LPL - IPL twitter
T20

அடுத்த கிரிக்கெட் திருவிழா ரெடி; லங்கா பிரீமியர் லீக்கிற்கு செல்லும் மூத்த சிஎஸ்கே வீரர்! யார் அவர்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் விளையாடுவதற்காக பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 4ஆவது சீசனானது வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தொடருக்காக இந்த வருடம் முதல்முறையாக வீரர்களுக்கான ஏலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக கிட்டத்தட்ட 500 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். முதல்முறையாக நடத்தப்படும் இந்த ஏலமானது ஜூன் 14ஆம் தேதியான நாளை கொழும்புவில் நடக்கிறது.

CSK

இந்நிலையில், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில், முன்னாள் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் பிளேயருமான சுரேஷ் ரெய்னா இலங்கை ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். எல்பிஎல் ஏலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

லங்கா பிரீமியர் லீக்கில் பதிவு செய்துள்ள சுரேஷ் ரெய்னா!

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்தவர்களில் ஒருவரான முன்னாள் இந்திய மிடில் ஆர்டர் வீரர் சுரேஷ் ரெய்னா, லங்கா பிரீமியர் லீக்கின் நான்காவது எடிசன் ஏலத்தில் 50,000 அமெரிக்க டாலர் அடிப்படை விலையில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. ஜூன் 14ஆம் தேதி இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) வெளியிடும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் அவருடைய பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

suresh raina

36 வயதான ரெய்னா, செப்டம்பர் 2022-ல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடினார். சிஎஸ்கே அணியை நான்கு கோப்பைகளுக்கு அழைத்து சென்ற ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 176 போட்டிகளில் 4,687 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் கரியரில் 5,500 ரன்களை குவித்திருக்கும் அவர், அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

பாபர் அசாம், டேவிட் மில்லர், மேத்யூ வேட், ஷாகிப் அல் ஹசனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா!

லங்கா பிரீமியர் லீக் வரலாற்றில் முதன்முறையாக நான்காவது பதிப்பின் போது வீரர்களுக்கான ஏலம் நடத்தப்படவுள்ளது. கோப்பைக்காக ஐந்து அணிகள் மோத உள்ளன. ஏலத்திற்கு முன்னதாகவே ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இரண்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அதன்பிறகு ஏலத்தில் 14 உள்ளூர் வீரர்களையும், 6 வெளிநாட்டு வீரர்களையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

LPLTrophy

சுரேஷ் ரெய்னாவுடன், 140 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். பாபர் அசாம், டேவிட் மில்லர், மேத்யூ வேட், ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் ஏற்கனவே ஒவ்வொரு பிரான்சைஸ் உடன் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ பொறுத்தவரையில் எந்த இந்திய வீரரும் ஓய்வு பெற்றதற்கு பிறகு வெளிநாட்டு தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். எல்பிஎல் வரலாற்றில் விளையாடிய மூன்று சீசனிலும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியே பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.