தோனி - ருதுராஜ் PT
T20

தோனியின் வெளியேற்றம் உறுதி? தலைவன் வழியில் "கேப்டன்சி + விக்கெட் கீப்பிங்” செய்யும் ருதுராஜ்! #viral

மகாராஷ்டிரா பிரீமியர் லீக் போட்டியில் விக்கெட் கீப்பராக மாறிய ஐபிஎல் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், பந்துவீச்சாளர்களின் ஒயிடு பந்துகளை தடுத்து நிறுத்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Rishan Vengai

5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கேப்டன் மகேந்திர சிங் தோனி, தன்னுடைய கேப்டன்சி பயணத்தை 2023 ஐபிஎல் தொடரோடு முடித்துக்கொண்டார்.

2024 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நூலிழையில் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து பட்டியலில் 5வது இடம் பிடித்தது. தொடர் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்த மகேந்திர சிங் தோனி, பேட்டிங்கில் குறைவான பந்துகளையே எதிர்கொள்ளும் வகையில் களமிறங்கினார்.

dhoni

இந்நிலையில், கேப்டன்சியை ருதுராஜுக்கு கைமாற்றிய தோனி, 2025 ஐபிஎல் தொடரில் தன்னுடைய ஐபிஎல் பயணத்தையும் முடித்துக்கொள்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதை உணர்ந்துள்ள தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்கவாட், தல தோனி வழியில் விக்கெட் கீப்பிங் + கேப்டன்சி இரண்டையும் செய்ய திட்டமிட்டு மகாராஷ்டிரா பிரீமியர் லீக் போட்டியில் கீப்பிங் கிளவுஸை கையில் எடுத்துள்ளார்.

விக்கெட் கீப்பிங் செய்யும் ருதுராஜ் கெய்க்வாட்!

2024 மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. அதில் புனேரி பாப்பா அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட், அந்த அணியை கேப்டனாகவும் வழிநடத்திவருகிறார்.

இந்நிலையில், 28வது மகாராஷ்டிரா பிரீமியர் லீக் போட்டியில் புனேரி பாப்பா மற்றும் சத்ரபதி சம்பாஜி கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அதில் டாஸ் வென்ற புனேரி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கில் கையில் கீப்பிங் கிளவுஸை அணியும் பெரிய முடிவுக்கு சென்றார்.

புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் போட்டியில், புனேரி பாப்பாவை கேப்டனாக வழிநடத்தும் போது​ கெய்க்வாட் ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று விக்கெட் கீப்பிங் செய்தார். அந்தவீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கையில் கிளவுஸ் உடன் சில பந்துகளை பிடிப்பதில் தவறவிட்டாலும், பவுலர்கள் வீசிய ஒயிடு பந்துகளை தடுத்த ருதுராஜ் தல தோனியின் வழியை கையிலெடுத்துள்ளார்.