2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஜூலை 27 முதல் ஆகஸ்டு 7ம் வரை, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.
இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இரு அணிகளுக்கும் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணிக்கு சனந்த் ஜெயசூர்யா இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ODI தொடருக்கு இந்திய அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ரானா போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.
டி20 தொடருக்கு இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமது சிராஜ்.
இந்நிலையில், இரு தொடர்களிலும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா இடம்பெறாதது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரோகித், விராட் போன்ற சீனியர் வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் அணிக்கு திரும்பியதால் தொடக்க மற்றும் ஒன் டவுனில் விளையாடும் ருதுராஜிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று எடுத்துக் கொண்டாலும் டி20 தொடரிலும் ருதுராஜ் பெயர் இல்லாதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 போட்டிகளில் ருதுராஜ் மற்றும் சுப்மன்கில்லின் செயல்பாடுகளை ஒப்பிட்டு விவாதித்து வருகின்றனர். இது அப்பட்டமான அரசியல் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஜிம்பாப்வே தொடரில் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தனர். ஜிம்பாப்வே உடனான தொடரில் கெய்க்வாட் தான் விளையாடிய 3 இன்னிங்ஸ்களில் 7, 77*, 49 ரன்களை எடுத்திருந்தார்.
அதுமட்டுமின்றி கெய்க்வாட் தனது கடைசி 7 டி20 இன்னிங்ஸில் 160 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 71 சராசரியாக ஆடிவருவதும் குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் கூட ருதுராஜ் 8 ஆவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் சூர்யகுமார் 2 ஆவது இடத்திலும், ஜெய்ஸ்வால் 6 ஆவது இடத்திலும் உள்ளனர். ருதுராஜுக்கு பின் இருக்கும் இந்திய வீரர் சுப்மன் கில். கிட்டத்தட்ட 37 ஆவது இடத்தில் உள்ளார்.
அபிஷேக் சர்மாவோ அதிரடியாக சதத்தினையும் பதிவு செய்திருந்தார். அபிஷேக்கின் பவர் ஹிட்டங் திறன் இந்திய அணிக்கு அதிவேகமாக ரன்களைக் கொண்டுவந்தது. அதுமட்டுமின்றி இரு தொடர்களில் ரியான் பராங் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாகவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.