2024 டி20 உலகக்கோப்பை தொடரானது பல அதிர்ச்சி தோல்விகள், குறைவான ரன்கள் கொண்ட ஆட்டங்களால் பரபரப்பாக நடந்துவருகிறது.
அபாரமாக செயல்பட்ட கத்துக்குட்டி அணிகளான அமெரிக்கா, ஸ்காட்லாந்து முதலிய அணிகள் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்து வருகின்றனர். அமெரிக்காவிடம் தோற்றதால் பாகிஸ்தானின் வெளியேற்றமும், ஸ்காட்லாந்தின் தோல்வியே இல்லாத ஆட்டத்தால் இங்கிலாந்தின் வெளியேற்றமும் கிட்டத்தட்ட கத்திமுனையில் தொங்கிக்கொண்டுள்ளது.
அதேபோல இலங்கை அணியின் இரண்டு தோல்விகள் அந்த அணியை வெளியேறும் நிலைக்கு தள்ளியுள்ளது. இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள தென்னாப்பிரிக்காவை இன்று வங்கதேசம் வீழ்த்தினால், இலங்கை அணியின் வெளியேற்றமும் நிகழும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
நேற்று இந்தியா-பாகிஸ்தான் மோதிய அதே ஆடுகளத்தில், தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
எப்படியும் குறைவான ரன்கள் தான் வரும், நேற்றைய போட்டியில் இந்தியா டிஃபண்ட் செய்ததைபோல செய்துவிடலாம் என நினைத்ததோ தெரியவில்லை, ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வங்கதேச பவுலர்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
டிகாக் அதிரடியாக தொடங்கினாலும் சிறப்பாக பந்துவீசைய தன்சிம் ஹாசன், டாப் ஆர்டர்களான டிகாக்கை வெளியேற்றியதுடன், ஹென்ரிக்ஸ், ஸ்டப்ஸ் இருவரையும் 0 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார். அடுத்து பந்துவீச வந்த டஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளை வீச, முஸ்தஃபிசூர் டைட்டாக பந்துவீசி ரன்கள் செல்லவிடாமல் பார்த்துக்கொண்டார். அதிகபட்சமாக க்ளாசன் 46 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா அணி.
114 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிவரும் வங்கதேச அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளுடன் 43 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.