ஷாகிப் - சேவாக் web
T20

யார் சேவாக்? அவருடைய கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை! - ஷாகிப் அல் ஹசன்

”நீங்கள் ஒன்றும் மேத்யூ ஹைடனோ, ஆடம் கில்கிறிஸ்ட்டோ கிடையாது, நீங்கள் ஒரு வங்கதேச வீரர் மட்டும்தான், அதற்கு தகுந்தார்போல் விளையாடுங்கள்” என விமர்சித்த சேவாக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஷாகிப் அல் ஹசன் பேசியுள்ளார்.

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பையானது பரபரப்பான மோதல்களுக்கு பிறகு சூப்பர் 8 சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது. 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், “தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்” முதலிய 5 அணிகள் சூப்பர் 8 சுற்றில் தங்களுடைய இடத்தை உறுதிசெய்துள்ளன.

அதேபோல அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் “நியூசிலாந்து, இலங்கை, நமீபியா, உகாண்டா, ஜெனிவா, ஓமன்” முதலிய 6 அணிகள் தொடரிலிருந்தே வெளியேறியுள்ளன.

ind vs pak

மீதமிருக்கும் 3 இடங்களுக்காக “அமெரிக்கா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து” முதலிய 6 அணிகளுக்கு இடையே இன்னும் மோதல்கள் இருந்து வருகின்றன.

சூப்பர் 8 செல்வதற்கான வாய்ப்பை பலப்படுத்திய வங்கதேசம்!

நடப்பு டி20 உலகக்கோப்பையில் குரூப் D-ல் இடம்பெற்றுள்ள வங்கதேச அணி, விளையாடியிருக்கும் 3 போட்டிகளிலும் கடைசி நேர த்ரில்லர் முடிவுகளையே எட்டியுள்ளது. பேட்டிங்கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், தங்களுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் இலங்கையை 2 விக்கெட்டுகள் மற்றும் நெதர்லாந்து அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி, அவர்களின் சூப்பர் 8 செல்வதற்கான வாய்ப்பை பலப்படுத்தியுள்ளது.

mahmudullah

பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை 113 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேச அணி, கடைசிநேர பரபரப்பான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது. குறைவான ரன்களை பதிவுசெய்திருந்தபோதும், அதனை டிஃபண்ட் செய்து வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி டி20 உலகக்கோப்பை வரலற்றில் புதிய சாதனை படைத்தது.

Bangladesh

எளிதில் வெல்லவேண்டிய போட்டியை வங்கதேச அணி கோட்டைவிட்டதால், மூத்த வீரர் ஷாகிப் அல் ஹசனின் பொறுப்பற்ற ஆட்டத்தை விரேந்திர சேவாக் விமர்சித்து பேசியிருந்தார். ஷாகிப் சிறிதுநேரம் களத்தில் நிலைத்து நின்று ஆடியிருந்தால் வென்றிருக்கலாம் என்ற கருத்தை சேவாக் வைத்தார்.

ஷாகிப்பை விமர்சித்த சேவாக்..

8, 3 ரன்கள் என சொதப்பிய ஷாகிப் அல் ஹசனை விமர்சித்து பேசியிருந்த விரேந்திர சேவாக், “கடந்த உலகக் கோப்பையின்போதே ஷாகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். நீங்கள் ஒரு மூத்த வீரர், அணியை கேப்டனாகவும் வழிநடத்தியுள்ளீர்கள், உங்கள் அனுபவத்திற்காக உலகக் கோப்பை அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதற்கான பொறுப்பான ஆட்டத்தை களத்தில் வெளிப்படுத்துங்கள்.

shakib al hasan

நீங்கள் களத்தில் சிறிதுநேரம் நிலைத்து நின்று ஆடவேண்டும், ஹூக்ஸ் ஷாட் மற்றும் புல்ஷாட் ஆடுவதற்கு நீங்கள் ஒன்றும் மேத்யூ ஹைடனோ, கில்கிறிஸ்ட்டோ கிடையாது. நீங்கள் ஒரு வங்கதேச வீரர், உங்கள் திறனுக்கேற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றால், நீங்களாகவே நான் ஓய்வுபெற விரும்புகிறேன் என முன்வந்து கூறிவிடுங்கள்” என்று விமர்சித்து பேசியிருந்தார்.

யார் சேவாக்? பதிலடி கொடுத்த ஷாகிப் அல் ஹசன்!

சேவாக் விமர்சித்து பேசிய பிறகு நடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், 46 பந்துகளை சந்தித்து நிலைத்து நின்று ஆடிய ஷாகிப் அல் ஹசன் 9 பவுண்டரிகளை விரட்டி 64 ரன்கள் குவித்தார். அவருடைய அசத்தலான ஆட்டத்தால் 159 ரன்களை எட்டிய வங்கதேச அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று சூப்பர் 8 செல்வதற்கான வாய்ப்பை பலப்படுத்தியுள்ளது.

Bangladesh

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய ஷாகிப் அல் ஹசனிடம், விரேந்திர சேவாக் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர் கேள்வி எழுப்பும்போது இடையில் குறுக்கிட்ட ஷாகிப் அல் ஹசன் “சேவாக் யார்? என கேட்டு, அந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று பேசினார்.

சேவாக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஷாகிப், “ஒரு வீரர் இதுபோன்ற கேள்விக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரரின் பணி என்னவென்றால், ஒரு பேட்ஸ்மேனாக இருந்தால் அவர் அணிக்காக நன்றாக பேட்டிங் செய்யவேண்டும், பந்துவீச்சாளராக இருந்தால் நன்றாக பந்து வீசவேண்டும். அதேபோல பீல்டராக இருந்தால் ஒவ்வொரு ரன்னையும் சேமித்து எவ்வளவு கேட்ச்களை எடுக்க முடியுமோ அவ்வளவு கேட்ச்களை எடுக்க வேண்டும்.

shakib - sehwag

உண்மையில் இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை, தற்போது அணியில் இருக்கும் ஒரு வீரர் அணிக்காக எவ்வளவு பங்களிக்க முடியும் என்பதுதான் முக்கியம். ஒருவேளை அவரால் பங்களிக்க முடியாதபோது, ​​​​இயற்கையாகவே இதுபோன்ற விவாதங்கள் இருக்கும், அதில் எந்த தவறும் இல்லை” என்று ஷாகிப் கூறினார்.

அதேநேரத்தில் சேவாக் கூறியதைபோல, முதல் 4 வீரர்களில் ஒருவர் இறுதிவரை நிலைத்து நின்று ஆடவேண்டும் என்ற கருத்தை ஷாகிப் ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் “சேவாக் யார்?” என்று ஷாகிப் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.