சாய் சுதர்சன் ipl
T20

‘சதமடித்த சாய் சுதர்சன்..’ - சச்சின் சாதனையை முறியடித்து முதல் இந்திய வீரராக வரலாறு! மிரண்டுபோன CSK!

சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்து ஐபிஎல்லில் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்த ஒரே இந்திய வீரராக சாய் சுதர்சன் வரலாறு படைத்துள்ளார்.

Rishan Vengai

குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரராக ஜொலித்து வரும் 22 வயதேயான தமிழக வீரர் சாய் சுதர்சன், ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்திய வீரராக பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ஜொலித்த சாய் சுதர்சன், 2024 ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இதுவரை நடந்த 12 போட்டிகளில் 52 சராசரியுடன் விளையாடியிருக்கும் சாய் சுதர்சன், 3 அரைசதங்களுடன் 520 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

சாய் சுதர்சன்

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் ஐபிஎல் சதமடித்து அசத்திய சாய், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து புதிய சாதனையை தன்பெயரில் எழுதியுள்ளார்.

சச்சின் சாதனையை உடைத்த சாய் சுதர்சன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன், தன்னுடைய 1000 ஐபிஎல் ரன்களை பதிவுசெய்தார். வெறும் 25 இன்னிங்ஸ்களில் மட்டும் விளையாடி ஆயிரம் ரன்களை அடித்திருக்கும் சாய் சுதர்சன், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரராக மாறியது மட்டுமில்லாமல், அந்த சாதனையை வைத்திருந்த சச்சினையும் பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார்.

அதிவேகமாக 1000 ஐபிஎல் ரன்கள் அடித்தவர்கள்:

1. ஷான் மார்ஷ் - 21 இன்னிங்ஸ்கள்

2. லெண்டல் சிம்மன்ஸ் - 23 இன்னிங்ஸ்கள்

3. மேத்யூ ஹைடன் - 25 இன்னிங்ஸ்கள்

4. சாய் சுதர்சன்* - 25 இன்னிங்ஸ்கள்

5. ஜானி பேர்ஸ்டோவ் - 26 இன்னிங்ஸ்கள்

இந்திய வீரர்களை பொறுத்தவரையில்,

1. சாய் சுதர்சன்* - 25 இன்னிங்ஸ்கள்

2. சச்சின் டெண்டுல்கர் - 31 இன்னிங்ஸ்கள்

3. ருதுராஜ் கெயிக்வாட் - 31 இன்னிங்ஸ்கள்

4. திலக் வர்மா - 33 இன்னிங்ஸ்கள்

சிஎஸ்கே அணிக்கு எதிராக அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்த, 20 ஓவர் முடிவில் 231 ரன்களை குவித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.