IPL 2 Bouncer Rule  web
T20

Spinners-க்கு உதவுவது பற்றி யாராவது யோசிப்பார்களா? ஐபிஎல் 2 பவுன்சர் விதி குறித்து SA வீரர் கேள்வி!

2024 ஐபிஎல் தொடரில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் 2 பவுன்சர்கள் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Rishan Vengai

டி20 ரசிகர்களை சீட் நுனியில் அமரவைத்து பார்க்க வைப்பதிலும், விரல் நகங்களை கடிக்கவைக்கும் சுவாரசியத்தை கூட்டுவதிலும் ஐபிஎல் தொடரை அடித்துக்கொள்ள வேறு எந்த டி20 தொடர்களும் இல்லை. அதனால் தான் ஐபிஎல் தொடரானது உலகளவில் நம்பர் 1 டி20 லீக் தொடராக இன்றளவும் இருந்துவருகிறது. அதற்கு மிகப்பெரிய காரணம் என்றால், ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் புதியபுதிய அப்டேட்கள் மற்றும் விதிமுறை மாற்றங்கள் தான் ஐபிஎல்லை தொடர்ந்து நம்பர் 1 லீக்காகவே வைத்துள்ளது.

Impact Player Rule

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் அறிமுகமான ”இம்பேக்ட் வீரர்” விதிமுறை பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ”2 பவுன்சர்கள் விதி, SRS சிஸ்டம்” முதலிய புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் எனப்படும் SRS அப்டேட்டின் ரிசல்ட்டை பார்க்க இன்னும் சரியான சூழல் அமையாத நிலையில், கடந்த 3 போட்டிகளிலேயே 2 பவுன்சர்கள் விதிமுறை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், உதவியாகவும் அமைந்துள்ளது.

2 பவுன்சர்கள் விதிமுறை என்றால் என்ன?

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் பவுலர்கள் ஒரு பவுன்சர் வீச மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இரண்டாவது பவுன்சர் வீசினால், நோ-பால் வழங்கப்படும். ஆனால் தற்போது பேட்ஸ்மேன்கள் கேம் என்று அழைக்கப்படும் டி20 போட்டிகளில், சமநிலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசும் விதிமுறை 2024 ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Bouncer Rule

இதன்படி, ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்களை பவுலர்கள் வீசுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்தவிதிமுறை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர் கையாளும் ஒரு ஆயுதமாக மாறியுள்ளது.

இந்தவிதிமுறை குறித்து பேசியிருந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான், ‘ஒவ்வொரு அணியிலும் குறிப்பிட்ட பேட்டர்களை குறிவைத்து தாக்குதலுக்கு உட்படுத்த இரண்டு பவுன்சர்கள் விதி பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ஸ்பின்னர்கள் குறித்து யாராவது யோசீப்பார்களா?

இந்நிலையில் தான் வேகப்பந்துவீச்சாளர்களுக்காக யோசிப்பவர்கள், ஸ்பின்னர்கள் குறித்தும் யோசிப்பார்களாக என்ற கேள்வியை தென்னாப்பிரிக்கா சுழற்பந்துவீச்சாளர் ஷாம்சி வைத்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஷாம்சி, “ஏதாவது விதி மாற்றங்களுடன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவுவது பற்றி யாராவது எப்போதாவது யோசிப்பார்களா?” என்று பதிவிட்டுள்ளார். இது பார்ப்பதற்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும் ஸ்பின்னர்களுக்கான பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.