ஸ்ரேயாஸ் ஐயர் ட்விட்டர்
T20

“என்னையே ஒப்பந்தத்தில் எடுக்கவில்லை!!” - பிசிசிஐ-க்கு IPL கோப்பை மூலம் பதிலடி கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர்!

Prakash J

கேப்டனாக ஜொலித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது. என்னதான் வெற்றிக்கு காரணமாக ஆலோசகர் காம்பீர் பற்றி பலரும் பேசினாலும் சத்தமே இல்லாமல் சாதித்தவர் ஸ்ரேயாஸ் ஐயர் தான். ஆம், கொல்கத்தா அணியில் மட்டுமல்ல டெல்லி அணிக்கு தலைமை தாங்கிய போதும் ஒரு கேப்டனாக மிரட்டி இருந்தார். 2019 ஆம் ஆண்டு 7 வருடங்களுக்கு பிறகு டெல்லி அணியை பிளே ஆஃப் அழைத்துச் சென்றார். அத்தோடு 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியை முதல் முறையாக இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார். கேப்டனாக தன்னை நிரூபித்த பிறகே கொல்கத்தா அணிக்கு அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற தருணத்தில் சரிவில் இருந்த அணியை மீண்டும் பட்டை தீட்டி தற்போது 2024 ஆம் ஆண்டில் கோப்பையை வெல்ல வைத்துள்ளார். கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு வீரராகவும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் சராசரியாக 300-400 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தார். இப்படி கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லை என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால் அதுதான் உண்மை. என்ன நடந்தது? ஸ்ரேயாஸ் குறித்து வெளியாகும் தகவல்கள் என்ன? விரிவாக பார்க்கலாம்

பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியம் என்று முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும், இவ்வாறு செய்யாதபட்சத்தில் இந்திய அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும், அனைத்து வீரர்களும் தேசிய அணியில் விளையாடத காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. பரிந்துரைத்திருந்தது. எனினும் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்தனர். இதன் காரணமாக பிசிசிஐ வெளியிட்ட இந்திய அணி வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து இருவரின் பெயரும் நீக்கப்பட்டது.

சர்ச்சையான பிசிசிஐ ஒப்பந்தம்!

அதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் 2023 -24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில், ரஞ்சிப் போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ், முதுகு வலி காரணமாக அதிலிருந்தும் விலகினார். இதனால் ஐபிஎல்லின் சில போட்டிகளில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் பரவின. எனினும், ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். தற்போது அவரது அணியே நடப்பு ஆண்டின் சாம்பியன் கோப்பையையும் தட்டிச் சென்றுள்ளது. இதனால், கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: 2024 | WPL & IPL Final.. ஆஸி. கேப்டன்ஸ்.. 18.3 ஓவர்கள்.. 113 ஆல் அவுட்.. ஒருசேர நிகழ்ந்த அதிசயம்!

முன்னதாக, ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற இருக்கும் ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் அவர் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் கோப்பையைப் பெற்றுத் தந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

”2023 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டும், முதல் தர வீரரான அவருக்கு மூன்றாம் தர ஒப்பந்தம்கூட பிசிசிஐ தரவில்லை. டி20 உலகக் கோப்பை அணியிலும் எடுக்கவில்லை. ஆனால் இப்போது ஐபிஎல் கோப்பையை வென்று தந்திருக்கிறார்” எனப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக, ஐபிஎல் 2024 இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகளில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் எவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மோடி தங்கிய மைசூரு விடுதி! ரூ.80 லட்சம் பாக்கி.. போட்டிபோடும் அரசுகள்.. சட்ட உதவியை நாடும் ஹோட்டல்!