rohit sharma cricinfo
T20

கம்மின்ஸுக்கு எதிராக 100மீ சிக்ஸ்.. ஸ்டார்க் ஓவரில் 4 சிக்சர்கள்! ஆஸியை அலறவிட்ட ரோகித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2024 டி20 உலகக்கோப்பை போட்டியில் 19 பந்தில் அரைசதமடித்து மிரட்டியுள்ளார் ரோகித் சர்மா.

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணி, வெல்லவேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணியுடன் விளையாடிவருகிறது.

போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஸ், “அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும், அதற்கு சரியான அணி இந்தியாதான்” என்று எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தார்.

mitchell marsh

ஆனால் மிட்செல் மார்ஸின் வார்த்தைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய கேப்டன் ரோகித்சர்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி மிரட்டினார்.

19 பந்தில் அரைசதம்.. 100 மீட்டர் இடைவெளிக்கு பறந்த சிக்சர்!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் 2வது ஓவரிலே விராட் கோலி 0 ரன்னில் வெளியேறினார். 6 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இந்தியா இழந்தாலும் எதிர்முனையில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி என வானவேடிக்கை காட்டினார். ஒரு ஒயிட் உடன் அந்த ஓவரில் மட்டும் 29 ரன்கள் எடுக்கப்பட்டது.

அதற்குபிறகு பந்துவீச வந்த பாட் கம்மின்ஸை முட்டிபோட்டு 100மீட்டர் சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்தார். அந்த சிக்ஸர் விளாஅலில் மைதானத்தின் மேற்கூரை மேல் பந்து விழுந்தது. 19 பந்துகளில் அரைசதம் அடித்தார் ஹிட்மேன்.

அரைசதம் அடித்த பிறகும் அதிரடியை நிறுத்தவில்லை. தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் டீம் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹிட்மேன் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 92 ரன்களடித்து வெளியேறினார். ஸ்டார்க் ஓவரில் க்ளீன் போல் ஆனார்.

ரோகித் சர்மாவின் அதிரடியால் 12 ஓவர் முடிவில் 132 ரன்களை கடந்தது இந்தியா. பின்னர், சூர்யகுமார் மற்றும் ஷிவம் துபே அதிரடி காட்டி விளையாடினர். இதனால் ரன் வேகம் குறையவில்லை. சூர்ய குமார் யாதவ் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரே போட்டியில் ரோகித் படைத்த சாதனைகள்!

*அதிவேக அரைசதம்: நடப்பு 2024 டி20 உலகக்கோப்பையில் 19 பந்தில் அரைசதமடித்து அசத்தியுள்ளார்.

*200 சிக்சர்கள்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரராக மாறினார்.

*19000 ரன்கள் : சர்வதேச கிரிக்கெட்டில் 19000 ரன்களை கடந்துள்ளார் ரோகித் சர்மா

*அதிகபட்ச ரன்: 92 ரன்களை கடந்திருக்கும் ரோகித் சர்மா டி20உலகக்கோப்பையில் தன்னுடைய அதிகபட்ச ரன்னை பதிவுசெய்துள்ளார்.