SA20 - இரண்டாவது சீசன்   Twitter
T20

SA20: ஜனவரி 10 தொடங்குகிறது இரண்டாவது சீசன்; நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னணி வீரர்கள் இல்லை!

தென்னாப்பிரிக்காவின் டி20 லீகான SA20 தொடருக்கான ஏலம் செப்டம்பர் 27ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Viyan

தென்னாப்பிரிக்காவின் டி20 லீகான SA20 தொடரின் இரண்டாவது சீசன் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது. ஒரு மாதம் நடக்கும் இந்தத் தொடரின் இறுதிப்போட்டி பிப்ரவரி 10ம் தேதி நடக்க இருக்கிறது. இந்தத் தொடர் நடக்கும் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருப்பதால், அந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் யாரும் விளையாடமாட்டார்கள் என்று தெரிகிறது.

தென்னாப்பிரிக்க -நியூசிலாந்து

SA20 - தென்னாப்பிரிக்காவின் குலோபல் லீக் டி20 தொடர் வெற்றியடையாததால், அதற்கு மாற்றாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்தால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதல் சீசன் இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் முதல் சீசனை வென்றது எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி. இறுதிப் போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்.

இந்நிலையில் இரண்டாவது சீசன் அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் செவ்வாய்க்கிழமை (நேற்று) அறிவித்தது. முதல் சீசனைப் போலவே இந்த சீசனும் ஜனவரி 10ம் தேதியே தொடங்குகிறது.

செயின்ட் ஜார்ஜஸ் பார்க் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. லீக் சுற்று பிப்ரவரி 4ம் தேதி முடிவுக்கு வரும். ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு, பிளே ஆப் சுற்று பிப்ரவரி 6 தொடங்குகிறது. கடந்த ஆண்டு வழக்கமான அரையிறுதியாகவே இத்தொடர் நடந்தது. இரண்டு அரையிறுதிகளில் வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ஆனால் இம்முறை ஐபிஎல் போல பிளே ஆஃப் சுற்று மாற்றப்பட்டிருக்கிறது. இரண்டு குவாலிஃபயர் போட்டிகளும், ஒரு எலிமினேட்டர் போட்டியும் நடக்கும்.

செயின்ட் ஜார்ஜஸ் பார்க் மைதானம்

கடந்த சீசன் இருந்ததிலிருந்து, அடுத்த சீசனில் இன்னொரு மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. முதல் SA20 சீசனின்போது தென்னாப்பிரிக்க தேசிய அணி இங்கிலாந்துக்கு எதிரான வைட் பால் தொடரில் பங்கேற்றது. அதனால் சுமார் ஒரு வார காலம் இடைவெளி விடப்பட்டு மறுபடியும் தொடங்கியது SA20 தொடர். இம்முறையும் அதுபோல ஒரு தொடர் இருக்கிறது. பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயண அட்டவணை

முதல் டெஸ்ட் - பிப்ரவரி 4-8 டாரங்கா

இரண்டாவது டெஸ்ட் - பிப்ரவரி 13-17 ஹாமில்டன்

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் SA20 அட்டவணைப்படி இந்தத் தொடரில் பங்கேற்றால், எப்படியும் தென்னாப்பிரிக்க வீரர்கள் SA20 தொடரின் கடைசி 2 வாரங்களை தவறவிட நேரிடும். அதனால், இந்தத் தொடரைத் தள்ளிவைக்க வாய்ப்பிருக்கிறதா என நியூசிலாந்து கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டுப்பார்த்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம். ஆனால் அந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 தொடர்களில் பங்கேற்கவிருப்பதால் அதை நிராகரித்தது நியூசிலாந்து. முன்னணி வீரர்கள் இல்லாமல் இருந்தால் SA20 தொடரின் மவுசு குறைந்துவிடும் என்பதால், அந்த தொடருக்கு முன்னணி வீரர்கள் இல்லாத அணியையே தென்னாப்பிரிக்க நிர்வாகம் அனுப்பும் என்று கூறப்படுகிறது.

SA20 தொடரின் இரண்டாவது சீசனுக்கான ஏலம் செப்டம்பர் 27ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்கள் முன்பு ஒவ்வொரு அணியும் தாங்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.

ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணி

சூப்பர் கிங்ஸ் குழுமத்தின் ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசன் தங்களுக்காக அசத்திய ஃபாஃப் டுப்ளெஸி, ஜெரால்ட் கொட்சியா ஆகியோரை மீண்டும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு அணியில் இணையாமல் ILT20 தொடரை தேர்வு செய்த CSK ஆல்ரவுண்டர் மொயீன் அலி இம்முறை SA20 அரங்கிலும் சூப்பர் கிங்ஸுக்காக ஆடப்போகிறார். இவர்கள் போக டேவிட் வீஸா, சாம் குக், ஜாஹிர் கான் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது JSK. இவர்களுள் டேவிட் வீஸா மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.