Sherfane Rutherford The Montreal Tigers
T20

கிரிக்கெட்ல ஜெய்ச்சா அரை ஏக்கர் நிலம் தர்றாங்களா... யாரு சாமி நீங்க..?

ஆண்ட்ரே ரஸல், முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இந்த சீசனில் பங்கேற்றனர்.

Viyan

கனடாவில் நடந்த குளோபல் டி20 லீகில் மான்ட்ரியல் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் சர்ரி ஜாக்குவார்ஸ் அணியை 5 ரன்களில் வீழ்த்தி கோப்பையை வென்றது டைகர்ஸ். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றது மட்டுமல்லாமல், தொடர் நாயகன் விருதும் வென்றார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ப்ஃபோர்ட். அதற்காக அவருக்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Russel

குளோபல் டி20 லீக் - கனடாவில் நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் லீக். 2018ம் ஆண்டு 6 அணிகளோடு கோலாகலமாகத் தொடங்கப்பட்ட இந்த லீக் 2019ம் ஆண்டுக்குப் பிறகு நடக்கவில்லை. கொரோனாவின் காரணமாக போட்டி நிர்வாகிகளால் அந்தத் தொடரை கடந்த 3 ஆண்டுகளாக நடத்த முடியவில்லை. 2021ல் மலேசியாவில் நடத்தத் திட்டமிட்டிருந்தும்கூட அது முடியாமல் போனது. இந்நிலையில், 2023 சீசன் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. 2019ல் பங்கேற்ற எட்மன்டன் ராயல்ஸ், வின்னிபெக் ஹாக்ஸ் அணிகளுக்குப் பதிலாக சர்ரி ஜாக்குவார்ஸ், மிசிசாங்கா பாந்தர்ஸ் அணிகள் இந்த சீசனில் அறிமுகமாகின. ஆண்ட்ரே ரஸல், முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இந்த சீசனில் பங்கேற்றனர். பிராம்ப்டன் வோல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தாலும், இந்தியன் ஜாம்பவான் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

2023 குளோபல் டி20 அணிகள் மற்றும் கேப்டன்கள்


பிராம்ப்டன் வோல்வ்ஸ் - டிம் சௌத்தி
சர்ரி ஜாக்குவார்ஸ் - இஃப்திகார் அஹமது
மிசிசாங்கா பாந்தர்ஸ் - ஷோயப் மாலிக்
மான்ட்ரியல் டைகர்ஸ் - கிறிஸ் லின்
டொரோன்டோ நேஷனல்ஸ் - ஹம்ஸா தாரிக்
வேன்கூவர் நைட்ஸ் - ரஸி வேன் டெர் டுசன்.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 அணிகளோடு ஒரு போட்டியிலும், 2 அணிகளோடு இரு போட்டியிலும் மோதும். மொத்தம் ஒரு அணிக்கு 7 போட்டிகள். 21 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் 3 போட்டிகள் மழையால் ரத்தாகின. புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்கள் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆஃப் சுற்று ஐபிஎல் போல் குவாலிஃபயர், எலிமினேட்டர் முறையில் தான் நடந்தது. 7 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சர்ரி ஜாக்குவார்ஸ் அணி, குவாலிஃபயர் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருந்த வேன்கூவர் நைட்ஸ் (9 புள்ளிகள்) வீழ்த்தி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. மூன்றாவது இடம் பிடித்திருந்த மான்ட்ரியல் டைகர்ஸ் (9 புள்ளிகள்), பிராம்ப்டன் வோல்வ்ஸை (8 புள்ளிகள்) எலிமினேட்டரில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்தோடு இரண்டாவது குவாலிஃபயரில் வேன்கூவர் நைட்ஸையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது டைகர்ஸ்.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 6ம் தேதி பிராம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற மான்ட்ரியல் டைகர்ஸ் ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சர்ரி ஜாக்குவார்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை வெற்றிகரமாக கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து சேஸ் செய்தது டைகர்ஸ். 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஃபைனல்ஸை வென்று முதல் முறையாக குளோபல் டி20 தொடரை வென்றது.

இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்து டைகர்ஸ் வெற்றியை உறுதி செய்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தத் தொடரில் 220 ரன்கள் எடுத்த அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார். வழக்கமாக விருது வழங்குபவர்களுக்கு பரிசுத்தொகை கொடுக்கப்படும். ஆனால் தொடர் நாயகன் விருது வென்ற ஷெர்ஃபேனுக்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசாக வழங்கப்பட்டது!

குளோபல் டி20 2023: டாப் 5 பேட்ஸ்மேன்

GT20 Canada

கிறிஸ் லின் - 234 ரன்கள்
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் - 220 ரன்கள்
காலின் முன்றோ - 212 ரன்கள்
முகமது ரிஸ்வான் - 190 ரன்கள்
ஜதிந்தர் சிங் - 183 ரன்கள்

குளோபல் டி20, 2023: டாப் 5 பௌலர்கள்

GT20 Canada

மாத்யூ ஃபோர்ட் - 15 விக்கெட்டுகள்
ஜுனைத் சித்திக் - 15 விக்கெட்டுகள்
ரூபன் டிரம்பிள்மேன் - 13 விக்கெட்டுகள்
லோகன் வேன் பீக் - 12 விக்கெட்டுகள்
சந்தீப் லாமிசான் - 11 விக்கெட்டுகள்