போட்டி எண்: 4 - இலங்கை vs தென்னாப்பிரிக்கா
குரூப்: டி
மைதானம்: நசௌ கவுன்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூ யார்க்
போட்டி தொடங்கும் நேரம்: இந்திய நேரப்படி இரவு 8 மணி
இலங்கையைப் பொறுத்தவரை அவர்களால் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு சவால் கொடுக்க முடியும் என்றால் அது அவர்கள் பௌலிங் யூனிட்டை வைத்துத்தான். கேப்டன் வனிந்து ஹசரங்கா டி20 ஃபார்மட்டில் மேட்ச் வின்னராகத் திகழக்கூடியவர். அனைத்து ஃபேஸ்களிலும் பந்துவீசக்கூடிய தீக்ஷனா, சரியான களம் கிடைத்தால் எந்த பேட்ஸ்மேனையும் சோதிப்பார். அதைவிட பதிரானா, நுவான் துசாரா என இரு 'மினி மலிங்கா'க்கள் இருக்கிறார்கள். அவர்களின் வேரியேஷன்கள் நிச்சயம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.
பேட்டிங்கில் இலங்கை அணிக்கு எந்த நாளில் எப்படியான செயல்பாடு வரும் என்று சொல்ல முடியாது. சரித் அசலன்கா, குசல் மெண்டிச் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். கமிந்து மெண்டிஸ் சமீபமாக நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கிறார். அதேபோல் மிடில் ஆர்டரில் மேத்யூஸின் அனுபவம் அந்த அணிக்குப் பலமாக இருக்கலாம். நம்பிக்கை கொடுக்கக்கூடியவர்கள் அணி முழுக்க இருந்தாலும், யார் எப்போது எப்படி ஆடுவார்கள் என்பது தான் அந்த அணிக்குப் பிரச்னையே!
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை அவர்களின் பேட்டிங் தான் மிகப் பெரிய பலம். இந்த உலகக் கோப்பையில் ஆடும் அணிகளிலேயே மிகச் சிறந்த பேட்டிங் லைன் அப் கொண்ட அணி என்றே சொல்லலாம். குவின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், ஹெய்ன்ரிக் கிளாசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் என தனி ஆளாக ஆட்டத்தைப் புரட்டிப் போடக்கூடிய உலகத்தர பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் நிரம்பியிருக்கிறார்கள். அதில் டி காக் தவிர்த்து அனைவருமே அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார்கள். அதிலும் கிளாசன், ஸ்டப்ஸ் இருவரும் மிடில் ஆர்டரில் இருக்கிறார்கள் என்பது எந்த அணியின் பௌலிங் ஆர்டரையுமே அலற வைக்கும். இருவருமே பேஸ், ஸ்பின் இரண்டையுமே அசால்ட்டாக பறக்கவிடக்கூடியவர்கள்.
ஐபிஎல் அரங்கில் தடுமாறிய டி காக் கூட தென்னாப்பிரிக்க ஜெர்ஸியைப் போட்டுவிட்டால் அடித்து நொறுக்கிவிடுவார். மீதமிருக்கும் அந்த ஒரு ஓப்பனிங் ஸ்லாட்டுக்கும் கூட நல்ல ஃபார்மில் இருக்கும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அல்லது ரயன் ரிக்கில்டன் ஆகியோரில் ஒருவர் தான் ஆடப் போகிறார்கள். அதனால் அவர்களின் பேட்டிங் யூனிட்டைக் கட்டுப்படுத்துவது எந்த அணிக்குமே மிகப் பெரிய சவால் தான்.
கேஷவ் மஹராஜ், ஷம்ஸி ஆகியோரின் சுழற்பந்து வீச்சு அந்த அணிக்கு மிடில் ஓவர்களில் பெரும் பலம். வேகப்பந்துவீச்சு தான் அந்த அணிக்கு ஒரு பிரச்னையாக இருக்கலாம். ரபாடா காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். நார்கியா கடைசியாக நன்கு செயல்பட்டு சிலபல மாதங்கள் ஆகின்றன. யான்சன் இந்த ஃபார்மட்டில் ரன்களை வாரி வழங்கக்கூடியவர். வேக்கபந்துவீச்சாளர்கள் சரியாக செயல்பட்டால் அந்த அணியை யாராலும் தடுக்க முடியாது.
இலங்கை: பதும் நிசன்கா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), கமிந்து மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, சரித் அசலன்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா (கேப்டன்), மஹீஷ் தீக்ஷனா, நுவன் துஷாரா, மதீஷா பதிரானா
தென்னாப்பிரிக்கா: குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹெய்ன்ரிக் கிளாசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், ககிஸோ ரபாடா, ஜெரால்ட் கொட்சியா, கேஷவ் மஹராஜ், தப்ராய்ஸ் ஷம்ஸி,
இலங்கை - வனிந்து ஹசரங்கா: டி20 ஃபார்மட்டில் மிகப் பெரிய மேட்ச் வின்னராக உருவெடுத்திருக்கிறார். காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர், இப்போது கேப்டனாகவும் இருக்கிறார். அவர் மீது அளவு கடந்த நம்பிக்கையும், அதற்கும் அதிகமான எதிர்பார்ப்பும் இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா - ஹெய்ன்ரிக் கிளாசன்: ஹசரங்காவுக்கும் கிளாசனுக்குமான யுத்தம் இந்தப் போட்டியில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஸ்பின்னை சிறப்பாக ஆடக்கூடிய வீரரான கிளாசன், ஐபிஎல் தொடரில் ஸ்பின்னர்களை அட்டாக் செய்து சிலபல முறை அவுட்டும் ஆகியிருக்கிறார். அதனால் இந்த இவர்களுக்குள்ளான போட்டி இந்த ஆட்டத்தின் முடிவில் பெரிய தாக்கம் ஏற்படுத்தும்.
தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 75 சதவிகித வாய்ப்பு இருக்கிறது.