babar azam Twitter
T20

“பாகிஸ்தான் டி20 அணியில் விளையாட பாபர் அசாம் தகுதியற்றவர்..” - கடுமையாக சாடிய விரேந்தர் சேவாக்!

பாகிஸ்தானின் படுதோல்விகளை தொடர்ந்து பாபர் அசாமின் கேப்டன்சி விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், டி20 அணியில் இடம்பெறவே பாபர் தகுதியற்றவர் என விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுடனும் தோற்றதால் தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது. பந்துவீச்சில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தினாலும், பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன.

பல முன்னாள் வீரர்கள் பாபர் அசாமிற்கு விருப்பமான வீரர்கள் மட்டுமே அணிக்குள் இருப்பதாகவும், சமீபமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களை எல்லாம் அணிக்குள் எடுத்ததால்தான் பாகிஸ்தான் தோற்றதாகவும், பல திறமையான வீரர்கள் வெளியில் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

pakistan

பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், ஷாகித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல் முதலிய வீரர்கள் டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாமின் கேப்டன்சி மோசமாக இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அணித்தேர்வில் மாற்றங்கள் தேவையென்றும், புதிய அணியை உருவாக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பாபர் அசாமிற்கு தகுதியில்லை..

பல முன்னாள் வீரர்கள் பாபர் அசாமின் கேப்டன்சியை மட்டுமே குறைகூறிய நிலையில், இந்திய முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் பாபர் அசாமின் மோசமான பேட்டிங்கையும் கடுமையாக விமர்சித்தார். அவர் தன்னுடைய வார்த்தைகளை குறைத்துக்கொள்ளாமல் பாகிஸ்தான் டி20 அணியில் பாபர் அசாம் இடம்பெற தகுதியற்றவர் என்ற கடுமையாக சொற்களை பயன்படுத்தினார்.

babar azam

க்றிக்பஸ் உடன் பேசியிருக்கும் சேவாக், “பாபர் அசாம் சிக்சர் அடிக்கும் வீரர் அல்ல. அவர் நன்றாக செட்டிலான பிறகு ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே சிக்சர்களை அடித்துவருகிறார். அவர் தனது கால்களை பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கவர்ஸ் மேல் சிக்சர்களை அடித்து நான் பார்த்ததேயில்லை. தூக்கியடிக்காமல் தரையுடன் ஆடக்கூடிய ஆட்டத்தால் மட்டுமே அவர் தொடர்ச்சியாக ரன்களை அடிக்கிறார், ஆனால் அவரின் ஸ்டிரைக்ரேட் மிகமோசமாக இருந்துவருகிறது” என்று விமர்சித்தார்.

babar azam

முதல் 6 ஓவர்களை வீணடிக்கிறார் என்று கூறிய சேவாக், “ ஒரு கேப்டனாக இதுபோலான ஆட்டம் அவரது அணிக்கு பயனுள்ளதாக இருக்கிறாதா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவர் களமிறங்காமல், முதல் 6 ஓவர்களில் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய வேறுஒருவரை அனுப்பி 50-60 ரன்களை பாகிஸ்தான் பெறவேண்டும். நான் இன்னும் கடுமையாக சொல்ல வேண்டுமானால், ஒருவேளை பாபர் அசாமிற்கு பதிலாக வேறு கேப்டன் மாறினால், அவர் டி20 அணியில் இடம்பெறத் தகுதியற்றவர். மாடர்ன் டே டி20 கிரிக்கெட்டின் தேவைகளுக்கு ஏற்ப பாபரின் செயல்பாடுகள் இல்லை” என்று சேவாக் மேலும் கடுமையாக கூறினார்.