shaheen afridi Twitter
T20

“3 வீரர்கள் டக் அவுட் ; முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகள்”-டி20யில் புதிய சாதனை படைத்த ஷாஹீன் அப்ரிடி!

பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி, டி20 பிளாஸ்ட் தொடரில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Rishan Vengai

பொதுவாக பந்து வீச்சாளர்கள் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள், 4 விக்கெட்டுகள் எடுப்பதெல்லாம் அவ்வப்போது கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதெல்லாம் போட்டியின் இடைப்பட்ட ஓவர்களில் மட்டுமே நடந்திருக்கும். மாறாக ஒரு போட்டியின் முதல் ஓவரில் நடக்குமா என்றால் முடியாது என்பதே பொதுவான ஒரு பதிலாக இருக்கும்.

shaheen afridi

அதிகபட்சமாக இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது டி20 கிரிக்கெட்டில் போட்டியின் முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி.

3 டக் அவுட் : 4 விக்கெட்டுகள்

டி20 பிளாஸ்ட் தொடரில் நாட்டிங்ஹாம்ஷையர் மற்றும் பர்மிங்காம் பியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போது சொந்த மண்ணில் விளையாடிய நாட்டிங்ஹாம்ஷையர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் சேர்த்தது. ஹோம் சைடு அணி 168ல் சுருண்டதை அடுத்து எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று களமிறங்கிய பர்மிங்காம் பியர்ஸ் அணிக்கு அதிர்ச்சியளித்தார் வேகப்பந்துவீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி.

முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பர்மிங்காம் பியர்ஸ் அணியின் கேப்டன் அலெக்ஸ் டேவிஸ்க்கு எதிராக, ஒரு கூர்மையான யார்க்கரை வீசிய அப்ரிடி கீழே விழவைத்தார். காற்றிலேயே ஸிங்காகி வந்த அந்த பந்து அலெக்ஸை பீட் செய்து LBW விக்கெட்டை தட்டிச்சென்றது. அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பெஞ்சமினுக்கு எதிராக மீண்டும் ஒரு யார்க்கர் பந்தை வீசிய அப்ரிடி, இந்த முறை போல்டாக்கி வெளியேற்றினர்.

shaheen afridi

பின்னர் 5ஆவது பந்தை எதிர்கொண்டு விளையாடிய டேன் மௌஸ்லி பந்தை காற்றில் அடிக்க, ஒரு அற்புதமான கேட்ச்சை எடுத்த ஒல்லி ஸ்டோன் அப்ரிடிக்கு 3வது விக்கெட்டை தேடித்தந்தார். தொடர்ந்து ஓவரின் கடைசி பந்தை வீசிய அப்ரிடி, பேட்ஸ்மேனின் ஆஃப் ஸ்டம்பை தகர்த்தெறிந்தார். ஒரு அவுட்ஸ்விங் பந்தை வீசிய ஷாஹீன் அப்ரிடி, பேட்ஸ்மேன் பார்னர்டை வீழ்த்தினார். முடிவில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய அப்ரிடி, வரலாற்றில் புதிய சாதனையை படைத்து அசத்தினார்.

4 விக்கெட்டை வீழ்த்திய போதிலும், பலனளிக்காத அப்ரிடியின் பந்துவீச்சு!

என்ன தான் முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டை ஷாஹீன் அப்ரிடி வீழ்த்தினாலும், மறுமுனையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராப் யாட்ஸ் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். கடைசிவரை களத்திலிருந்த அவர் 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு பர்மிங்காம் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 65 ரன்கள் அடித்த யாட்ஸின் உதவியால் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 19.1 ஓவரிலேயே வெற்றிபெற்றி அசத்தியது பர்மிங்காம் பியர்ஸ் அணி.