில் இருந்தே சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தவண்ணம் இருந்தனர். 61 ரன்களில் சமரி அதபத்து தனது விக்கெட்டை இழந்தாலும், பின் வந்த கவிஷா தில்ஹரி அதைவிட அதிரடியாக ஆடி இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்திய பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. மகளிர் டி20 ஆசிய கோப்பை வரலாற்றில் இன்னிங் ஒன்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார் ராதா யாதவ். அவர் விக்கெட் ஏதும் எடுக்காமல் 47 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி, மகளிர் ஆசியக்கோப்பை வரலாற்றில் தனது முதல் கோப்பையை வென்றுள்ளது. முதல் கோப்பையை வெல்வதற்கு இலங்கை அணி 6 பைனலில் போராடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “நாங்கள் தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை ஆடினோம். ஆனால் இன்று நாங்கள் தடுமாறினோம். அதற்கான விலையைக் கொடுத்துள்ளோம். இலங்கை அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. அவர்கள் நீண்ட காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். தொடர் முழுவதும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு இன்னும் சில பகுதிகளில் முன்னேற்றம் காணவேண்டும்” என தெரிவித்தார்.