IMPACT PLAYER RULE x
T20

‘11பேர் ஆடுவதுதான் கிரிக்கெட்; IMPACT PLAYER விதியை நீக்குங்கள்’ - ரோகித் முதல் முகேஷ் வரை கோரிக்கை!

டி20 கிரிக்கெட்டில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் ஆடலாம் என்ற இம்பேக்ட் விதிமுறையால் பந்துவீச்சாளர்கள் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

Rishan Vengai

20 ஓவர்கள் கொண்ட டி20 வடிவ கிரிக்கெட் என்பது 2007-ல் தொடங்கப்பட்டபோதே, அது பந்துவீச்சாளர்களின் உரிமையை பறிக்கிறது என்றும், இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் பெரிதாக பாதிக்கப்படும் என்ற அபாய குரல் எழுப்பப்பட்டது.

ஆனால் அதிரடியான பேட்டிங், எதிர்பாராத விதத்தில் மாறும் கடைசிநேர த்ரில்லர் போட்டிகள் மற்றும் விரைவான முடிவுகள் என டி20 கிரிக்கெட், ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது.

IMPACT PLAYER RULE

என்னதான் அதிகப்படியான வரவேற்பை பெற்றிருந்தாலும், பந்துவீச்சாளர்களை டாமினேட் செய்துவரும் டி20 வடிவமானது பேட்ஸ்மேன்களின் ஆதிக்க வடிவமாக மாறிவருகிறது. அதிலும் இம்பேக்ட் வீரர் விதிமுறை என்ற புதிய ரூல், ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனதில் இருந்து, 12 பேட்ஸ்மேன்கள் விளையாடும் நிலை எட்டியுள்ளதால் வீரர்கள் விக்கெட் விழுமோ என்ற அழுத்தம் இல்லாமல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துவருகின்றனர். இதனால் பந்துவீச்சாளர்களிடையே அழுத்தமும், பயமும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

’Impact Player’ விதிமுறை தேவையா?

ரோகித் சர்மா - இந்திய கேப்டன் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயர் விதிமுறை எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறியதிலிருந்து, அதன்மீதான கருத்துகளை பல முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போது விளையாடிவரும் வீரர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

rohit sharma

இம்பேக்ட் பிளேயர் விதிமுறை குறித்து பேசியிருந்த ரோகித் சர்மா, “நான் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கு பெரிய ரசிகன் இல்லை, இது ஆல்ரவுண்டர்களின் தேவையை தடுத்து நிறுத்துகிறது. துபே, வாசிங்டன் போன்ற வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டு திறமையையும் வெளிக்காட்ட முடியாமல் இருந்து வருகின்றனர். கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாடுவது 12 பேர் அல்ல” என்று கூறினார்.

siraj

முகமது சிராஜ் - இம்பேக்ட் விதிமுறை குறித்து பேசியிருக்கும் முகமது சிராஜ், “தயவுசெய்து IMPACT PLAYER விதிமுறையை அகற்றுங்கள், விக்கெட்டுகள் ஏற்கெனவே தட்டையாக உள்ளன. அதனால் பந்துவீச்சாளர்களுக்கு எதுவும் இல்லாமல் இருக்கிறது, இதற்கிடையில் தற்போது இம்பேக்ட் விதிமுறையால் பேட்டர்கள் எல்லாவிதமாகவும் வெளியே வருகிறார்கள்" என்று கூறினார்.

Mukesh Kumar

முகேஷ் குமார் - ஆடுகளத்தை மாற்றுங்கள் அல்லது இம்பேக்ட் விதியை நீக்குங்கள் என கூறியிருக்கும் முகேஷ் குமார், “சர்வதேச அளவில் 12 வீரர்கள் விளையாடுவதில்லை என்றால், ஐபிஎல்லில் மட்டும் எதற்காக விளையாட வேண்டும்? 12 வீரர்களுடன் ஒரு அணி செல்லும்போது, ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகள் சரிந்தாலும், அடுத்து களத்திற்கு வரும் வீரர் அவுட்டாகிவிடுவோம், அணியை நிலைப்படுத்த நிலைத்து நின்று ஆடவேண்டும் என்ற எந்தவிதமான பயமும் இல்லாமல் விளையாடுகிறார்கள். இந்த சூழலில் ஆடுகளத்தின் தன்மையை மாற்ற வேண்டும் அல்லது 12 வீரர்களை விளையாட அனுமதிக்கக்கூடாது" என்று முகேஷ் குமார் ESPNcricinfo விடம் கூறியுள்ளார்.

Axar Patel

அக்சர் பட்டேல் - ஆல்ரவுண்டர்களின் தேவையை இம்பேக்ட் விதி குறைத்து வருவதாக கூறிய அக்சர் பட்டேல், “நான் இம்பேக்ட் பிளேயர் விதியின் பெரிய ரசிகன் அல்ல. ஏனென்றால் ஒரு ஆல்-ரவுண்டராக, இந்த விதி முறையானது பேட்ஸ்மேன் அல்லது பவுலருக்கு மற்றுமே பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியும். ஒரு ஆல்ரவுண்டரை அணிக்குள் எடுத்துவரும் ஒரு வாய்ப்பை எப்போதும் இம்பேக்ட் விதிமுறை ஏற்படுத்தாது” என்று கூறியுள்ளார்.

’Impact Player’ விதிமுறையால் என்ன நன்மை?

இம்பேக்ட் பிளேயர் விதிமுறையில் இருக்கும் நன்மை குறித்து பேசிய பத்ரிநாத், “இம்பேக்ட் விதிமுறையால மிகப்பெரிய பாசிட்டிவ் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இதனால் தான் அஷுதோஸ் சர்மா, ரகுவன்சி, மயங்க் யாதவ் போன்ற வீரர்கள் வெளிச்சத்திற்கு வருகின்றனர்.

11 வீரர்கள் விளையாடும் இடத்தில் கூடுதலாக ஒரு வீரர் வந்து, தன்னுடைய திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு வாய்ப்பாகவே இந்த விதிமுறையை பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.