கெளதம் கம்பீர் ட்விட்டர்
T20

India Head Coach கம்பீரா? கலக்கத்தில் சீனியர் வீரர்கள்.. காரணம் இதுதான்!

கெளதம் கம்பீரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டாம் என மூத்த வீரர்கள் பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்காத நிலையில், அவருடைய பதவிக்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசித் தேதி மே 27. அதேநேரத்தில் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தலைமைப் பயிற்சியாளர் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2027 வரை பணியாற்றலாம் எனவும், டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தப் பதவிக்கு நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங், ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், கெளதம் கம்பீர் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதில் தற்போதைய கொல்கத்தா அணியின் ஆலோசகரான கெளதம் கம்பீரை, தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு பரிசீலிக்க இருப்பதாகவும், இதற்காக பிசிசிஐ அவரிடம் அணுகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால், ஐபிஎல் 2024 தொடர் நிறைவடைந்தபிறகே அதுகுறித்த செய்திகள் மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கெளதம் கம்பீரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டாம் என மூத்த வீரர்கள் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கிரிக்கெட் வட்டாரத்தில், “கொல்கத்தா அணியின் தற்போதைய ஆலோசகராக இருக்கும் கெளதம் கம்பீர், வெற்றிக்காக தன் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நினைப்பவர். அதனால்தான் அவரது அணி, தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. ஒருவேளை, தன் அணியில் சரியாக விளையாடாதவர்களை நேரிடையாகவே விமர்சித்து விடுவார்.

இதையும் படிக்க: “CSK இல்லைன்னா என்ன, தமிழர்கள் இருக்காங்க..” - Playoff-ன் 4 அணிகளிலும் தமிழக வீரர்கள்.. ஒரு பார்வை!

தவிர, பிற அணி மற்றும் இந்திய அணியைக்கூட அவ்வப்போது விமர்சிப்பார். அப்படியிருக்கும் நிலையில், அவரைவிட, அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் இந்திய அணியில் சிலர் உள்ளர். இந்த சூழலில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டால், அவர் எந்தப் பதவி, அங்கீகாரம், செல்வாக்கு பற்றியும் கண்டுகொள்ளமாட்டார். நேரிடையாகவே பேசிவிடுவார் என்பதாலேயே அவரை, தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு சிபாரிசு செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், அவர் அவ்வப்போது ஆக்ரோஷத்துடன் செயல்படக்கூடியவர். அதனால், அவரை இந்தப் பதவிக்கு தவிர்ப்பதே நன்றாக இருக்கும்” என மூத்த வீரர்கள் பிசிசிஐயிடம் எடுத்துக் கூறியதாக அந்த வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

ஆயினும், கொல்கத்தா அணியை நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை கொண்டுசென்றதற்காக, அவருடைய பெயரை, பிசிசிஐ பரிசீலனையில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: MI தோல்வி | ரோகித், ஹர்திக் உள்ளிட்ட வீரர்களுடன் ஆலோசனை.. உரிமையாளர் சொன்ன சீக்ரெட்!