sahil chauhan x
T20

ஒரே வீரராக 18 சிக்சர்கள்.. 41 பந்தில் 144 ரன்கள்! அதிவேக சர்வதேச டி20 சதமடித்து புதிய உலகசாதனை!

Rishan Vengai

எஸ்டோனியா மற்றும் சைப்ரஸ் இரண்டு அணிகளுக்கு இடையே 6 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற போட்டியில் சைப்ரஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய எஸ்டோனியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரண்டு அணிகளும் மோதிய இரண்டாவது போட்டி எபிஸ்கோபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சைப்ரஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்களை குவித்தது.

27 பந்தில் சதமடித்து உலக சாதனை!

192 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய எஸ்டோனியா அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சைப்ரஸ் அணி, 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது. டாப் ஆர்டர் வீரர்கள் நான்கு பேரும் 5, 1, 7, 3 என சொற்ப ரன்களில் வெளியேற 4 விக்கெட்டுகளை இழந்த எஸ்டோனியா அணி தடுமாறியது.

ஆனால் 4வது வீரராக களமிறங்கிய சாஹில் சவுகான் மட்டும் தனியொரு ஆடுகளத்தில் விளையாடுவது போல் விளையாடினார். ஓவருக்கு 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய சவுகான், வெறும் 27 பந்தில் 5 பவுண்டரிகள், 13 சிக்சர்கள் என துவம்சம் செய்து 105 ரன்கள் அடித்து அதிவேக டி20 சதத்தை பதிவுசெய்தார்.

அதற்குபிறகும் தன்னுடைய அதிரடியை நிறுத்தாத அவர், 41 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்சர்கள் என பறக்கவிட்டு பிரம்மிக்க வைத்தார். 144 ரன்களை குவித்து நாட் அவுட்டுடன் சவுகான் முடிக்க, வெறும் 13 ஓவரில் 194 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது எஸ்டோனியா.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 33 பந்துகளில் அடிக்கப்பட்டதே அதிவேக சதமாக இருந்துவந்த நிலையில், 27 பந்தில் உடைக்கவே முடியாது என கூறுமளவு ஒரு பிரம்மாண்டத்தை சாஹில் சவுகான் நிகழ்த்தியுள்ளார்.