பரபரப்பாக நடைபெற்றுவரும் நடப்பு 2024 ஐபிஎல் தொடர் மே 26ம் தேதி முடிவடையும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பையானது ஜூன் 2ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்கான இந்திய அணி வரும் ஏப்ரல் இறுதிவாரம் அல்லது மே முதல்வாரம் தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபில் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்பதால், இளம்வீரர்கள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2022 டி20 உலகக்கோப்பை, 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 3 உலகக்கோப்பைகளை தவறவிட்டிருக்கும் இந்திய அணி, 2024 டி20 உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் தயாராகிவருகிறது.
2013-ம் ஆண்டுக்கு பிறகு 11 வருடங்களாக உலகக்கோப்பை வெல்லாமல் தவித்துவரும் இந்திய அணிக்கு ஒரே பிரச்னையாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இடம் இருந்துவருகிறது. அதற்கான தேடலில் பல வீரர்களை களமிறக்கினாலும், நிரந்தரமான ஒருவீரரை இந்திய அணி இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையில் அதற்கான இடத்திற்கு ”இஷான் கிஷன், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் வர்மா, ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக்” முதலிய 6 விக்கெட் வீரர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர். இதில் எந்தவீரரை தேந்தெடுத்து எப்படி இந்திய தேர்வுக்குழு சரியான இந்திய லெவனை அறிவிக்கபோகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் முன்னாள் ஐபிஎல் டீம்மேட் கில்கிறிஸ்ட், டி20 உலகக்கோப்பையில் யார் அந்த இரண்டு “விக்கெட் கீப்பர்” என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதலளித்த ரோகித் சர்மா, ”கடந்த இரண்டு இரவுகளில் தினேஷ் கார்த்திக் அபாரமாக பேட்டிங் செய்வதை பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டேன். அதற்கு முன்பு தோனியும் நான்கு பந்துகளில் மட்டுமே விளையாட வந்து, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதுதான் டி20 போட்டியில் கிடைக்கவேண்டிய வித்தியாசம். எம்எஸ் அமெரிக்காவுக்கு வந்தாலும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுமாறு அவரை சமாதானப்படுத்துவது கடினமானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் தினேஷ் கார்த்திக்கை சாமதனப்படுத்துவது கடினமாக இருக்காது என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு ஆல்ரவுண்டர் வீரர்கள் குறித்த முக்கியத்துவம் குறித்து பேசிய ரோகித், ஐபிஎல்லில் இருக்கும் “இம்பாக்ட் வீரர்” விதிமுறையை விமர்சித்தார். அதுகுறித்து பேசிய அவர், “உண்மையைச் சொல்லவேண்டுமானால் நான் இம்பேக்ட் வீரர் என்ற விதிமுறையின் ரசிகன் இல்லை. இது ஆல் ரவுண்டர்களின் திறமையை பின்னுக்குத் தள்ளுகிறது. சிவம் துபே, வாசிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் பந்துவீசாதது நமக்கு நல்லதல்ல” என்று பேசியிருந்தார்.
ரோகித் சர்மாவின் இந்த பதில்களுக்கு பிறகு, ”அப்போ உன் நினைப்பு பூரா துபே, தினேஷ் கார்த்திக் மீதுதான் இருக்கு” என்று விமர்சித்து, ஹர்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சனின் இருப்பை உறுதிசெய்யவேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.