Tristan Stubbs Adam Hunger
T20

SAvNED | இந்த முறையும் தென் ஆப்பிரிக்காவுக்கு செக் வைக்குமா நெதர்லாந்து..?

தென்னாப்பிரிக்கா என்னதான் பலமான அணியாக இருந்தாலும் அவர்களுக்கு நெதர்லாந்து என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதுவும் உலகக் கோப்பைகளில் இவர்கள் கண்களில் விரல் விட்டு ஆட்டுகிறார்கள்.

Viyan
போட்டி எண் 16: நெதர்லாந்து vs தென்னாப்பிரிக்கா
குரூப்: டி
மைதானம்: நசௌ கவுன்டி இன்டர்நேஷனல் ஸ்டேடியம், நியூ யார்க்
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 8, இந்திய நேரப்படி இரவு 8 மணி

அனைத்து கண்களுமே மைதானம் மீது தான்!

இந்தப் போட்டியில் நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை விட அதிகம் கவனிக்கப்படப்போவது போட்டி ஆடப்படும் ஆடுகளம் தான். நியூ யார்க்கில் ஆடப்பட்ட போட்டிகளில் ரன் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் ஆடிய போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுவது போலத்தான் அணுகவேண்டியிருந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி வெறும் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, சேஸ் செய்த தென்னாப்பிரிக்காவுமே தட்டுத் தடுமாறி 17வது ஓவரில் தான் சேஸ் செய்தது. இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியும் அப்படித்தான் இருந்தது. 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அயர்லாந்து. அவசர அவசரமாக டெக்சாஸில் செய்யப்பட்டு நியூ யார்க் மைதானத்தில் இந்த ஆடுகளங்கள் நிறுவப்பட்டன.

அயர்லாந்து போட்டிக்குப் பிறகு, "இந்த ஆடுகளத்தை எப்படி கணிப்பது என்றே தெரியவில்லை" என்று கூறியிருந்தார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா. அடுத்து இந்தியா vs பாகிஸ்தான் போன்ற மிகப் பெரிய போட்டி நடக்கவிருக்கும் நிலையில், 'இந்த ஆடுகளங்களில் நல்லபடியான போட்டி நடப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன' என்று ஐசிசி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதனால் இப்போட்டியில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதில் தான் அனைவரின் கவனமும் இருக்கும்.

நெதர்லாந்தை இம்முறையாவது சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா?

தென்னாப்பிரிக்கா என்னதான் பலமான அணியாக இருந்தாலும் அவர்களுக்கு நெதர்லாந்து என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதுவும் உலகக் கோப்பைகளில் இவர்கள் கண்களில் விரல் விட்டு ஆட்டுகிறார்கள். கடந்த டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து, கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையிலும் அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் தங்களின் அந்த வெற்றிப் பயணத்தை, இந்த உலகக் கோப்பையிலும் தொடரவேண்டும் என்று அந்த அணி விரும்பும்.

தங்கள் முதல் போட்டியில் அந்த அணி நேபாளத்தை சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றது. லோகன் வேன் பீக், பால் வேன் மீக்ரன், பாஸ் டி லீட் போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவருமே அசத்தலாகப் பந்துவீசினார்கள். ஓப்பனர் மேக்ஸ் ஓ தாவ்த் அரைசதம் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை கடினமான தங்கள் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக எப்படியோ வென்றுவிட்டார்கள். அந்த அணியின் பந்துவீச்சு அட்டகாசமாக இருந்தது. ஃபார்மில் இல்லாதவர் என்று கருதப்பட்ட ஆன்ரிக் நார்கியா ஆட்ட நாயகனுக்கான ஒரு செயல்பாட்டைக் கொடுத்தார். பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாறியிருந்தாலும் ஆடுகளத்தின் தன்மை அறிந்து நிதானத்தைக் கடைப்பிடித்து வெற்றியை வசப்படுத்தினார்கள்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

நெதர்லாந்து: மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓ தௌத், விக்ரம்ஜித் சிங், சைப்ரேஎண்ட் எங்கில்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், தேஜா நிதாமானுரு, லோகம் வேன் பீக், டிம் பிரிங்கில், பால் வேன் மீக்ரன், விவியன் கிங்மா

தென்னாப்பிரிக்கா: குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹெய்ன்ரிக் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், கேஷவ் மஹாராஜ், ககிஸோ ரபாடா, எய்ன்ரிக் நார்கியா, ஓட்னீல் பார்ட்மேன்

கவனிக்கவேண்டிய வீரர்கள்:

Bas de Leede


நெதர்லாந்து - பாஸ் டி லீட்: பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலும் கைகொடுக்கக்கூடியவர். மிடில் ஓவரில் பந்துவீசுவதிலும், மிடில் ஆர்டரில் வந்து ரன் சேர்ப்பதிலும் அந்த அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கை அவர்.

தென்னாப்பிரிக்கா - எய்டன் மார்க்ரம்: கடினமான இந்த நியூ யார்க் ஆடுகளத்தில் மார்க்ரம் போன்ற ஒரு பேட்ஸ்மேன் மிகவும் அவசியம். அவரைச் சுற்றி அந்த அணியின் பேட்டிங் சரியாக இயங்கினால், தென்னாப்பிரிக்காவால் நல்ல ஸ்கோர் எடுக்க முடியும்.

கணிப்பு: தென்னாப்பிரிக்க அணி தங்களின் நெதர்லாந்து சோதனைக்கு இந்தப் போட்டியில் முற்றுப் புள்ளி வைக்க வாய்ப்பு அதிகம்