முகமது ஷமி, GT Twitter
T20

“நான் குஜராத்தில் இருக்கிறேன், எனக்கு தேவையானது இங்கே கிடைக்காது”- கலகலத்த முகமது ஷமி!

ரவி சாஸ்திரி, முகமது ஷமியிடம் "நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள்? நாளுக்கு நாள் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறீர்கள்" என கேட்டார். அதற்கு முகமது ஷமி சொன்ன பதில் தற்போது வைரலாகி வருகிறது.

Jagadeesh Rg

“நான் விரும்பி சாப்பிடும் உணவு குஜராத்தில் கிடைப்பதில்லை” என்று குஜராத் டைடன்ஸ் அணி பவுலர் முகமது ஷமி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸூக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கும் இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது ஐதராபாத் அணி. ஆனால் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து குஜராத் அணி 34 ரன்களில் வெற்றிப்பெற்று, இந்த ஐபிஎல் சீசனில் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக Play Off சுற்றுக்கு தகுதிபெற்றது.

முகமது ஷமி

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டிக்கு பின் வர்ணனையாளர் ரவி சாஸ்திரியுடன் கலந்துரையாடினார் ஷமி. அப்போது ரவி சாஸ்திரி ஷமியிடம், "நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள்? நாளுக்கு நாள் நல்ல உடற்தகுதி பெறுகின்றீர்களே!" என கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஷமி “நான் இப்போது இருப்பது குஜராத்தில். என்னுடைய உணவு இங்கு கிடைப்பதில்லை. ஆனால் நான் குஜராத்தின் உணவு வகைகளை மகிழ்ச்சியுடனே உட்கொள்கிறேன்” என்றுள்ளார்.

Mohammed Shami

மேலும் தன் போட்டி குறித்து பேசிய முகமது ஷமி “என்னுடைய பலம் என்னவென்று நான் தெரிந்து வைத்திருக்கிறேன். சரியான இடங்களில் பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து வருகிறேன். டெல்லிக்கு எதிரான போட்டியிலும் இப்படிதான் வீசி விக்கெட்டுகளை எடுத்தேன். மோகித் சர்மா போன்ற திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பது கூடுதல் பலம். அவர் மிடில் ஓவர்களில் மிகப் பிரமாதமாக பந்துவீசுகிறார், நிறைய வேரியேஷன்களை பயன்படுத்துகிறார்" என்றுள்ளார்.