அந்நியன் படத்தில் அம்பி குளித்து சுத்தபத்தமாய் கிளம்பி அவர் பாட்டுக்கு டிவிஎஸ் 50யில் ஒரே நேர்க்கோட்டில் முன்னேறிப் போய் கொண்டிருப்பார். எங்கிருந்தோ வரும் ஒருவர் செவனேவென சென்று கொண்டிருக்கும் அம்பி மீது எச்சில் துப்பிவிட்டுப் போவார். அதையும் துடைத்துப் போட்டுவிட்டு முன்னால் செல்வார். ட்ராஃப்பிக்கில் இவர் ஹேண்ட் சிக்னல் காட்டியும் இவரை ஓவர்டேக் செய்து பறக்கும் ஒரு ஆட்டோ. மனம் நொந்தபடி வண்டியை உருட்டியபடி இன்னமும் முன்னே செல்வார். சட்டென பிரேக் வயர் கட்டாகி தண்ணி லாரிக்குள் விழப்போய் நூலிழையில் தப்பி ஒரு குழியில் விழுவார். ஐ.பி.எல்லில் சன்ரைஸர்ஸ் அப்படித்தான்.
பேப்பரில் கன் டீமாக இருக்கும். 'இந்த டீம் ப்ளே ஆப் போகலன்னா வேற யாரு போவா? என கிரிக்கெட் வல்லுநர்களும் ஆரூடம் சொல்வார்கள். வீரர்களும் களத்தில் முடிந்தவரை எல்லாவற்றையும் சரியாகவே செய்வார்கள். ஆனால் அணிக்கு வெளியே யாரோ சிலர் செய்யும் தவறுகள் இவர்களை பதம் பார்க்கும். 'அய்யோ லோகத்துல யாருக்கும் பொறுப்பே இல்லையா?' என இவர்கள் பெருமாளிடம் முறையிட வேண்டியதில்லை. அணி நிர்வாகத்திடம் முறையிட்டாலே போதும். காரணம், அத்தனைக் குளறுபடிகளுக்கும் அணி நிர்வாகமே முதன்மைக் காரணம்.
ஷார்ட் பார்மட் என்றாலுமே டி20 லீக்குகளில் ஒரு அணி தொடர்ந்து பல சீசன்கள் நன்றாக ஆட வீரர்களுக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு அதிகளவு தேவை. சி.எஸ்.கேவின் பத்ரிநாத் அடிக்கடி சொல்வாரே, 'ச்சே தோனி நம்ம மேல வைக்கிற நம்பிக்கை ஒண்ணுக்காகவே அவருக்கு உயிரையே கொடுக்கலாம்னு தோணும்' என. அதுதான் டி20 லீக்குகளைப் பொறுத்தவரை சக்ஸஸ் ஃபார்முலா. சென்னை, மும்பை தொடங்கி இப்போது ராஜஸ்தான் கூட அதையேதான் பின்பற்றுகிறது. ஆனால் சன்ரைஸர்ஸ் அணி நிர்வாகமோ ஒவ்வொருமுறையும் ஏலத்தில் நன்றாக திட்டமிட்டு அணியை தேர்ந்தெடுப்பார்கள். அதிலெல்லாம் குறையே சொல்ல முடியாது. ஆனால் அப்படி எடுக்கப்படும் வீரர்களுக்கு அதிகபட்சம் நான்கு, ஐந்து ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பு தருவார்கள். அதில் ஃபெர்பார்ம் செய்யாவிட்டால் அவர் டி20 ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தாலுமே தூக்கியடிப்பார்கள். வார்னர் தொடங்கி வில்லியம்சன் வரை இதே கதைதான். கடந்த சில சீசன்களாக அணி ரொம்பவே சொதப்ப இதுவே பிரதானக் காரணம். அதுவும் கடந்த நான்கு சீசன்களில் மட்டும் நான்கு கேப்டன்கள் மாறியிருக்கிறார்கள். நான்கு பயிற்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள்.
