Suryakumar Yadav - Akash Madhwal Twitter
T20

“அவர் மொத்தம் 10 விக்கெட் எடுக்க விரும்புகிறார்”- மத்வாலை ட்ரோல் செய்த SKY! என்ன சொன்னார் தெரியுமா?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில், 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை வீரர் மத்வால் புதிய சாதனை படைத்திருந்தார்.

Rishan Vengai

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் மத்வால், நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தன் ‘வாழ்நாள் சாதனை’ போன்ற பவுலிங் திறமையை வெளிப்படுத்தினார். வேரியேஷன் (Variation) மற்றும் நல்ல லென்த் (Length) வீசும் பந்துவீச்சாளர்களுக்கு சென்னை ஆடுகளம் எந்தளவு சிறப்பான களம் என்பதை, தன்னுடைய அற்புதமான பவுலிங் மூலம் எடுத்துக்காட்டினார் மத்வால். அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர், 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.

ஒரே போட்டியில் 3 சாதனைகள் படைத்த மத்வால்!

பிளே ஆஃப் போட்டியில் 3.3 ஓவர்களில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 17 டாட் பந்துகளை வீசிய அவர், 1.4 எகானமி ரேட்டுடன் ஒரு அற்புதமான ஸ்பெல்லை வீசினார். இதன்மூலம் லக்னோ அணிக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் 3 சாதனைகளை எடுத்துவந்தார் மத்வால்.

Akash Madhwal

அவை...

* 2009ஆம் ஆண்டு 1.5 எகானமி ரேட்டுடன் 5 ரன்களில் 5 விக்கெட்டை எடுத்திருந்த அனில் கும்ப்ளே சாதனையை, 1.4 எகானமியுடன் உடைத்திருக்கிறார் மத்வால்.

* பிளே ஆஃப் சுற்றில் இப்படியொரு சாதனையை இதற்கு முன்னர் எந்த வீரரும் செய்ததில்லை.

* இந்திய அணியின் கேப் வாங்காத ஒரு UnCapped வீரர் வீசிய மிகச்சிறந்த பவுலிங் இதுவாகும்.

இது என்னுடைய சிறந்த பந்துவீச்சு இல்லை! - மத்வால்

போட்டி முடிந்த பிறகு மும்பை அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ், ஆகாஷ் மத்வாலோடு நேர்காணல் நடத்தினார். அப்போது அவருடைய அற்புதமான பவுலிங் குறித்து கேட்ட சூர்யகுமார் யாதவிடம், “நான் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன். இந்த புள்ளிவிவரங்கள் எனக்கு பெரிதாக இல்லை, நான் இன்னும் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்” என்று கூறினார்.

மேலும் “ரோகித் Bhaiya நான் சிறப்பாக பந்துவீச பெரிதும் உதவியாக இருந்தார். நாங்கள் ஹோட்டலில் இருந்த போது போட்டியில் என்ன செய்யவேண்டும் என்று நிறைய கலந்துரையாடினோம். அப்போது அவர் உன்னுடைய Length-களில் மட்டும் கவனமாக இரு, சென்னை ஆடுகளம் உனக்கு தேவையானதை அதுவே கொடுக்கும் என்று கூறினார். ஆடுகளத்தின் தன்மையையும், எந்த நேரத்தில் எப்படி வீச வேண்டும் என்பதையும் அவர் எனக்கு கூறினார். அதற்கு பிறகு என்னுடைய நோக்கத்தில் நான் தெளிவாக இருந்தேன்” என்று தெரிவித்தார்.

“10 விக்கெட் எடுக்க விரும்புறிங்களா?”- மத்வாலை கிண்டல் செய்த சூர்யகுமார்

“இந்த புள்ளிவிவரங்கள் எனக்கு பெரிதாக இல்லை, நான் இன்னும் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்” என்று மத்வால் கூற இடையில் குறுக்கிட்ட சூர்யகுமார், “என்னது இதுவே பெரிசு இல்லையா? அப்போ 10 விக்கெட் எடுக்க விரும்புறிங்களா?” என கிண்டல் செய்தார்.

Suryakumar Yadav - Akash Madhwal

மேலும் “அவர் இப்போது ரொம்ப அடக்கமாக இருக்கிறார், மேலும் சிறப்பாக வீசி 10 விக்கெட்டுகளை எடுக்க விரும்புகிறார்” என்று ட்ரோல் செய்த சூர்யா, மத்வாலின் சிறப்பான பந்துவீச்சு அணிக்கு தேவையான நேரத்தில் வந்தது என்று பாராட்டினார். இவர்களுடைய நேர்காணலை ஐபிஎல் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.