ரோகித், கங்குலி எக்ஸ் தளம்
T20

T20WC Final |”இந்த ஃபைனலிலும் தோற்றால் பார்படாஸ் பெருங்கடலில் ரோகித் குதித்துவிடுவார்” - கங்குலி

Prakash J

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிச் சுற்றுகளில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்ரிக்காவும், இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியாவும் இன்று, இறுதிப்போட்டியில் களம்காண இருக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் லீக் சுற்று முதல் தோல்வியைத் தழுவாமலேயே சென்றிருப்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த நிலையில், ”6 மாத இடைவெளியில் இரண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோல்வியடைய நேரிட்டால் பார்படாஸ் பெருங்கடலில் ரோகித் சர்மா குதித்துவிடுவார்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: குஜராத்| பிரதமர் மோடியால் 2023-ல் திறக்கப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்துவிழுந்து விபத்து!

இதுகுறித்து அவர், ”ரோகித்தைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்கூடக் கிடையாது. ஆனால், அவர் இந்திய அணியை தோல்வியே சந்திக்காமல் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய அணியை தோல்வியே காணாமல் இறுதிப்போட்டி வரை வழிநடத்தியுள்ளார்.

தற்போது அவரது தலைமையின்கீழ் இந்திய கிரிக்கெட் வளர்ச்சியடைவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. 6 மாத இடைவெளியில் இரண்டு உலகக் கோப்பைகளை இழப்பதை ரோகித் சர்மா விரும்பமாட்டார் என நினைக்கிறேன். 6 மாத இடைவெளியில் இரண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோல்வியடையும் நிலை வந்தால், அவர் பார்படாஸில் உள்ள பெருங்கடலில் குதித்துவிடுவார்.

இந்திய அணியை அவர் சிறப்பாக முன்னின்று வழிநடத்தி வருகிறார். நாளை (இன்று) நடைபெறும் இறுதிப்போட்டியிலும் அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மாலத்தீவு | அதிபருக்கு சூன்யம் வைத்ததாக 2 அமைச்சர்கள் உள்பட 4 பேர் கைது - விசாரணை தீவிரம்!