இந்தமுறையும் கேப்டன் பொறுப்பை வலுக்கட்டாயமாக மார்க்ரமிடமிருந்து பிடுங்கி பேட் கம்மின்ஸ் வசம் ஒப்படைத்திருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் பேட் கம்மின்ஸ் அருமையான கேப்டன் தான். ஆனால் சர்வதேச அரங்கில் சாதிக்கும் கேப்டன்கள் ஐ.பி.எல்லிலும் சாதிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. பாண்டிங், மார்கன் என இதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. இவ்வளவு டிராமாவையும் தாண்டி கம்மின்ஸ் சாதிப்பாரா? அவரின் அணியிடம் கோப்பையை வெல்லும் வலு இருக்கிறதா?
'பதிமூணு கார்டுமே ஜோக்கரா இருந்தா எப்படிப்பா?' என்பதுபோலத்தான் இருக்கிறது சன்ரைஸர்ஸின் ஃபாரீன் பிளேயர்கள் பட்டியல். உலகக்கோப்பையை வென்ற கேப்டன் கம்மின்ஸ், உலகக்கோப்பையை அவருக்கு வென்று கொடுத்த டிராவிஸ் ஹெட், சவுத் ஆப்ரிக்கா டி20 லீக்கில் தொடர்ந்து இரண்டுமுறை கோப்பை வென்றுகொடுத்த மார்க்ரம், 'பார்த்தாலே பந்து பறக்கும்' ரக பவர்ஹிட்டர் க்ளாஸன், பவுலிங் ஆல்ரவுண்டரான மார்க்கோ யான்சன் ஒருபக்கம், பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் கலக்கும் க்ளென் பிலிப்ஸ், இலங்கையின் ஸ்பின் கிங் ஹஸரங்கா, ஆப்கனின் நம்பிக்கை நட்சத்திரம் ஃபஸல் அல் பரூக்கி என எட்டு வீரர்களும் எட்டுத்திசையிலும் பாய்ந்து வெற்றி தேடித்தரக்கூடியவர்கள். இதில் எந்த நான்கு பேரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் அணி நிர்வாகத்திற்கு தலைவலிதான் என்றாலும் இப்படி ஒரு சுகமான தலைவலியைத் தாங்க யாருக்குத்தான் பிடிக்காது?
இந்திய பவுலிங் மும்மூர்த்திகளான புவி, நடராஜன், உம்ரான் மாலிக்கிற்கு பேக்கப் வேண்டுமா? இருக்கவே இருக்கிறார்கள் உனட்கட், ஆகாஷ் சிங் போன்ற பவுலர்கள். ஸ்பின்னர்களுக்கு சப்போர்ட் வேண்டுமா? ஷபாஸ் அகமது, மயாங்க் மார்க்கண்டே பார்த்துக்கொள்வார்கள். டாப் ஆர்டரில் இறங்க ஆள் வேண்டுமா? அன்மோல்ப்ரீத் சிங் போதுமே. லோயர் ஆர்டரில் இந்திய ஆல்ரவுண்டர் தேவையா? மண்ணின் மைந்தன் நிதிஷ் குமார் ரெட்டி இருக்கக் கவலை ஏன்?
இப்படி எல்லா ஏரியாக்களிலும் பக்காவான இந்திய பேக்கப் இருப்பது அணிக்கு பெரிய பலம்.
ஃபாரீன் வீரர்களுக்கு இணையாக உள்ளூர் வீரர்களுக்கும் அனுபவம் இருந்தால் மட்டுமே அணி சமநிலையோடு இருக்கும். ஆனால் சன்ரைஸர்ஸ் அணியில் அதுதான் பிரச்னை. அபிஷேக் சர்மா, அப்துல் சமத், அன்மோப்ரீத் சிங் என ப்ளேயிங் லெவனில் ஆட வாய்ப்பிருக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் முக்கால்வாசிப் பேருக்கு போதிய அனுபவம் இல்லை என்பது ஒரு சின்ன சிக்கல். ஒருவேளை இவர்களில் யாரும் க்ளிக்காகவில்லையென்றால் முழு பாரமும் வெளிநாட்டு வீரர்கள் மீது இறங்கிவிடும்.
