2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பைக்கு அழைத்து சென்ற கேப்டனாக இருந்த போதும், அந்த அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற ஸ்டார் இந்திய வீரர்கள் 2025 ஐபிஎல் ஆக்சனில் ஏலத்திற்கு வருவது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றம் குறித்து பேசியிருந்த கேகேஆர் அணி சிஇஒ, “இரண்டு தரப்பில் யாரோ ஒருவர் தங்கள் மதிப்பை மேலும் சோதிக்க விரும்புகிறார்கள். அது இறுதியில் ஒரு முடிவை பாதிக்கிறது. ஆனால் அனைத்து காரணங்கள் எல்லாம் கடந்து ஸ்ரேயாஸ் ஐயர் எங்களின் முதல் தக்கவைக்கும் வீரராக இருந்தார்” என தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் ஏலம் நாளை நடைபெறவிருக்கும் சூழலில் சையத் முஸ்டாக் அலி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியான சதத்தை பதிவுசெய்து மிரட்டியுள்ளார்.
2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது இன்று நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுருகிறது. இன்று நடந்த போட்டியில் மும்பை மற்றும் கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். 57 பந்தில் 11 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 130 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்ரேயாஸின் அதிரடியில் 250 ரன்கள் குவித்த மும்பை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நவம்பர் 24-25 தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடைபெறவிருக்கும் சூழலில், சிறந்த மிடில் ஆர்டர் வீரர் மற்றும் கேப்டன்சி மெட்டீரியலாக பார்க்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய திறமையை சரியான நேரத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஏலத்தில் அதிக தொகைக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.