2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஷிவம் துபே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். திருவனந்தபுரத்தில் நடந்த அந்த போட்டியில் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களை பறக்கவிட்ட அவர், அதிரடி பேட்டிங்கில் இந்திய அணிக்கு நீண்ட தூரம் பயணிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் பேட்டிங் டெக்னிக்கில் அதிக வேரியேசன் இல்லை என்பதாலும், ஹார்டு ஹிட்டிங் மட்டுமே வைத்திருந்ததாலும் இந்திய அணியில் இருந்து துபே ஓரங்கட்டப்பட்டார்.
இந்திய அணியில் இருந்து ஓரங்கப்பட்டாலும் தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்த அந்த இளம் வயது துபே, தொடர்ந்து தன்னுடைய பேட்டிங்கில் வேரியேசனை எடுத்துவருவதற்கு கடுமையாக உழைத்தார். அவருடைய உழைப்பு உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் அவருக்கு நிறைய பாராட்டுகளையும், ரன்களையும் பெற்றுத்தந்தது. துபேவின் முன்னேற்றத்தை கண்ட மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரை எடுத்து தொடர்ச்சியாக வாய்ப்பை வழங்கினார்.
தன்னை போலவே ஹார்டு ஹிட்டிங் டைப் பேட்ஸ்மேன் என்பதால் தோனிக்கு கவனம் ஈர்த்ததா? இல்லை அவரிடமிருந்த நம்பிக்கையை அடையாளம் கண்டாரா என்பது தெரியவில்லை, சிஎஸ்கேவில் ஒரு அபாரமான ஆட்டத்தை விளையாடிய துபே பல போட்டிகளை வென்றெடுத்தார். சிஎஸ்கேவில் இடம்பெற்று சிறப்பாக விளையாடிய அவருக்கு, தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஷிவம் துபே, டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்து தன் திறமையை நிலைநிறுத்தியுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் ஒரு ஆல்ரவுண்டராக தன்னுடைய இடத்தை உறுதிசெய்திருக்கும் சிவம் துபே, தன் வளர்ச்சியில் தோனியின் பங்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் துபே, “என்னுடைய மறுபிரவேசத்தில் மஹி பாயின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் வீரர் உங்கள் திறமை மீது மதிப்பு வைத்து உங்களுக்கு அறிவுரை வழங்கினால், அது எந்த ஒரு வீரரின் கிரிக்கெட் பயணத்திற்கும் நிறைய அர்த்தத்தை சேர்க்கும். அவர் உங்களுக்கு ஏதாவது நேர்மறையாகச் சொன்னால், உங்கள் நம்பிக்கை நிச்சயமாக உயரும். அப்படியான அவருடைய பல அறிவுரைகள் தான், எனது கிரிக்கெட்டை பெரிதும் மேம்படுத்தியுள்ளது” என்று தோனியின் முக்கிய பங்கு குறித்து பேசினார்.
டி20 உலகக்கோப்பை ரோல் குறித்து பேசிய அவர், “ஐபிஎல்லில் நான் ஒருஓவர் மட்டுமே வீசினேன், அதில் எனக்கு ஒரு விக்கெட் கிடைத்தது, அது என்னுடைய பவுலிங் மீதான நம்பிக்கைக்கு ஒரு உத்வேகமாகவே இருந்தது. பந்துவீச்சில் நிச்சயம் என் திறமைகளை மெருகூட்ட வேண்டும் என்று எனக்குத் தெரியும், அதனால் வலைப்பயிற்சிகளில் தொடர்ந்து வேலை செய்துவருகிறேன். ரோகித் மற்றும் ராகுல் பாய் இருவரும் என்னை ஒரு ஆல்-ரவுண்டராக வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். எந்த நேரத்திலும் 2-3 ஓவர்கள் வீச தயாராக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது” என சிவம் துபே கூறியுள்ளார்.