கடந்த சீசனில் அணிக்கு பெரிய சிக்கலாய் இருந்தது டெத் ஓவர் பவுலிங் தான். புவி, நடராஜன், மாலிக் மூவரும் முறையே 8.33, 9.11, 10.85 என எகானமி வைத்திருந்தார்கள். இந்தமுறை பேட் கம்மின்ஸ் டெத் ஓவர் பவுலர் பொறுப்பையும் கூடுதலாக சுமக்க நேர்ந்தால் அவரால் முழுவீச்சில் விளையாட முடியுமா என்பது சந்தேகமே.
மயாங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் த்ரிபாதி, மார்க்ரம், க்ளாஸன், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், ஹஸரங்கா, பேட் கம்மின்ஸ், புவனேஸ்வர் குமார், நடராஜன்.
உலகம் முழுக்க சுற்றி பந்தைத் தூக்கியடித்துத் தொலைப்பதையே முழுநேர வேலையாய் பார்த்துக்கொண்டிருக்கும் க்ளாஸன் தான் இந்த முறை கவனிக்கப்பட வேண்டிய பிளேயர். கடந்த சீசனில் 12 போட்டிகளில் 448 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 177. அதன்பின் ஆடியிருக்கும் 22 டி20 இன்னிங்ஸ்களில் 648 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 195.77. இப்படி முரட்டுத்தனமான ஃபார்மோடு களமிறங்கும் க்ளாஸனிடம் அகப்பட்டால் எதிரணிகள் சின்னாபின்னம்தான்.
உம்ரான் மாலிக் - அணியில் ஒரு அதிவேக பந்துவீச்சாளர் தேவைப்படுவார். அப்போது உம்ரான் ஆட வாய்ப்பிருக்கிறது.
உனட்கட் - நடராஜனுக்கு மாற்றாகவோ துணையாகவோ டெத் ஓவர் பவுலிங்கை பார்த்துக்கொள்ள!
ட்ராவிஸ் ஹெட் ஆடுவதாக இருந்தால் ஓபனிங் பேட்ஸ்மேனாகத்தான் ஆட முடியும். ஆனால் முன் சொன்னதுபோல மயாங்க், அபிஷேக், அன்மோல்ப்ரீத் சிங் என ஓபனிங்கிற்கு ஆப்ஷன்கள் இருக்கின்றன. மிடில் ஆர்டரில்தான் இந்திய பேட்ஸ்மேன்கள் இல்லையென்பதால் அங்கே இரு அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம். அந்த இருவர் மார்க்ரமும் க்ளாஸனும். இன்னொரு காரணம், தொடர்ந்து இரண்டு முறை சவுத் ஆப்ரிக்கா லீக்கில் தங்களுக்காக கோப்பை வென்றுகொடுத்த மார்க்ரமை சென்டிமென்ட் கருதியாவது ஆடவிடுவார்கள் எனத் தோன்றுகிறது. எதிர்காலத்திற்கு அவர் தேவையாயிற்றே! க்ளென் ஃபிலிப்ஸ்ஸை பொறுத்தவரை அவரை சப்ஸ்ட்டியூட் பீல்டராக களமிறக்கினாலே போதும். 10, 20 ரன்களை அணிக்கு மிச்சம் செய்து கொடுத்துவிடுவார்.
விமர்சனங்கள் கிளம்பும், அணியை பாதிக்கக்கூடும் எனத் தெரிந்தே கம்மின்ஸ் கேப்டன் என்கிற அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறது சன்ரைஸர்ஸ். கம்மின்ஸ் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவிட்டால் சரி. இல்லையென்றால் தங்களுக்கு கோப்பை வென்றுகொடுத்த மார்க்ரமையும் பகைத்துக்கொண்டது போலாகிவிடும். வேறென்ன, நிச்சயம் ப்ளே ஆப்பிற்குள் நுழையும் அளவிற்கு கெத்தான அணிதான். ஆனால் அணி நிர்வாகம் அந்த கெத்தை கொத்து பரோட்டா போடாமல் இருந்தால் மட்டும் போதும். பார்ப்போம் என்ன நடக்கிறதென!